Related posts

Breaking News

ரெமோ-சில சிக்கல்கள்


நேற்றைய பொழுதில் எனக்கு நேர்ந்த ஒரு துயர சம்பவத்தைப் பற்றியதுதான் இந்த கட்டுரை.

தமிழ் சினிமாவில் முன்னேறி வரும் ஒரு நடிகர்தான் சிவகார்த்திகேயன்.நடிகர் என்பதை விட கலைஞர் என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்.மிமிக்கிரியில் தட்டுத்தடுமாறி ஆரம்பித்து விஜய் தொலைக்காட்சியில் நாய் வேடம்,குரங்கு வேடம் எல்லாம் போட்டு பின்னர் மெரினாவில் அரைகுறை நடிப்புடன் அறிமுகமாகி இன்று அசைக்க முடியாத உயரத்தை எட்டிப்பிடித்திருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவரது கடின உழைப்பே...சி.காவின் நிகழ்ச்சிகளுக்காகவே விஜய் டிவியை பார்த்தவன் நான்.அவருடைய டைமிங் காமெடிகளுக்கு அப்போதே நான் பரம விசிறி,இன்றும் கூட அவ்வாறே.இவ்வாறு என்முன்னே வளர்ந்த ஒரு கலைஞரின் படத்தை எதிர்பார்ப்புகளுடன்தான் அணுகினேன். ஆனால் மிஞ்சியது என்னமோ ஏமாற்றம் மட்டும்தான்.
அதற்கான காரணங்களையும்  இந்த திரைப்படத்தை எவ்வாறு கையாண்டு இருக்கலாம் என்பதை பற்றியும் அலசுவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.

முதலில் கதையை எடுத்துக்கொள்வோம்.கிட்டதட்ட படத்தில் கே.எஸ்.ரவிக்குமார் கூறுவது போல அவ்வைசண்முகி பார்ட் 2தான் கதை.காதலியை காதலிக்க வைக்க பெண் வேடமிடும்  காதலன் இதுதான் படத்தின் ஒன்லைன்.இந்த ஒன்லைனரை சிறப்பாக கையாண்ட படம்தான் அவ்வை சண்முகி.இந்த இடத்தில் ஒரு விடயத்தை அழுத்தந்திருத்தமாக குறிப்பிட வேண்டும்.Mrs.Doubtfire என்னும் கோழிகறியைதான் தமிழ்மசாலா சேர்த்து அவ்வைசண்முகியாக (ஔவைசண்முகி என்பதுதான் சரியான மொழிநடை எனினும் திரைப்படத்தின் பெயர் அவ்வை சண்முகியாயிற்றே)வடித்திருந்தனர்.அதேபோல் Tootsie என்னும் திரைப்படத்தின் தழுவல் அல்லது வெளிப்படையாக சொன்னால் சீன் பை சீன் கொபிதான் ரெமோ.(Tootsieன் கொபிதான் ஔவை சண்முகி என்பது தனிகதை,அதை இப்போது அலச வேண்டாம்).எனினும் ஏனைய இரு மூல திரைப்படங்களை விட அவ்வை சண்முகியே சிறந்த மசாலாபடம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.அதனால் இக்கட்டுரையில்  இனி காட்டப்படும் உதாரணங்களுக்கு அவ்வைசண்முகியின் உதவியையே நாடப்போகிறேன்.

