Related posts

Breaking News

எந்திர இதயம் (Episode 1)


2035 ஜனவரி 1 மாலை 06:00 மணி,

“எதிர்காலத்திற்கு உங்களை வரவேற்கிறேன், உங்க பொன்னான நேரத்த செலவு செஞ்சு, இங்க வந்ததுக்கு எனது நன்றிகள்” என வந்திருந்தவர்களை விழித்து, தனது உரையை ஆரம்பித்தார் ப்ரோவசர்.

ப்ரோவசருக்கு சராசரியாக ஐம்பத்தைந்து வயதிருக்கும், வயதை விட இளமையான தோற்றம் உடையவர், தேவையான அளவு உயரமும், தேவையை விட அதிகமானளவு தொப்பையையும் கொண்டவர். இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூக்குக்கண்ணாடி, தாடைக்கு கீழ் ஃப்ரெஞ்ச் பியர்ட், கையில் தகதகவென மின்னும் ரொலக்ஸ் வாட்ச் என முதலாளித்துவத்தின் ஒட்டு மொத்த உருவமாக இருக்கும் ப்ரோவசர் இன்று தனது புதிய கண்டுபிடிப்பை, முழு உலகுக்கும் அறிமுகம் செய்யப் போகிறார், அதற்கான நிகழ்வில்தான் நாம் இப்போது இருக்கிறோம்.

“நம்ம எல்லாருக்குமே தெரியும், இதயங்குறது நம்ம உடல்ல ரொம்ப முக்கியமான பார்ட், இது நின்டுருச்சுனா, எல்லாமே முடிஞ்சிரும், இல்லையா?. பட் சேட்லி, உங்களுக்கு தெரியுமா? இன்னைக்கும் கூட இதயம் சம்பந்தபட்ட நோய்கள்னால ஒவ்வொரு 30 செக்கண்ட்ஸுக்கும், எங்கேயோ ஒருத்தர் செத்துக்கிட்டுதான் இருக்காரு”

“அண்ட், இதயம் பலவீனமானவங்களால எதையுமே சரியா முழு பலத்தோட செய்ய முடியாது. எக்ஸாம்பளுக்கு வெயிட் தூக்க முடியாது, திடீர்னு வார எமோஷன்ஸ தாங்கிக்க முடியாது, அப்பறம் முக்கியமா, நீங்க ஆச பட்டாலும் கூட, அதிக நேரம் உடல் ரீதியான வேலைகள் செய்ய முடியாது. நான் எத சொல்றேன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நம்புறேன்”

“சரி, அப்ப இதுக்கு என்னதான் தீர்வு?” என அங்கு வந்திருந்த மக்களை பார்த்து கேட்டார் ப்ரோவசர்.

ஒரு சில செக்கன்களுக்கு அங்கே மௌனம் நிலவ, ப்ரோவசரே அந்த மௌனத்தை கலைக்கும் விதமாக தன் கேள்விக்கு பதில் கூறத்தொடங்கினார்.

“என் கண்டுபிடிப்பான மாற்று இதயம்தான் இதற்கு ஒரே தீர்வு, Yes, I’m introducing you, my new invention, The Artificial Heart” என்று உச்ச ஸ்தாயில் சொல்லிக்கொண்டே தனது கையில் இருந்த ரிமோட்டை அழுத்தி தனக்கு பின்னால் இருந்த திரையை திறந்தார். அந்த திரைக்குள் கண்ணாடியிலான பெட்டி ஒன்றிருந்தது. அந்த பெட்டியினுள்ளே, சிறிய ட்ரே ஒன்று வைக்கப்பட்டு, அதன் மேல், மிகச்சரியாக மனித இதயத்தை ஒத்த, இதயம் போன்ற அமைப்பு ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதன் நிறம் மாத்திரம், சிவப்பிற்கு பதிலாக சாம்பல் நிறத்தில் இருந்தது.

