Related posts

Breaking News

Once Upon a Time in Hollywood - Review

Once upon a time in Hollywood


குவண்டின் டாரண்டினோவின் படங்களை நான் பெரிதாக பார்த்ததில்லை. 2012ல் Django Unchained என்றொரு படம் மட்டும் பார்த்தாக ஞாபகம். என்னை பொறுத்தவரை, Django Unchained, கண்டிப்பாக ஒரு நல்ல படம், ஆனால் என்னை பெரிதாக கவரவில்லை. நிறைய காலம் கழித்து, Quentin இயக்கிய Once a Upon a Time in Hollywood என்ற திரைப்படத்தை பாரக்கும் வாய்ப்பு இன்று கிடைத்தது. இந்த கட்டுரையில் அந்த படத்தில் நான் கண்ட குறை நிறைகளை பற்றி அலசலாம். கட்டுரையில் ஸ்பாய்லர்கள் உள்ளது, ஆனால் அவை படம் பார்க்கும் அனுபவத்தை மேலும் அருமையானதாக்கும்.

கதையம்சம்

படத்தின் கதையானது ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாம். 1969ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி, ஷரோன் டேன் என்ற நடிகை எட்டுமாத கர்ப்பிணியாக இருக்கும் போது, அவளது கணவன் வெளியூர் சென்று விடுகிறான். அங்கு அவளுக்கு துணையாக அவளுடைய நண்பர்கள் நான்கு பேர் அவளோடு தங்குகின்றனர். அன்றிரவு அவளது வீட்டுக்குள் நுழையும் மேன்சன் ஃபேமிலி (Mansion Family) என்ற குழுவினர், ஷரோனோடு சேர்த்து அவளது நான்கு நண்பர்களையும் கொன்று விடுகின்றனர். இந்த சம்பவத்தை தழுவிதான் கதை எடுக்கப்பட்டுள்ளது. ஷரோனின் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் டாரண்டினோவின் கதாபாத்திரங்கள் இரண்டு பேர் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும், இதுதான் கதைக்கான கான்சப்ட்.

ஹைலைட்

முதலில், படத்தின் செட் வேர்க், அதி அற்புதமாக இருந்தது. தமிழில் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் வெற்றி மாறனின் படங்களை சொல்லலாம். நான் படத்தை பார்க்கும் போது, 60’களில் இருந்த அமெரிக்க தெருக்களில் பயணிப்பது போன்று இருந்தது. ரோட்டில் செல்லும் கார் முதல் ஏதோ ஒரு மூலையில் உள்ள விளம்பர போர்ட் வரை பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள். கண்டிப்பாக இவர்களது உழைப்பை பாராட்டியே ஆக வேண்டும்.

நடிப்பு

டிகாப்ரியோ எப்போதும் போல அருமையாக நடித்துள்ளார். ரிக் டால்டன் என்ற நடிகனோடு உண்மையாக பழகிப் பார்த்தது போல் இருந்தது, அத்தனை தத்ரூபம் அவரது நடிப்பில். வெற்றிக்காக, அங்கீகாரத்திற்காக ஏங்கும் ஒரு நடிகனாக அவர் வரும் காட்சிகள் மிக ஏதார்தமாக இருந்தன. ஷூட்டிங் நடக்கும் போது, ஒரு ஷாட்டில் சொதப்பியவுடன் கேரவனுக்குள் சென்று தன்னை தானே திட்டிக் கொள்வது, அடுத்த ஷாட்டில் ஒரு சின்னப் பெண், டிகாப்ரியோ நன்றாக நடிப்பதாக கூறியவுடன், அவரது முகத்தில் பரவும் இனம் புரியாத புத்துணர்ச்சியை முகத்தில் காட்டிய விதம், இவை எல்லாமே இவருக்கு கொடுத்த ஒஸ்கார் விருதை மீண்டும் ஞாபகப்படுத்தின. 


பிராட் பிட், உண்மையிலேயே இவரை பாரக்க கவலையாக இருந்தது. காரணம், ஆள் நன்றாக மெலிந்து, முகத்தில் சுருக்கங்கள் அதிகமாகி பார்ப்பதற்கு யாரோ போல இருந்தார் என்பதே. ஆனால், கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். இவரது, கதாபாத்திமும் நன்றாகவே எழுதப்பட்டிருந்தது. இவர் புரூஸ் லீயுடன் சண்டை பிடிப்பது போல ஒரு காட்சி வருகிறது, எத்தனை பேர் நொட் செய்தீர்கள்?

மார்கட் ரொபி, ஷரோனை அழகாக உருவகப்படுத்தியிருந்தார், நடிப்பதற்கான ஸ்பேஸ் குறைவாக கொடுக்கப்பட்டிருந்தாலும், அந்த குறைவான ஸ்பேஸில் கூட அற்புதமாக நடித்திருந்தார். ஆனால் பாருங்கள், மூலக்கதைக்கே மெயினான இந்த கதாபாத்திரம் ஏனோ தானோ என்று எழுதப்பட்டுள்ளது. படத்தின் கிளைமேக்ஸில் இவரை தேடிதான் கொலைக்காரர்கள் வர வேண்டும். ஆகையினால் படத்தில் இந்த கதாபாத்திரம் இருக்க வேண்டும், என்று நினைத்தை கொண்டு எழுதியது போல் இருந்தது.