அவ்வை சண்முகி
ரெமோ:அவளுக்காகவே அவளா மாறிட்டானே



அவ்வைசண்முகியில் இன்னதுதான் பிரச்சினை இதற்காகத்தான் பெண்வேடம் என்பதை தெளிவாக காட்டிவிடுவார்கள்.ஆனால் ரெமோவில் அவ்வாறு அல்ல.முதலில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதற்காகவும் பிறகு காதலுக்காகவும் என்று இரு வேறு காரணங்கள் காட்டப்படுகிறன.இங்கு ஒரு முக்கியமான விடயத்தை கவனிப்போம்.கதாநாயகனின் இலட்சியம்,ஆசை,கனவு எல்லாம் தமிழ்நாட்டையே ஆட்டிவைக்கும்படியான நடிகனாவதுதான்.ஆனால் தன் இலட்சியத்தை நாயகன் நிறைவேற்றினாரா என்பதற்கு இறுதிவரை திரைப்படத்தில் பதில் இல்லை.ஆக அடிப்படையிலேயே கதை சறுக்குகிறது.திரைப்படத்தின் மிகப்பெரிய மைனஸும் இதுதான்.சினிமாவில் பெரிய ஸ்டாராக ஆசைப்படும் ஹீரோ.அதற்காக படிப்பைக்கூட பாதியிலேய துறந்தவன்.சினிமாவுக்காக பல காதல்களைகூட உதறிதள்ளியவன் என்றெல்லாம் நாயகனைக் காட்டிவிட்டு கண்டதும் வரும் ஒரு காதலுக்காக தன் இலட்சியத்தையே மறந்து விடுகிறான் என்று அடுத்த சீனிலேயே காட்டுவதை என்ன என்று கூறுவது.

சரி,இனி கதையை எவ்வாறு அணுகியிருக்கலாம் எனப்பார்ப்போம்.அதே இடத்திலேயே ஆரம்பிக்கிறேன்.சினிமாவில் பெரிய ஸ்டாராக ஆசைப்படும் ஹீரோ.அதற்காக படிப்பைக்கூட பாதியிலேய துறந்தவன் சினிமாவுக்காக பல காதல்களைகூட உதறிதள்ளியவன்.ஆனாலும்  இவனுக்கு ஒரு பெண்மேல் காதல் மலர்கிறது.அவளோடு நெருங்கி பழகும் வேளையில் அவன் இத்தனை நாள் எதற்காக காத்திருந்தானோ அந்த வாய்ப்பும் வருகிறது.அந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொள்கிறான்.அதேவேளை காதலும் கைகூடி வருகிறது.ஆனால் அங்குதான் ஒரு சிக்கல்.சினிமாவில் நடிக்கும் போது ஏனைய நடிகைகளுடன் நெருக்கமான பல காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்கிறது.அவனது முதல் படம் என்பதால் இதை மறுக்க முடியாது.ஆனால் இது அவனது காதலிக்கு பிடிக்கவில்லை.திரையில் சினிமா நடிகர்களை பார்த்து ரசித்தாலும் நிஜ வாழ்க்கையில் அவ்வாறான ஒருவனை அவளது மனம் ஏற்க மறுக்கிறது.இதை நாயகனிடத்தில் கூறுகிறாள்.இவ்வாறு துளிர்விடும் பிரச்சினை ஒரு நாள் பூதாகாரமாகிவிட ஒருகட்டத்தில் காதலா?சினிமாவா என முடிவெடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகிறான் நாயகன்.சினிமாதான் என முடிவு செய்து இந்த காதலையும் கைகழுவிகிறான்.எனினும் காதல் பிரிவால் அவனால் சினிமாவில் சரிவர கவனம் செலுத்த முடிவதில்லை.தன் காதலியின் மனதை மாற்ற எண்ணுகிறான்.அதற்காக பெண்வேடமிட்டு நாயகியோடு பழகுகிறான். ஒரு பக்கம் சினிமாவில் ஏற்படும் பிரச்சினைகள் இன்னொரு பக்கம் காதலில் ஏற்படும் சிக்கல்கள் இரண்டையும் சமாளித்து வெற்றிக்கொடி கட்டினானா நம் நாயகன்...ஒருவேளை கதை இவ்வாறு பயணித்து இருந்தால் அடிநாதம் பிழைக்காமல் இருந்திருக்கும்.சரி மேலும் சிலவற்றை பார்ப்போம்.

