Related posts

Breaking News

Hellboy(நரக மனிதன்)


Hellboy-அறிமுகம்

இரண்டாம் உலக மகாயுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த கால கட்டம்.ஹிட்லருடைய படை(அச்சு நாடுகள்) ஏனைய நேச நாடுகளுடன் உக்கிரமாக போர் புரிந்து கொண்டிருந்தது.நாசிசவாதிகள் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான பாலத்தில் நின்று கொண்டிருந்த வேளை.ஹிட்லர் படை பலத்தை அதிகரிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தான்.அதில் ஒன்றுதான் நரகத்தின் வாயிலை திறந்து அங்குள்ள ஜந்துக்களை தனது எதிரிகள் மீது ஏவிவிடுவது.கிரிகோரி ரஸ்புடின் என்பவனது தலைமையில்தான் இந்த நாச வேலைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.ரஸ்புடின்,தீய சக்திகளினால் அபார ஆற்றல்களை பெற்றவன்.பல தடவைகள் மரணித்து நரகத்திற்கு சென்று மீள வந்தவன்.ஒவ்வொரு முறையும் மரணித்து நரகத்திற்கு செல்லும் போதும் அவனது ஆற்றல் பன் மடங்கு அதிகரிக்கும்.மிக முக்கியமான இன்னொரு விடயம்,இவன் கற்பனை கதாபாத்திரமன்று நிஜமாகவே வாழ்ந்தவன்(வாழ்ந்துக்கொண்டிருப்பவன்?!!).இந்த விடயம் நேசநாடுகளுக்கும் தெரிய வரவே,முன்னால் அமெரிக்க அதிபர்.ரூஸ்வேல்ட் ஆணையின்படி ஒரு சிறிய படையினர் இம்முயற்சியை தடுப்பதற்காக அவ்விடத்திற்கு அனுப்பப்படுகின்றனர்(அப்படையில் துப்பாக்கிகளை விரும்பாத ஒரு இளைஞனும் அடக்கம்).நரகத்தின் நுழைவாயில் திறக்கப்படுகிறது.அவ்வேளையில் அமெரிக்க படையினர் தாக்குதலை மேற்கொள்ள நாசிசர்களின் முயற்சி தடுக்கப்படுகிறது.ரஸ்புடீனும் இறந்து விடுகிறான்.ஆனாலும் நரகத்தின் நுழைவாயில் நீண்ட நேரம் திறந்திருந்ததால் ஏதேனும் ஜந்துக்கள் பூமிக்குள் புகுந்திருக்கலாம் என அச்சமடைகின்றனர்.அவர்கள் எதிர்பார்த்தது போலவே ஒரு ஜந்துவை அவதானிக்கின்றனர்.அது சிறுவன் போன்று காணப்படவே அதனை ஏதொன்றும் செய்யாமல் தங்களுடனேயே அழைத்து வருகின்றனர்.இளைஞனான ட்ரெவர் ஃப்ரட்டன்ஹோமிடம் அதனை வளர்ப்பதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.நாளடைவில் ட்ரெவர் அதன் தந்தையாகவே மாறிப்போய்விடுகிறார்.நரகத்தில் இருந்து வந்த அந்த சிறுவன்தான் ஹெல்பாய்.அதாவது நரகப்பையன்(நல்லா இல்ல) அல்லது நரக மனிதன்(இது கொஞ்சம் ஓகே).1986ல் ஆரம்பிக்கப்பட்ட Darkhorse நிறுவனத்தினரின் இச்சித்திரக்கதைகளை தழுவி இரு Live action திரைப்படங்கள் எடுக்கப்பட்டன.
Hellboy:The movie

ஆண்டுகள் உருண்டோடி விடுகின்றன.ஹெல்பையனுக்கு இப்பொழுது 60 வயது.ஆனாலும் இன்னும் கட்டழகுடன் காணப்படுகிறான்.ட்ரெவர் ஃப்ரட்டன்ஹோம் B.P.R.D(Bureau of Paranormal Research and Defense)எனும் அமைப்பின் முக்கியஸ்தராக பணிபுரிகிறார்.ஹெல்பாய் போன்ற அமானுஷ்ய திறன் கொண்ட வேறு சிலரும் அவ்வாராய்ச்சி மையத்தில் காணப்படுகின்றனர்.அவர்களை பற்றி கூறுமுன் நமது ஹீரோவின் சிறப்பியல்புகளை பற்றி குறிப்பிட வேண்டும்.சிவப்பு நிறத்தாலான பாறை போன்ற தேகம்,சிரசில் உடைக்கப்பட்ட இரு கொம்புகள்,முன்கோபி,அவனது வலக்கை மற்றதை விட பெரியது.

அதேபோல் மீனைப்போன்று நீரில் வாழும் ஆனால் ஒரு சில மனித இயல்புகளையும் கொண்ட ஒரு விதமான(எப்படி சொல்றது...) ஒருவன் காணப்படுகிறான்.மிகவும் நல்லவன்,முதல் பாகத்தில் பியர் குடிக்காதவன்,மிக முக்கியமாக மனிதர்களின் மனதினை படித்தறியும் ஆற்றல் கொண்டவன்.அதுமட்டுமன்றி மூன்றாவதாக ஒரு பெண்ணும் உள்ளாள்.பெயர் லிஸ் ஷேர்மன்.தனது சிந்தனைகள் மூலம் தீயை உருவாக்கும் ஆற்றல் கொண்டவள்.தற்காலிகமாக மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பவள்.இவர்களை கண்காணிப்பதற்காக(Care taker)ஜோன் மைர்ஸ் என்பவனை ட்ரெவர் நியமிக்கிறார்.உலகத்தில்(அமெரிக்காவில் மட்டும்) அமானுஷ்யமான நிகழ்வுகளால் கலகம் ஏற்படும்போது அவற்றை தீர்ப்பதற்காக இம்மாதிரியானவர்களை பயன்படுத்துகிறது B.P.R.D அமைப்பு.

