Related posts

Breaking News

செக்கச் சிவந்த வானம் (2018)



சமீபத்தில் வந்த மணிரத்தினம் அவர்கள் இயக்கிய படங்களில் எதுவுமே என் மனதில் அந்த அளவிற்கு ஒட்டவில்லை.மல்டி ஸ்டார் காஸ்டிங் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை கூட்டியிருந்தாலும் படத்தின் இசைக்கோர்ப்பை கேட்டவுடன் இந்த படமும் சறுக்கிவிடுமோ என எண்ணத்தோன்றியது.காரணம்,மணி அவர்களின் திரைப்படத்தில் இசை என்பது கதையை போன்றே மிக முக்கியமானது.ஆக குறைந்த எதிர்பார்ப்புடன்தான் படத்திற்கு சென்றேன்.

ஆரம்பத்தில் இருந்தே ஒரு சிறிய கதை.இடைவேளை வரை வைத்து இழுக்கிறார்கள்.காட்சியமைப்புக்களும் கதாபாத்திரங்களின் வீச்சை மேம்படுத்துவதாய் இல்லை.மனதில் எதுவுமே பதியவில்லை.மிக செயற்கையான வசனங்கள்,தருக்க பிழைகள் என்றபடியினால் மனது படத்துடன்
இசைவாக மறுக்கிறது.

இடைவேளைக்கு பின்னர் ஒரு பத்து/இருபது நிமிடங்கள் கடந்த பின்னர்தான் கதை அடுத்த கட்டத்திற்கு நகருகிறது.இசையும் கைக்கொடுப்பதாயில்லை.ஏற்கனவே விஜய் சேதுபதியின் படமொன்றில் பயன்படுத்தப்பட்ட தீம் போன்றதொரு தீமும் படத்தில் இருக்கிறது (எது?,என்ன படம்? என கவனித்தவர்கள் கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்).

இத்தனை ஸ்டார்களை வைத்து இதே கதையை நல்ல படமாக எடுத்து இருக்கலாம்.படத்தில் விஜய் சேதுபதியின் ரசூல் பாத்திரம் மட்டும் ஓரளவு கவனிக்க தகுந்ததாக உள்ளது.அத்தனை பேரும் அருமையாக நடித்தும் பாத்திரங்களின் நம்பகத்தன்மை கெடுவதால் ,அவர்களின் உழைப்பு வீணாகி போகிறது.இதில் சில பாத்திரங்களுக்கே என்ன ஆனதே என தெரியாமல் முடித்திருக்கிறார்கள்.

சண்டை காட்சிகள் உட்பட அனைத்துமே மிகுந்த தரத்துடனேயே உள்ளது.மற்றபடி 80களிலேயே க்ளிஷே எனப்பட்ட ஒரு பழைய டெம்பளேட் கதையை எடுத்துக்கொண்டு மூக்கை சுற்றியிருக்கிறார்கள்.

ரோஜா,உயிரே,அலைபாயுதே போன்ற காலத்தால் அழியாத காவியங்களை மணியும் ரஹ்மானும் இணைந்து தந்தார்கள்.இதில் ரஹ்மான் என்பவர் இல்லாவிட்டால் மேற்கூறிய படங்களை அதே அளவு ரசனையுடன் இன்றுவரை ரசித்துக்கொண்டிருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.காற்று வெளியிடை போலவே இதிலும் இருவரும் சறுக்கியுள்ளார்கள்.

ஆம்,மழைக்குருவி பாடல் ஓரளவு நன்றாகதானிருந்தது.உண்மையை சொல்லுங்கள்,ரஹ்மானின் முந்தைய பாடல்கள் போல் தொடக்கம் முதல் முடிவுவரை அந்த பாடலை அணுஅணுவாக ரசிக்க முடிந்ததா?

ஒரு திரைப்படம் நன்றாக இருக்க நல்ல நடிகர்களோ,படத்தொகுப்போ நன்றாக இருந்தால் பத்தாது.படத்தில் டைனோசரை காட்டினாலும் படம் முடியும் வரை அந்த உணர்வை நமக்குள் உண்மையை போலவே நிலைத்திருக்க செய்ய வேண்டும்.அப்போதுதான் ஒரு திரைப்படம் உயிர்பெறும்.

மௌனராகம்,தளபதி,ரோஜா,உயிரே,அலைபாயுதே இந்த ஐந்திலும் இருக்கும் ஜீவநாடி கண்டிப்பாக இந்த படத்தில் கொஞ்சம் கூட இல்லை.ஓகே கண்மணி கூட ஓகே கண்மணி என்னும் அளவுக்கு இருந்தது.

இசை,பாத்திரங்கள் மற்றும் அவர்களுக்கான நடிகர் தேர்வுகள்,வசனங்கள்,காட்சியமைப்புகள் மற்றும் அலட்டலில்லாத திரைக்கதை என்பன இருந்தால்தான் முடிந்தளவு பார்வையாளனை தனது உலகிற்குள் கலைஞன் இழுத்துச் செல்ல இயலும்.அதிலும் என்னை எந்த படத்திலும்  ஈர்ப்பது இசையும் திரைக்கதையும்தான்.பார்ப்போம் இனியாவது ஒரு நல்ல திரைப்படம் இவர்களிடம் இருந்து வருமா என்று...

No comments

//]]>