கதாநாயகி ஒரு டொக்டர் என்றே வைத்துக்கொள்வோம்.கதாநாயகன் தாதிமார்களின் வேலைகளைப்பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாமல் அந்த வேலையை செய்கிறான்.இது கதையோடு ஒன்றவிடாமல் தடுக்கும் இன்னுமொரு காரணி.ஏனெனில் அது ஒன்றும் மனநலம் குன்றியவர்களின் மருத்துவனைமனையுமல்ல அங்கிருக்கும் ஏனைய ஊழியர்களும் பைத்தியங்களுமல்ல.தன்னோடு வேலை செய்பவரின் போலித்தனத்தைகூட அறியமுடியாமலா அவர்கள் இருப்பார்கள்.இங்குதான் அவ்வை சண்முகியை அல்லது Mrs.Doubtfireஐ கவனிக்க வேண்டும்.தன் பிள்ளைகளையும் தன் வீட்டையும் பார்த்துக்கொள்வதுதான் நாயகனின் வேலையே.ஆகவே அதில் பெரிய சிரமமிருக்காது.தன் பிள்ளைக்கு தான் போடும் வேடம் தெரிந்தால் கூட பிரச்சினை இல்லை.ஆகவே கதை தள்ளாட்டம் இல்லாமல் இலகுவாகப் பயணிக்கும்.சரி,இப்போது ரெஜினா மோத்வானிக்கு வருவோம்(என்ன ஒரு கண்றாவியான பெயர்).கதைப்படி ஹீரோ ஓரளவுக்கு மருத்துவம் தெரிந்தவன் என முதலிலேயே சில காட்சிகளில் காட்டிவிடலாம் அல்லது இருக்கவே இருக்கிறார் ஹீரோவின் நண்பர்(ஒன்றுக்கும் உதவாத சதீஷின் கதாபாத்திரத்தை தூக்கி விடுங்கள்).அவரும் அதே மருத்துவமனையில் வேலை செய்கிறார்.சற்றே பெரிய பதவியில்.இப்போது அவர்மூலம் ஹீரோவுக்கு வேலையும் கிடைக்கிறது,தொழில் ரீதியான பிரச்சினைகளும் தீர்த்துவைக்கப்படுகிறது.இப்போது பாருங்கள் கதை அதன் டிராக்கில் இருந்து விலகாமல் சற்றே சுவாரஸ்யமாக செல்கிறதல்லவா..!

அடுத்து மேக்-அப்...கீர்த்தி சுரேஷின் பெண் வேடம்...மன்னிக்கவும் சிவகார்த்தியின் பெண்வேடம் சற்றே துருத்திக்கொண்டு இருக்கிறது.இங்கு நீங்களாகவே அவ்வை சண்முகியை ஒப்பிட்டு பார்க்கலாம்.கமலின் ஒப்பனை அசல் பெண்போன்றே இருக்கும்.அதுவும் கமலின் அந்த ஆண் முகத்திற்கு சம்மந்தமே இல்லாமல் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கும்.படத்தோடு ஒன்றுவதற்கு மிகமுக்கியமான காரணங்களுள் ஒன்றாக அது இருக்கும்.

இடையில் உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்.ஏன் இரு படங்களையும் ஒப்பிடுகிறாய் அது வேறு இது வேறு என நீங்கள் கேட்கலாம்.இது போன்ற சந்தர்ப்பங்களில் ஒப்பிட்டு பார்க்காமல் இருப்பது கடினம்,ஏனெனில் கொபி+ பேஸ்ட் செய்யப்படும் படங்களை எப்போதுமே என் மனம் ஒப்பிட்டுக் கொண்டே இருக்கும்.எவ்வாறு சாய் பல்லவியின் மலர் கதாபாத்திரத்தையும் சுருதியின் மலரையும் ஒரு ரசிகனின் மனம் ஒப்பிடுமோ அதேபோல்தான் இதுவும்(ப்ரேமம் கூட தெலுங்கில் உத்தியோகபூர்வமாகதான் ரீமேக் செய்யப்பட்டது ஆனால் இது!??).

