Related posts

Breaking News

Mafia: Chapter 1 Review

Mafia : Chapter 1 (Tamil Movie) Review



முதலில் இது ஒரு ஆக்‌ஷன் படமே இல்லை. இது த்ரில்லர் வகைப்படம், அதுவும் ரொம்ம்ம்ம்ம்ப ஸ்லோவான த்ரில்லர் திரைப்படம். கார்த்திக் நரேனின் கதை என்பதால் நன்றாக இருக்கும் என்றும் Arun Vijay, Prasanna ஆகியோர் தொடர்ந்து நல்ல திரைக்கதைகளை தேர்ந்தெடுந்து நடிப்பதாலும், இது ஒரு ஆக்‌ஷன் படம் என்பது போல விளம்பரம் செய்யப்பட்டதாலும், இப்படத்தை First day First Show பார்க்கச் சென்றேன். படம் எப்படி இருந்தது, விரிவாக பார்ப்போம். 

அருண் விஜய், மாஃபியா கும்பலொன்றின் பெரிய டானாகிய பிரசன்னாவை பிடிக்க வேண்டும், இதுதான் கதைக்கரு. ஒரு Cat-Mouse கதைக்கு இந்த கருவே போதும், இதைதான் தனி ஒருவனிலும் நல்ல திரைக்கதையுடன் கொடுத்திருப்பார்கள். ஆனால் இந்த Mafia படத்தில், அந்த திரைக்கதையில்தான் சிக்கலே உள்ளது. மேடு பள்ளமற்ற ஒரே நேரான திரைக்கதை, எந்த ஒரு தனித்துவமும் இல்லாமல் roughவாக எழுதப்பட்ட கதாபாத்திரங்கள், ஆக்‌ஷன் சீன்கள் இல்லை, டிவிஸ்டுகள் இல்லை, ரசிகனை கை தட்ட வைக்கும்படி படத்தின் கிளைமேக்ஸ் வரை எந்த சீனுமே இல்லை என்பதாக போகிறது படம்.




யோசித்து பாருங்கள், கதை என்றால் ஏதாவது நடக்க வேண்டும் அல்லவா? ஹீரோ பிளான் செய்தபடியே எல்லாமே நடக்கிறது. இன்டர்வலில் மட்டும் ஹீரோ பிளான் செய்யாத ஒன்று நடப்பதாக இருக்கும். அது ஹீரோ கதாபாத்திரத்தின் முட்டாள்தனத்தைதான் காட்டுகிறது தவிரவே வில்லனை புத்திசாலியாக காட்டவில்லை. அதாவது, ஹீரோவுடன் மோதுவதற்கு பதில், அவரின் வீட்டில் உள்ளவர்களை கடத்திவிடுவார் வில்லன், பிறகு ஹீரோவை மிரட்டுவார். உண்மையை சொல்லப் போனால் இதுதான் முழுபடமுமே. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஆபத்து என்றால், எந்த ஒரு பாதுகாப்புமே இல்லாமல் அவர்களை தங்க விடுவீர்களா, அதுவும் ஒரு போலீஸ் ஆபிசர், அவர்களை தனியாக தங்க விடுவாரா? இதையெல்லாம் யோசிக்க விடாமல் திரைக்கதை கண்ணை மறைத்திருக்க வேண்டும், கண்கட்டி வித்தைதானே சினிமா, ஆனால் திரைக்கதைதான் ரொம்ப வீக் ஆயிற்றே. அதனால், இவையெல்லாம், லைட் போட்டாற் போல  “பளிச்” என கண்களுக்கு தெரிகின்றன. 

இதில், அத்தனை நடிகர்களும் நன்றாக நடித்துள்ளார்கள், ஆனால் கதாபாத்திரங்கள்தான் படு திராபையாக எழுதப்பட்டுள்ளது (“திராபை” இந்த வாரத்தையை யூஸ் செய்து நிறைய நாட்களாயிற்று). ஹீரோ கதாபாத்திரம் வில்லனை பிடிக்க வேண்டும், அது 24 மணித்தியாலமும் வேறு எதையுமே யோசிக்காது. பிரியா பவானி சங்கரும் மற்ற ஃப்ரெண்டாக வருபவரும் ஹீரோ என்ன சொன்னாலும் செய்ய வேண்டும். ஹீரோவின், அப்பா,அம்மா மற்றும் தங்கை யாருக்குமே நல்ல காட்சிகள் இல்லை. வில்லன் பிரசன்னாவும் இப்படிதான், தனக்கு கொடுத்த வசனத்தை ஏற்ற இறக்கம் இல்லாமல் சொல்லிவிட்டு செல்ல வேண்டும்.  சிந்தித்து பாருங்கள், இதில் ஒரு கதாபாத்திரத்தை பற்றியேனும்  உங்களுக்கு ஆர்வம் எழுகிறதா, இல்லைதானே?