குறை, நிறைகள்

படத்தின் மிகப் பெரிய மைனஸ், டிகாப்ரியோ மற்றும் பிராட் பிட் ஆகியோர் எந்தளவுக்கு நண்பர்கள் என்பதை அழுத்தந்திருத்தமாக இன்னும் காட்டியிருக்லாம். பிராட்காக காப்ரியோ நிறைய செய்கிறார்தான். ஆனால், அவர்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் மொமண்ட்டுகள் இல்லையே. அதாவது, உங்கள் குடும்பத்திற்காக நீங்கள் உழைத்தால் மட்டும் போதாது அல்லவா? அவர்களோடு நேரத்தை கழிக்க வேண்டும், நிறைய நல்ல தருணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் அல்லவா? அப்படியான விஷயங்கள் இதில் கம்மி, இருப்பவையும் அழுத்தமாக இல்லை. 

அடுத்து, இத்த படத்தின் ஒவ்வொரு சீனுமே ஒரு தனி குறும்படம் போல இருந்தது. அத்தனை நீளமான காட்சிகள்+ ஒவ்வொரு காட்சியிலும் நடக்கும் சம்பவங்கள். ஆக மிக மிக பொறுமையாகதான் நீங்கள் படத்தை பாரக்க வேண்டும். எனக்கு ஒவ்வொரு காட்சியையும் பொறுமையாக ரசித்து பார்க்க முடிந்தது, எல்லோராலும் இது முடியுமா என்பது சந்தேகமே. படமும் இரேண்டே முக்கால் மணி நேரம் ஓடுகிறது, மூன்று மணி நேர தமிழ் சினிமா பார்த்து பழகிய நமக்கு இதெல்லாம் ஜுஜூபி, ஆனால் இரண்டே மணி நேர படங்களையே, “நீளம் அதிகம், அகலம் அதிகம்” என சொல்லும் தமிழ்நாட்டில் வாழும் வெள்ளைகார சிகாமணிகளுக்கு இது நீளமாக இருக்கலாம்.


மேலும் படத்தில் முக்கியமாக காட்ட வேண்டிய, டிகாப்ரியோவின் கேரியரில் ஏற்படும் வளர்ச்சியை, உப்பு சப்பு இல்லாமல் ஃவாஸ்ட் வோர்வர்ட் செய்திருந்தார்கள். யோசித்து பாருங்கள், இதற்கு முன் வந்த தேவையில்லாத சில காட்சிகளுக்கே அதிக நேரம் கொடுத்த இயக்குனர், இந்த முக்கியமான கட்டங்களை கடகட என எடுத்து வைத்திருக்கிறார் என்றால், அவரை என்ன சொல்வது? அதுவும் படத்தின் மிகப்பெரிய காமடியே, அத்தனை காலம் வெளியூரில் இருந்த பிராட் பிட்டும் டிகாப்ரியோவும், எந்த காரணா காரியமும் இல்லாமல் மிகச்சரியாக சம்பவ தினத்தன்று, தங்களுடைய பழைய வீட்டிற்கு திரும்புவதுதான். இதை அழகாக திரைக்கதையோடு கோர்த்து எடுத்திருக்கலாம், அப்படி எடுக்காததால் அந்த சீன் தனியாக துருத்திக் கொண்டு தெரிகிறது. 

அப்புறம், அந்த டிகாப்ரியோவின் மனைவி கதாபாத்திரம் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். இரண்டே காட்சிகள்தான் அம்மணிக்கு, ஒன்றில் விமானத்தில் தூங்குகிறார், இரண்டாவதில் வீட்டில் தூங்குகிறார் பின் எழுந்து வந்து கத்துகிறார். மீண்டும் படம் முடியும் போது கூட இவர் தூங்குவதாக சொல்லிதான் முடிக்கிறார்கள். இந்த “தூக்க” காமடிக்காக மட்டுமே வரும் இந்த கதாபாத்திரத்தினால், எந்த ஒரு விஷயமுமே பார்வையாளர்களுக்கு கடத்தப்படவில்லை.  

ரணகளமான கிளைமேக்ஸ், காமடி+ ஆக்‌ஷன் என ரசனையுடன் எடுக்கப்பட்டிருந்தது ஒரு ஆறுதல்.  பலரும் இந்த படத்தை “ஆஹோ ஓஹோ” என புகழ்கிறார்கள். படத்தில் செட் வேர்க் சூப்பர்தான், முதலில் சாதரணமாகவும் கடைசியில் யோசித்து பார்த்தால் முக்கியமாகவும் தெரியும் விஷயங்கள், குறியீடுகள் படத்தில் உள்ளனதான், ஏன் நடிகர்கள் கூட அற்புதமாக நடித்துள்ளனர்தான்,  ஆனால் ஒட்டு மொத்தமாக படத்தை ஒரு பூச்செண்டாக கருதினால் அதில் பாதி பூக்கள் வாடிப்போயிருக்கின்றன என்பதுதான் என்னுடைய எண்ணம். Django Unchained அளவுக்கு Once Upon a Time in Hollywood படம் இல்லைதான், ஆனால் எனக்கு இந்த படம் பிடித்திருந்தது. மனித மனம்தான் எத்தனை விந்தையானது பாருங்கள். இந்த திரைப்படம் இப்போது Amazon Prime Videoவில் காணக்கிடைகிறது, விருப்பமுள்ளவர்கள் முயன்று பாருங்கள்.






No comments

//]]>