Related posts

Breaking News

Pete's Dragon-3D:2016 review(பீட்டினுடைய டிராகன்:விமர்சனம்)


"காட்டில் தொலைந்து போன குழந்தை" என்ற ஒன்லைனரை கொண்ட பல படங்கள் ஹாலிவுட்டில் வந்துள்ளன.ஜங்கிள் புக்,டார்சன் வரிசையில் Walt Disneyயால் வெளியிடப்பட்டிருக்கும் இன்னுமொரு காட்டில் தொலைந்து போன குழந்தையின் கதைதான் பீட்'ஸ் டிராகன்.1977ல் இதே பெயரில் வெளிவந்த படத்தைதான் நவீன தொழிற்நுட்ப முலாம் பூசி ரீமேக்கியுள்ளார்கள்.

பீட்,ஐந்தே வயது நிரம்பிய சிறுவன்.தனது பெற்றோருடன் காரில் பயணித்து கொண்டிருக்கிறான்."நான் சந்தித்தவர்களிலேயே மிகவும் தைரியம் வாய்ந்த சிறுவன் நீதான்"என அவனது அம்மா கூறி முடிப்பதற்குள் அவனது கார் விபத்திற்குள்ளாக கண்ணிமைக்கும் பொழுதில் தன் தாய்,தந்தையரை இழக்கிறான் அச்சிறுவன்.காட்டுப்பகுதிக்குள் தனித்து விடப்படும் சிறுவன் பீட்டைச் சுற்றி ஏராளமான ஓநாய்கள் சூழ்ந்து விட ஒரு டிராகன் அவனைக் காப்பாற்றுகிறது.டிராகன் என்றா சொன்னேன்...சரியாக சொல்வதானால் பச்சை நிறத்தாலான,
பருத்த உரோமங்களைக்கொண்ட,தீப்பிழம்பு போன்ற கண்களையுடைய ஆனால் மனிதர்களை போன்று கொடூரமான மனமற்ற ஒரு டிராகன் அவனைக் காப்பாற்றுகிறது.அவனைத் தன்னுடனேயே அழைத்தும் செல்கிறது.

மூன்று வருடங்கள் கழிகின்றன.பீட் அந்த டிராகனை எலியாட் என அழைக்கிறான்.இருவரும் சந்தோஷமாக இயற்கையை ரசித்து வாழ்ந்து வரும் வேளையில்,மனிதர்கள் மரங்களை அறுப்பதற்காக காடுகளை சூரையாடுகின்றனர்.இதன்போது பீட் பற்றியும் அவனது டிராகன் பற்றியும் வெளியுலகிற்கு தெரிய வர,அதன் பின்னர் பீட்டும் அவனது டிராகனும் மனித தலையீட்டை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதே மீதிக்கதை.


முப்பரிமான தொழிற்நுட்பத்தை அருமையாகவே பயன்படுத்தியுள்ளனர். ஆனால் பொதுவாக இங்குள்ள(Jaffna) Ceylon Theatres நிறுவனத்தினரின் திரையரங்குகளில் முப்பரிமாண திரைப்படங்கள் மிகவும் இருட்டான ஒளியமைப்பிலேயே இருக்கும்.இன்றும் அவ்வாறே இருந்தது.இவர்களின் முப்பரிமாண கண்ணாடிகள் கூட சற்றே தரத்தில் குறைந்தவைதான்.
இது சினிமா அரங்கில் நான் உணர்ந்த ஒரு குறைப்பாடு மட்டுமே.

இனி படத்தின் குறை நிறைகளை பார்க்கலாம்.அருமையான கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் படத்தின் மையநாடியான டிராகனை அவர்கள் காட்சிப்படுத்தியுள்ள விதம் என்பன மனதை கொள்ளைக் கொள்கின்றன.பீட்டாக வரும் சிறுவன் Oakes Fegley நன்றாகவே நடித்துள்ளார்.ஓவர் ஆக்டிங் செய்யும் சிறுமியாகட்டும் பல இடங்களில் நடிப்பில் தடுமாறும் கார்ல் ஆகட்டும்  அனைவருமே ஓரளவு நன்றாகவே நடித்துள்ளனர்.கவனிக்க இவர்கள் அனைவருமே நடித்துள்ளனர்.அதாவது நடிக்கின்றனர் என்று அப்பட்டமாக தெரிகிறது.ஆனால் எல்லோரையும் விட துல்லியமாக  நடித்திருப்பது எலியாட் என்ற பச்சை டிராகனே.படக்குழுவினரின் கடின உழைப்பு ஒரு டிராகனை கண்முன் நிறுத்துகிறது.படம் ஒன்றரை மணி நேரமே என்பதால் திரைக்கதை வேகமாக செல்கிறது,அல்லது செல்வது போல் இருக்கிறது.இதே கதையை இன்னும் ஒரு மணிநேரம் நீட்டித்து இருந்தால் திரைக்கதையில் பல சிக்கல்களை இவர்கள் சந்தித்து இருக்கக்கூடும்.ஆங்கில திரைப்படங்கள் குறைந்தது இரண்டு மணிநேர படங்களாகவாவது எடுக்கப்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.படம் தொடங்கியவுடன் முடிந்தது போல் இருந்தது(இடைவேளை வேறு இல்லை).

6,7 பாடல்கள் காற்றோடு வாசமாக நம்மைத் தழுவிச்செல்கின்றன.பிரமாண்டம் என்ற போர்வையை போர்த்தாத எளிமையான இசை இலேசாக மனதைத் தொடத்தான் செய்கிறது.ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் நகைச்சுவைகளும் புன்சிரிப்பை வரவழைக்கும் தருணங்களும் படத்திற்கு மேலும் வலுச் சேர்கிறது.இந்த கோடை விடுமுறைக்காலத்தில் குடும்பத்தோடு பார்ப்பதற்கு ஏற்ற படம்.வன்முறைக்காட்சிகளோ,இரட்டை அர்த்த வசனங்களோ,தேவையற்ற ஆபாசங்களோ அற்ற மென்மையான Feel Good திரைப்படம்தான் இந்த Pete's Dragon..!
No comments

//]]>