இவ்வாறு இருக்கும் போது,ரஸ்புடின் மீள உயிர்தெழுகிறான்.நரகத்தின் வாயிலை மீண்டும் திறந்து அதன் மூலம் பூமியை தனது கட்டுக்குள் கொண்டுவருவதே இவனது நோக்கம்.அந்த நரகத்தின் வாயிலை திறப்பதற்காக ரஸ்புடினால் உருவாக்கப்பட்டவனே ஹெல்பாய்.நரக வாயிலை திறப்பதற்கான சாவிதான் அவனது கை.ரஸ்புடினின் முயற்சிகள் என்ன ஆனது,நரக வாயிலை அவன் திறந்தானா,அதை நாயகன் தடுத்தானா என்பதுதான் மையக்கதை.ஆனாலும் இத்திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது வேறு ஒரு விடயம்தான்.ஒரு அழகான முக்கோண காதல்கதை இதில் கையாளப்பட்டுள்ளது.முடிவு இதுதான் என்று முன்னமே தெரிந்திருந்தாலும் ரசிக்கும்படியாக இக்கதை அமைந்துள்ளது.


Hellboy:The Golden Army(2008)

It's Christmas Time.1955.Hellboy,11 வயது நிரம்பிய சிறுவன்.தந்தையின் அரவணைப்புடன் வாழ்கிறான்.இனிப்பு பண்டங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியன அவனுக்கு பிடித்தமான இரு விடயங்கள்.ட்ரெவர்,அவன் தூங்குவதற்காக கதைகளை கூறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.அன்றும் அதேபோன்று ஒரு கதையை கூறுகிறார்.
"முன்னொரு காலத்தில்,மாயஜால மனிதர்களுக்கும் சாதரண மனிதர்களுக்கும் போர் நடைபெற்றது.மானுடர்கள் வென்றனர்.தோல்வியுற்ற மாயமனிதர்களினுடைய அரசன் மனிதர்களை போரில் வெல்லவதற்காக ஒரு குள்ளனின் உதவியுடன் அளப்பரிய ஆற்றல்கள் வாய்ந்த,அழியாத,பசி எடுக்காத,கருணையற்ற பல அரக்கர்களை தோற்றுவிக்கிறான்.இவர்களை கட்டுப்படுத்துவதற்காக ஒரு கீரிடத்தையும் உருவாக்குகிறான்.அசுர மனிதர்களை கொண்டு போரிலும் வெற்றி பெறுகிறான்.ஆனால் மனிதர்கள் கொத்து கொத்தாக இறந்ததை எண்ணி வருத்தப்படும் அவன் மனிதர்களுடன் ஒரு உடன்படிக்கையை மேற்கொள்கிறான்.அதன்படி அசுரர்களை கட்டுபடுத்தும் கீரிடத்தை மூன்றாக பிரித்து அதனில் ஒன்றை மனிதர்களிடமும் மற்ற இரண்டை தானும் வைத்து கொள்கிறான்.மாய மனிதர்கள் பாதள உலகிற்குள் வாழ்கின்றனர்.அதேவேளை தனது எஜமானரின் அழைப்பிற்காக பாதளத்தில் அரக்கர்களும் காத்துக்கொண்டுள்ளனர்."இதுதான் அவர் கூறும் கதை.படத்தின் கதையும் இதுதான்.அந்த அரசனின் புதல்வனான இளவரசன் நுவாடா கீரிடத்தின் மூன்று பகுதிகளை இணைத்து சாமானியர்களை அழிக்க முடிவெடுக்கிறான்.அவனது முயற்சி பலித்ததா,ஹெல்பாய் மற்றும் அவனது குழுவினர் அத்திட்டத்தை முறியடித்தனரா என்பதே மீதிக்கதை.

கில்லர்மோ எனும் தேவதை கதை விரும்பிதான் படத்தை இயக்கியுள்ளார்.வழக்கமான ஆக்ஷன் படங்களை விட கொஞ்சம் பட்ஜெட் குறைவு என்பது பார்த்தவுடன் தெரிகிறது.எனினும் படத்தை பட்ஜெட்டிற்கேற்ற பிரமாண்டமாய் எடுத்துள்ளனர்.இரண்டாம் பாகத்திலும் பிரதான ட்ரெக்கிற்கு அடுத்ததாய் காதல்கதைதான் எழுத்தப்பட்டுள்ளது.ஓரளவு நன்றாகவே வந்துள்ளது.இரு திரைப்படங்களிலும் விதவிதமான ஜந்துக்கள் உலாவருகின்றன.சிறு வயது முதலே ஜந்துக்களை விட குரூர முகங்களை மனதில் கொண்ட பல நபர்களை சந்தித்த காரணத்தால் அவைகள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.ஈவில் டெத்,சினிஸ்டர் போன்ற படங்களும் கூட கொட்டாவியைத்தான் வரவழைத்தன(யாவரும் நலம் பார்த்துவிட்டு உறங்காமல் விழித்திருந்தது தனிக்கதை).ஆக மெதுவான,ரம்மியமான,கொஞ்சம் ஜிகினா வேலைகள் செய்யப்பட்ட ஆக்ஷன் படங்களை விரும்புவர்கள் பார்த்து ரசிக்கலாம்(நிச்சயம் ரசிக்கலாம்)..!

4 comments

Parani from Bangalore said...

Good one!!!

Kavind Jeeva said...

Thank you..!

jscjohny said...

நல்ல முயற்சி கவிந்த் வாழ்த்துகள்.

Kavind Jeeva said...

நன்றி..!👍

//]]>