அங்கிருந்த மக்களும் சரி, நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பில் பார்த்து கொண்டிருந்தவர்களும் சரி வாயடைத்து போயினர். காரணம், வேறு எவரேனும் இதை சொல்லியிருந்தால்,” சும்மா காசுக்காக டூப்பு விடுறான்” என்றிருப்பர், ஆனால் ப்ரோவசர் ஏற்கனவே அவரின் பல கண்டுபிடிப்புகளுக்காக அரசினாலேயே கௌரவிக்கப்பட்டவர். அத்தோடு, இவரது முன்னைய கண்டுபிடிப்பான, இயந்திர கை, கால் மற்றும் கண் பார்வையற்றவர்களுக்கான செயற்கை ஒளி உணரி என்பன, ஏற்கனவே பல லட்சம் மக்களால் பாவிக்கப்பட்டு வருகிறது. இவரால், பல கம்பனிகளின் பங்கு மதிப்பை, ஒரே இரவில் கூட்டவும் முடியும் குறைக்கவும் முடியும்.உண்மை சொல்லப் போனால், இந்த கண்டுபிடிப்புக்களுக்கான பேட்டர்ன் உரிமையை மட்டுமே விற்று கோடிஸ்வரராக ஆனவர். இனி, இந்த புதிய சாதனத்தை வடிவமைக்கும் உரிமையை வாங்கவும் கூட பல முன்னணி கம்பனிகள் போட்டி போடத்தான் போகின்றன.


“மீடியா நண்பர்களே, ஒவ்வொருத்தரா கைய தூக்கி உங்க கேள்விகளை கேட்கலாம், உங்க கேள்விய வச்சே இத பத்தி நான் உங்களுக்கு விளக்கம் கொடுக்கப் போறேன்” என்றார் ப்ரோவசர்.

சாக்கடை சந்தில் இருக்கும் மூஞ்சூறு போல ஒரு பத்திரிகையாளன் எட்டி பார்த்து, பின் கையை உயர்தினான். பின்னர் பவுசாக எழுந்து தனது கேள்வியை கேட்டான்.  “இது எப்படி வேர்க் ஆகுது ப்ரோவசர்?” என்றான்.

“இது நனோ பார்ட்டிகள்ஸ் மூலமா உருவாக்கப்பட்டிருக்கு, உள்ள சின்ன சின்ன சர்க்யூட்ஸ் இருக்கு. அதோட நம்ம இதயம் போலவே செயல்படும் குழாய்களும் இதில் இருக்கு. நம்ம உடம்புல இருந்து இயற்கையா வார எனர்ஜி மற்றும் நம்ப உடல் வெப்பம், இதையெல்லாம் யூஸ் பண்ணி, தனக்கு தேவையான எனர்ஜிய இதால தானாகவே உருவாக்கிக்கவும் முடியும், நான் இதுக்கு மேல முழுசா, தெளிவா எல்லாத்தையும் சொன்னேன்னா, அப்பறம் இப்பையே இதுக்கு டூப்ளிகேட் அடிக்க தொடங்கிருவாங்க” என்றார் மெலிதாக சிரித்துக்கொண்டே.

“இதன் ஆயுட்காலம் எப்படி?”

“இதுக்கு ஆயுட்காலம் ரொம்ப அதிகம், ஏன்னா? மனித உடல்ல இருக்குற செல்ஸ் எல்லாமே ஒரு கட்டம் வரைக்கும்தான் தன்னை தானே புதுபிக்கும். ஆனா, என்னுடைய இந்த செயற்கை இதயம் நனோ பார்ட்டிகள்ஸ் உதவியினால நீண்ட காலமா வேல செய்யும். மனித இதயத்துல இருக்குற இதயம் செய்ற அதே வேளைய இன்னுமே எவிஷியண்டா, அதிகம் பவர கன்ஸ்யூம் பண்ணாம இதனால செய்ய முடியும்“ என்றார்.

இன்னொரு மீடியாகாரர் அவசரமாக கையை உயர்தி தனது கேள்வியை கேட்கிறார்.  “இதுவரைக்கும் செயற்கையான இதயங்கள் எந்தளவுக்கு யூஸ் ஆகி இருக்கு? இது எந்தளவுக்கு சரி வரும் அப்படினு நினைகுறீங்க?”

ப்ரோவசர் இலேசாக புன்னகைத்தவாறே “செயற்கையான இதயங்குறது, இதுனாள் வரைக்கும் ஒரு சப்போர்ட்டிவ் கம்போணன்டாதான் வேர்க் ஆகியிருக்கு, அதாவது, நம்மோளட இதயம் பலவீனமானா, அதோட பலத்த பேலன்ஸ் பண்ற ஒரு டூலாதான் அது இருந்துருக்கு. ஆனா என்னுடைய இந்த மாற்று இதயம், நமக்கு இயற்கையா கிடைச்ச இதயத்த முழுசா ரிப்ளேஸ் பண்ணும்”

மேலும் தொடர்ந்த ப்ரோவசர் “நான் இந்த ப்ரோஜக்ட முடிச்சவுடன, அரச அனுமதிய முறையா பெற்று, ஒரு சில இருதய நோயளிகளுக்கு, இத பரிசோதனை செய்து பார்த்தேன், அவர்கள் எல்லோருமே, சாவின் விளிம்புல இருந்தவங்க, எங்களுக்கு அனுமதி கிடைக்க அதுவுமே ஒரு ரீசன். இப்ப அவங்க எல்லோருமே குணமாகிடாங்க, ஆரோக்கியமா இருகாங்க, அதுனாலதான் இப்ப இத கமர்ஷியல் பர்போஸுக்காக ரீலிஸ் செய்ய எங்களுக்கு அரச தரப்பில் இருந்து அனுமதி கிடைச்சுச்சு” என்றார்.