ஹீரோ குடும்பத்தோடு, ஹீரோ எந்தளவுக்கு ஆழமான உறவை கொண்டுள்ளார் என்பதை காட்சிகள் வழியாக காட்டவேயில்லை. பிறகு எப்படி, அவர்களை கடத்தியவுடன் ஒரு பச்சதாபமோ அல்லது ஹீரோ இவர்களை காப்பாற்ற வேண்டுமே என்ற பதைபதைப்போ வரும். ஒரு உதாரணம் சொல்கிறேன், முதல்வன் படத்தில் ஒரு காட்சி வரும். மிகுந்த மன உளைச்சலில் இருக்கும் அர்ஜூன் தனது தாய், தந்தையுடன் மனம் விட்டு பேசிக்கொண்டிருப்பார். சாதாரண குடும்பங்களில் நடக்கும் உரையாடல் போலவே அதுவும் இருக்கும். அப்போது திடீரென ஒரு தொலைபேசி அழைப்பு வரும். அதில் அர்ஜூன் வீட்டில் பாம் வைத்திருப்பதாக எதிரில் இருப்பவர் சொல்ல, அதற்கு அர்ஜூன் மறுமொழி சொல்லப்போகும் போதே பாம் வெடித்து விடும். படத்தை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து விடுவார்கள். இதே டெக்னிக்கை “தெறி” படத்தில் அட்லீ சுட்டு சமந்தாவை கொன்றிருப்பார். இப்படி, அந்தந்த கதாபாத்திரங்களுக்கென மொமண்டுகளோ அல்லது கதாபாத்திர பிண்ணனி ஆழமாக இருந்தாலோதான் , அவை இறக்கும் போதோ அல்லது அவைக்கு ஏதேனும் ஆபத்து வரும் போதோ ஹீரோ அவர்களை காப்பாற்ற வேண்டுமே, என பார்வையாளனுக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும் நான் ஹீரோ, ஹீரோ என்று 5,6 தடவைகள் எழுதியதே படிக்க சலிப்பு ஏற்படுத்துகிறது அல்லவா? அப்படியென்றால், படத்தில் ஹீரோ சொல்வதை மட்டுமே மற்ற கதாபாத்திரங்கள் ஓர்டர் மாறாமல் செய்யும் போது எப்படியிருந்திருக்கும், இதில் வில்லன் வேறு மொக்கை. இந்த கதாபாத்திரத்திற்கு பிரசன்னா எதற்கு என்றே தெரியவில்லை. இந்த good vs evil படங்களில் evil மொக்கை என்றால் படமே கவிழ்ந்துவிடும். அதற்கு ஃமாபியா இன்னுமொரு உதாரணம்.

படத்தின் இசை அவ்வளவு நன்றாக இல்லை, அருண் விஜய் அறிமுகமாகும் “ வேடன் வந்தாச்சோ” என்ற பாடலில் வரும் தீம் மியூசிக் மட்டும் ஓக்கே. மற்றபடி, சுத்தமாக வேளையேயில்லை. படத்தின் ஒளித்தொகுப்பு நன்றாக இருந்தது. அதிலும் குறிப்பாக, கிளைமேக்ஸில் வரும் சண்டை காட்சியில் ஒரு இடம் மட்டும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கும். எடிட் பண்ணாத ரஃப் சீன் போல இருக்கும் அந்த காட்சி ஒரு புது முயற்சி. அத்துடன் மேக்கிங்கும் அருமை. 


படத்தின் கிளைமேக்ஸில் இதன் இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் இதுதான் இடைவேளையாக வந்திருக்க வேண்டும். அப்படியிருந்து, இரண்டாம் பாதி அந்த வில்லனுடனான துரத்தலாக இருந்திருந்தால் ஒருவேளை படம் நன்றாக இருந்திருக்கலாம். படம் ஓடுவதே இரண்டு மணி நேரம், கிட்டதட்ட அது முழுக்கவே லேக்காக உள்ளது. இதை ஸ்லோ டீரிட்மண்ட திரைக்கதை என சொல்ல முடியாது, ஏனெனில் படத்தில் ஸ்பீட் என எதுவுமே இல்லை, நமது நாட்டு பொருளாதாரம் போல ஒரே மந்தமாக உள்ளது. அரங்கம் நிறைந்த இக்காட்சியை என் போல பலரும் “உச்”சுக் கொட்டிக்கொண்டுதான் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிலர் பாதியிலேயே எழுந்து போய் விட்டனர். முதல் நாள் காட்சிக்கே இந்த நிலைமை பாருங்கள். மொத்தத்தில் இந்த Mafia: Chapter 1, “உச்”. 



A:P:- இன்று முதல் படங்களுக்கு ரேட்டிங் இடலாம் என நினைக்கிறேன். திரைக்கதை, கதை, கதாபாத்திர வடிவமைப்பு, பட உருவாக்கம் (மேக்கிங்), நடிகர்களின் நடிப்பு, இசை, ஒளித்தொகுப்பு, வசனம் மற்றும் கிரியேட்டிவ் மொமண்ட்ஸ் ஆகிய ஒன்பது விடயங்களையும் கவனித்தே இந்த ரேட்டிங். இதில் திரைக்கதைக்கு 20 புள்ளிகளுக்கும், திரைக்கதை தவிர்ந்த மற்ற எட்டு விடயங்களுக்கும் தலா பத்து புள்ளிகளுக்குமாக புள்ளிகள் வழங்கப்படும். மொத்தமாக நூறுக்கு இத்தனை என வரும் புள்ளிகளை பத்தால் பிரித்து, பத்துக்கு இத்தனை என கடைசி ரேட்டிங் வழங்கப்படும். “எந்த அடிப்படையில் நீ ரேட்டிங் போடுகிறாய்?” என்பவர்களுக்கே இந்த நீண்ட நெடிய விளக்கம்.

மேலும், இதில் ஜேம்ஸ் பாண்ட திரைப்படங்களில் வருவது போல டைட்டில் சாங் ஒன்று வருகிறது, எத்தனை பேர் கவனித்தீர்கள்?

மேலும் இது போன்ற தரமான நல்ல சினிமா விமர்சனங்களை வாசிக்க, பெல் ஐகானை அழுத்துங்கள். முடிந்தால் ஷேர் செய்யுங்கள், உங்களது கருத்துக்களையும் கீழே கமண்ட் செய்யுங்கள். நன்றி!

Mafia: Chapter 1 படத்திற்கு எனது Rating: 4.9 


No comments

//]]>