அடுத்து,அமெரிக்க மாப்பிள்ளை.தமிழ் சினிமாவுக்கு என்றே நேர்ந்து விடப்பட்டவர்கள்தான் இவர்கள்.எனக்கு தெரிந்து சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் என்ற நாவலை கொண்டு வெளியான ஆனந்த தாண்டவம்  என்ற திரைப்படத்தில் மட்டும்தான் அமெரிக்க மாப்பிள்ளை கதாநாயகியை மனம்முடித்து இருப்பார்(எழுத்துலகம் என்பதே வேறுதான்,ஆனால் இந்த கதையையும் படம் எடுக்கிறேன் பேர்வழி என கந்தலாக்கி இருப்பார்கள்).இப்படி யோசித்து பாருங்கள்.உங்களுக்கு ஒரு பெண்/ஆணை அவள்/அவனின் விருப்பத்துடன் நிச்சயித்து இருக்கிறார்கள்.ஆனால் திருமணத்திற்கு முதல் நாள் அவள்/அவன் வேறொருவரை காதலிப்பதாகவும் உங்களை மணம்முடிக்க தன்னால் முடியாது எனவும் கூறுகிறான்/ள்.இது உங்களுக்கு எவ்வவாறான ஒரு தாக்கத்தை ஏற்படுத்துமோ அதேதான் இந்த கதையில் வரும் அ.மாப்பிள்ளைக்கும் ஏற்படுகிறது.அதில் சற்றே வில்லத்தனமும் கலந்து இருந்தாலும் பூரணமாக அந்த பாத்திரம் வடிவமைக்கப்படவில்லை.
அவ்வையை ஒப்பிட்டுப் பாருங்கள்.அனைத்து கதாபாத்திரங்களும் கச்சிதமாக எழுதப்பட்டிருப்பது புரியும்.

காமெடி...ஆம் ரெமோ படம் நம்பியிருப்பது காதலையும் காமெடியையும்தான்.காதல் டிராக்தான் வரவில்லை என்றால் காமெடியுமா...இது காமெடிபடம் ஆகவே ஆங்காங்கே சற்று காமெடியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என நினைத்துக்கொண்டு எழுதியது போல் தோன்றுகிறது.மீண்டும் அவ்வை சண்முகிக்கே வருகிறேன்.இரு திரைப்படங்களிலும் நகைச்சுவை ஆற்றும் முக்கிய பங்கை நீங்களாகவே ஒப்பிட்டுப்பார்க்கலாம்.பல இடங்களில் எதிர் நீச்சல் படத்தில் வரும் அதே வசனங்களைதான் சற்றே மாற்றி சொல்லியிருப்பார் சதீஷ்.அவற்றிற்கு பெயர் நகைச்சுவை அல்ல,இரட்டை அர்த்த வசனங்கள்.

இவை மட்டுமல்ல.படத்தில் பல்வேறு சிக்கல்கள்.இவையனைத்தையும் உதறிவிட்டு  படத்தை பார்ப்பதற்கு இரண்டே காரணங்கள்தான்.ஒன்று சிவகார்த்திகேயன்,மற்றையது துரும்பில் இருந்து வந்த இசை.மற்றபடி மான் கராத்தேயில் இடைவேளைக்குபின் எவ்வாறு கதை சறுக்குமோ அதேதான் ரெமோவிலும் எண்ணி 10வது நிமிடத்திலேயே நடக்கிறது..!

P:S:-திரைப்படத்தில் பணியாற்றும் நடசத்திரங்களைத்தாண்டி திரைப்படங்களை நேசிப்பவர்களுக்கு இந்த கட்டுரையின் நோக்கம் புரியும் என நம்புகிறேன்..!


No comments

//]]>