“சார், எப்ப ரீலிஸ் பண்ணப்போறீங்க?”

“இதோட விலையை நாங்க இன்னும் நிர்ணயம் செய்யல, செய்ததும் முன்பதிவு ஆரம்பமாகும். ஆரம்பதுல, எங்க சொந்த கம்பனிலயே இத தயாரிக்க போறோம், இருந்தாலும் இதற்கு பேட்டர்ன் ரைட்ஸ் வாங்க நினைக்குற கம்பனிஸ் தராளமா எங்கள அணுகலாம். அதிகமான யூனிட்ஸ் அதிகமான மக்கள சென்றடைஞ்சா நல்லம்தானே“

“ஏன் சேர், இத நீங்க கவர்மண்டோட சேர்ந்து இலவசமாவோ இல்ல ஆகக் குறைஞ்ச விலைக்கோ கொடுக்கலாமே?”

“ஹா ஹா.., இந்த ப்ரோஜக்டுக்காக நாங்க நிறைய உழைச்சிருக்கோம், அதோட எக்கச்சக்கமா கடனும் வாங்கியிருக்கோம், அண்ட் ஏகப்பட்ட ஒன் கோயிங் ப்ரோஜக்ட்ஸ் வேற போயிட்டிருக்கு, இந்த மாதிரியான காரணங்கள்னால நீங்க சொல்றத எங்களால இப்போதைக்கு நடைமுறைபடுத்த முடியாது, வருங்காலங்கள்ல பார்ப்போம்”

“சரி, டைம் ஆகிருச்சு, சோ இந்த நிகழ்ச்சிக்கு வந்த அத்தன பேருக்கும் என் நன்றிகள்” நாம விரைவிலேயே இன்னுமொரு ப்ரஸ் மீட்ல, இன்னும் டீடெய்ல்டா இத பத்தி கதைப்போம், தாங்ஸ்” என்று தன் உரையை அவசரமாக முடித்தார் ப்ரோவசர்.

பின் விரைவாக அங்கிருத்து எழும்பி வாசலை நோக்கி நடந்தார், அவர் வாசலுக்கு வர அவரது காரும் சரியாக வந்து சேர்ந்தது. காரில் ஏறிய ப்ரோவசர், “I want to go home” என சொல்லவும், கார் தன்னிச்சையாக ப்ரோவசரின் வீடு நோக்கி செல்ல தொடங்கியது.

ப்ரோவசரின் மனதில் ஆயிரம் எண்ணங்கள்.   “கேவலம் கெட்ட நாய்கள், கஷ்டப்பட்டு ஒன்ன கண்டுபிடிச்சா, அத இலவசமா கொடுக்கனுமாம், “போயி காசு கொடுத்து வாங்குங்கடா கஞ்ச பரதேசிகளானு” சொல்லியிருக்கனும். இவனுங்களுக்கு எல்லாமே ஓசில வேணும், அதுக்குகாகவா நான் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டேன், உங்களுக்கு ஹார்ட்ட மாத்துனா, நீங்க அதிக நேரம் களைப்பில்லாம வேளை செய்வீங்க, நிறைய வேலை வாங்கலாம், அதனாலதானே, கவர்மண்ட் எங்களுக்கு ஃபுல் சப்போர்ட் கொடுத்துச்சு, ஆனா இந்த மெக்கானிஸத்த நான் செய்ததுக்கான உண்மையான காரணம் எனக்கு மட்டும்தான் தெரியும், என்னோட இந்த மாற்று இதயம் யார்க்குலாம் பொருத்தப்பட்டுச்சோ அவங்க எல்லோரையும் என்னால கண்ட்ரோல் பண்ண முடியும், இதயம் மூலமா நான் அனுப்புற கொமாண்டிங் வேவ்ஸ், அவங்கள எல்லாம் எனக்கு அடிமையா மாத்தும், ஒரு நாள் இந்த உலகமே என்னோட அடிமையாக இருக்கும், அன்னைக்கு நான்தான் இந்த உலகத்துக்கே ராஜா” என்று எண்ணிக்கொண்டே ப்ரோவசர் கூரூரமாக சிரித்தார்.


