Related posts

Breaking News

தில்லுக்கு துட்டு:கலகல காஞ்சரிங்திகில்-நகைச்சுவை படங்களுக்கு என்றே ஒரு தனி மவுசு உள்ளது.அதேநேரம்,ஏனைய படங்களை விட இவ்வகை படங்களை எடுப்பது கொஞ்சம் கடினமாகும்.காரணம்,ஒரு காட்சியில் சிரிக்க வைக்க வேண்டும்,அதற்கடுத்த காட்சியில் பயத்தை அள்ளி தெளிக்க வேண்டும்.இதை சரியாக விளங்கிக் கொள்ளாமல் 'பேய்படம் எடுக்கிறேன் பேர்வழி' என கிளம்பிய நம்மாட்கள் கழிவினும் கழிய பேய் படங்கள் பலவற்றை எடுத்து பேய் படத்திற்குண்டான மரியாதையை கெடுத்து விட்டனர்.ஆனால்  அவ்வாறு அல்லாமல் காமெடி+ஹாரரை அளவாக,அழகாக திரையில் காட்டியுள்ளனர் தில்லுக்கு துட்டு படக்குழுவினர்.


படத்தின் ஆரம்பத்தில் 7ம் அறிவு ரேஞ்சில் ஒரு முன்கதை சொல்லப்படுகிறது.இதனால் கோலிவுட் பேய்பட ஃப்ளாஷ்பேக் கண்டங்களை நம்மால் தவிர்க்க முடிகிறது.படத்தின் கதை இதுதான்,குமார்(சந்தானம்)-காஜல்(ஷனாயா) இருவரும் காதலிக்கின்றனர்.இது ஷனாயாவின் அப்பாவுக்கு பிடிக்காமல் போகவே 'நான் கடவுள்' ராஜேந்திரனின் யோசனையின் பேரில் ஒரு பாழடைந்த பங்காளவிற்கு (அதாம்பா பேய் பங்களா) சந்தானத்தை அழைத்து வந்து அவரை கைமா பண்ண திட்டம் போடுகிறார்.கல்யாணம் என்ற பெயரில் அழைத்து வரப்படும் சந்தானம்&கோ பேய் பங்காளாவில் எப்படியெல்லாம் டரியலாகிறார்கள் என்பதை சிரிக்க வைத்து சொல்லியிருக்கிறது படம்


டிரெய்லரில் பார்த்ததை விட திரையில் பார்க்கும் போது டெக்னிகலாக சில விஷயங்கள் நன்றாக இருக்கின்றன.குறிப்பாக ஒளிப்பதிவு அருமையாக உள்ளது.பேய்படங்களுக்கு மிக முக்கியம் பிண்ணனி இசை.அதை முடிந்தளவு நன்றாகவே அமைத்துள்ளார் கார்த்திக்ராஜா.ஆனால் தமனின் பாடல்கள்தான் மகாமட்டம்.படத்தில் குடும்பமே சேர்ந்து ஆடும் பாரட்டி சாங் ஒன்று உள்ளது.மிகக் கச்சிதமான இடத்தில் அதை வைத்திருக்கிறார் இயக்குனர்.ஆனால் பாடல்தான் கேட்க சகிக்கவில்லை.

சந்தானம் உட்பட அனைவருமே தேவையான அளவில் நடிப்பை வழங்கியுள்ளனர்.இருந்தாலும் கதாநாயகியாக நம்மூர் பெண்களில் யாரையாவது தெரிவு செய்திருக்கலாம்(நாயகி அவ்வளவு அழகு என்றும் சொல்வதற்கில்லை)

லொள்ளு சபா இயக்குனரின் படமென்பதால் லொள்ளுக்கு பஞ்சமில்லை.முதல்பாதி பேயில்லாமல் ஜாலியாகவும் பிற்பாதி பேயோடு ஜாலியாகவும் செல்கிறது.அதே நேரம் பயத்தையும் சரியான விகிதத்தில் கலக்க இவர்கள் தவறவில்லை.ஆரம்பத்தில் இருக்கும் லேசான பயம் இடைவேளையின் பின் மெதுமெதுவாக அதிகரிக்கிறது.(இங்கு ஒரு உண்மையை சொல்ல வேண்டும்,காஞ்சரிங் 1ல் பல இடங்களில் பயத்திற்கு பதிலாக எரிச்சலே வந்தது).கிளைமேக்ஸிற்கு நம்மை தயார்படுத்தும் வித்தையையும் அருமையாக கையாண்டுள்ளனர்.படத்தில் சின்னஞ்சிறு குறைகளும் லாஜிக் ஓட்டைகளும் உள்ளன.எனினும் படம் ஜாலியாக செல்வதால் அவற்றை தள்ளிவைத்துவிடலாம்.ஆக இந்த ஆண்டில் வெளிவந்த ஓரளவு நிறைவான காமெடி-ஹாரர் படமாக இதனைக் குறிப்பிடலாம்.

A:P:

  1. "நாங்கள் பயமில்லாதவர்கள்" எனக் காட்டிக்கொள்ளவே ஒரு கூட்டம் பேய்படங்களிற்கு வரும்(உண்மையில் இவர்கள்தான் அதிகம் பயந்தவர்கள்).பேயை காட்டும் போதோ அல்லது அமைதியாக நகரும் காடசிகளிலோ ஊளையிடுவதை(இதுக்கு பேர்தான் நரிபுத்தின்னு சொல்றது) வழக்கமாக கொண்டுள்ள இவர்கள் இந்த படத்தையும் விட்டுவைக்கவில்லை.நல்ல காமெடிக்கு சிரிக்கிறோம்.அதேபோல்தான் நல்ல திகிலான காட்சிகளில் பயப்படவும் செய்கிறோம்.பேய்படம் பார்க்க வருவதே பயப்படத்தான்.ஆனால் ஒரு சில தொடை நடுங்கிகள் "எனக்கு பயமே வரல ஊஊஊஊ" எனக்கத்தி படம் பாரக்கும் மூடையே கெடுத்து விடுகின்றனர்.இவர்களைப் போன்ற கொடும் பாவிகள் சரக்குக்கு சைட் டிஷ் கிடைக்காமல் அவதிப்பட வேண்டும்.அப்போதுதான் இவர்களுக்கெல்லாம் புத்தி வரும்.
  2. X-Men:Apocalypse படத்தின் கிளைமேக்ஸிற்கும் இந்த படத்தின் கிளைமேக்ஸிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு.இவ்விரண்டு படங்களையும் பார்த்தவர்களுக்கு மட்டுமே அந்த கனெக்ஷன் புரியும்..!
No comments

//]]>