ஜனவரி 2 காலை 6 மணி,

ப்ரோவசரின் அஸிஸ்டண்ட் ஒருத்தி, வழக்கம் போல ப்ரோவசரின் வீட்டுக்குள்ளேயே இருக்கும் லேப்குள் நுழைகிறாள். அங்கே ப்ரோவசர் மிகவும் அமைதியாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அவரது நெஞ்சுப்பகுதி கிழிக்கப்பட்டு ரத்தம் அறை எங்கும் கொட்டியிருந்ததை அவள் சற்று தாமதமாகதான் கண்டாள். ப்ரோவசரின் இதயம் பிரித்தெடுக்கப்பட்டு, அவரது உள்ளங்கைகளிலேயே வைக்கப்பட்டிருந்தது. அது எப்போதோ தனது துடிப்பை நிறுத்தியிருந்தது. அவள் அலறியடித்தவாறு அந்த இடத்தை விட்டு ஓடிச்சென்றாள். ப்ரோவசரின் கையில இருந்த இதயத்தை சில ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன.

-தொடரும்

Folks, தமிழில் ஒரு நல்ல Science Fiction கதையொன்று வெளியாகி பல மாமாங்கங்களாகி விட்டன. கடைசியாக சுஜாதாவின் நூல்களில்தான் நல்ல விஞ்ஞான புனைகதைகளை படித்ததாக ஞாபகம். தமிழிலும் இப்படியான முயற்சிகள் தொடர வேண்டும் என்பதற்கான முதற்படியே இந்த விஞ்ஞான புனைகதை. இந்த முதலாவது எபிசோட் சிறிய தொரு அறிமுகம் மட்டுமே. இக்கதையில் இன்னும் பல கதாபாத்திரங்கள், பல டிவிஸ்ட்டுகள், பல டிராக்குகள் வரவிருக்கின்றன. உங்களின் ஆதரவும், கருத்துக்களுமே கதையின் தொடர்ச்சியை நிர்ணயிக்கும். வாரத்திற்கு ஒரு எபிசோட் என்ற கணக்கில் எழுதவுள்ளேன். வாரத்திற்கு ஒன்று என்பதை மூன்று நாட்களுக்கு ஒன்று என மாற்றுவதோ அல்லது ஒரேடியாக ஊத்தி மூட செய்யப்போவதோ நீங்கள்தான்.

இப்போதைய வாசகர்களும் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்பதால், ஒவ்வொரு எபிசோடும் இதே அளவில்தான் இருக்கும். இதை இன்னும் நீளமாக்குவதும் சுருக்குவதும் கூட உங்கள் கைகளில்தான் உள்ளது. கதையை வாசித்த பின் உங்கள் கருத்துக்களை கீழே உள்ள Comment boxல் மறக்காமல் பதிவு செய்யுங்கள். நன்றி.

Update : இதில் எழுத்துப் பிழைகள் இருப்பதாக சிலர் சொல்லியிருந்தனர். 99% இதில் அவ்வாறான பிழைகள் இல்லை. இதை, நாம் அன்றாடம் பாவிக்கும் ஆங்கிலம் கலந்த தமிழில்தான் எழுதியுள்ளேன். அப்போதுதான் வாசிக்கும் போது ரியலாக இருக்கும். மேலும், இதில் பல இடங்களில் இந்திய ஆங்கில வார்த்தைகளுக்கு பதிலாக பிரித்தானிய பாணியிலான ஆங்கிலமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அவற்றை வாசிக்கும் போது உங்களுக்கு எழுத்துப் பிழை போல தோன்றலாம், ஆனால் அவைதான் மிகச் சரியான உச்சரிப்பாகும் என்பதை நினைவில் கொண்டு வாசியுங்கள். மேலும் கதாபாத்திரங்கள் கொச்சை தமிழில்தான் கதைப்பார்கள், அதேவேளை விவரணைகள் சீரான தமிழில் இருக்கும். நன்றி!


2 comments:

  1. Nice story line. But contains too many spelling mistakes or the language style somehow doesn't suit the theme. Though you've tried to use the words as spoken by the characters, there are a lot of spelling mistakes. These minor things apart, it's a good effort and the story theme is surely captive. Please continue.

    ReplyDelete
  2. Most of them are not spelling mistakes, these are the original pronunciation, thank you for your feedback, I’ll consider all of it.

    ReplyDelete

//]]>