Related posts

Breaking News

Why Darbar Movie lags too much?



இந்த பதிவில், தர்பார் படம் ஏன் இழுவையாக இருந்தது என்றும், ஏன் பெரிதாக சோபிக்கவில்லை என்பதை பற்றியும் பார்ப்போம். இது என்னுடைய சிந்தனைகள் மட்டுமே, உங்களது சிந்தனைகளை, கீழே commentல் பதிவு செய்க. தர்பார் பற்றிய எனது, ஸ்பாய்லர் free விமர்சனத்தை படிக்க கீழே உள்ள urlஐ க்ளிக் செய்யுங்கள்.


Spoiler Alert

ஒரு திரைக்கதை நன்றாக, பார்க்க விறுவிறுப்பாக இருக்க நிறைய விஷயங்கள் தேவை. அதில் ஒன்று, கதாபாத்திர வடிவமைப்பு. யோசித்துப் பாருங்கள், ரஜினி காந்த் கதாபாத்திரம் எப்படியானது என, வருபவர்களை எல்லாம் வம்பிழுப்பது, நம்ப முடியாத சண்டை, சாகசங்களை செய்து, காக்கி சட்டையை மாட்டிக் கொண்டு அங்கும் இங்கும் செல்வது என முக்காவாசி நேரம், ஆதித்யா இதைதான் செய்கிறார். இதில் ஏற்கனவே வந்த அத்தனை ரஜினி காந்த் படங்களின் சாயல் வேறு இருப்பதால், இவருக்கென்று ஒரு தனி அடையாளம் இல்லை.

அருணாச்சலம், அண்ணாமலை மற்றும் பாட்ஷா இந்த எல்லா படத்திலுமே, ரஜினி ஸ்டைல் செய்வார்தான். ஆனால் அது அந்தந்த படங்களுக்கான ஸ்டைல். அருணாச்சலத்திற்கென்று ஒரு எல்லை உள்ளது. அவனை வீட்டை  விட்டு துரத்தும் போது அவனால் வெளியேறதான் முடியும், தடுத்து பன்ச் பேசி சண்டை செய்ய இயலாது. அதே போலதான் அண்ணாமலையும், தன் வீடு உடைக்கப்படும் போது அவனால் அதை தடுக்கும் அளவுக்கு வசதி இருக்காது. ஆனால், தர்பாரில், ரஜினி என்னமும் செய்வார். அண்டை நாட்டு தலைவர்களையே மிரள வைக்கும் கமிஷ்னர் அல்லவா? ஆனால், இதிலும் ஒரு சீன் அப்படி இருக்கிறது. தன் மகளை அவரால் காப்பாற்ற முடியாமல் போகும். ஆனால், it’s too late. அத்தோடு படம் தொடங்கும் போதே, ஹீரோவின் மகள் செத்து விட்டாள், என்பது, audienceக்கு சொல்லப் பட்டு விடுகிறது. ஆக அருணாச்சலத்தில் ரஜினி துரத்துப்படும் போது இருந்த அதிர்ச்சியோ அல்லது அண்ணாமலையில் ரஜினியின் வீடு உடையும் போது வரும் பரிதாபமோ அல்லது பாட்ஷாதான் ரஜினி என ரீவில் செய்யும் போது இருந்த சர்ப்ரைசோ தர்பாரில் இல்லை.

இதில், ஓப்பனிங் சீனில் வேறு, ஒரே ஒரு வாளை வைத்துக்கொண்டு கிட்டதட்ட 100,150 பேரை சாய்ந்து விடுவார். ஆக இந்த இடத்திலேயே படம் பார்க்கும் ஆர்வம் குறைந்து விடுகிறது. ஒரு அடி கூட வாங்காமல், துப்பாக்கி வைத்திருக்கும் 100-150 எருமை மாட்டு தடியன்களை அடிக்கும் போதே, ஹீரோ எதையும் செய்யக் கூடியவர் என நிறுவி விடுகிறார்கள். இனி, படத்தை ஆர்வமாக பார்க்க வேண்டும் எனில், ஸ்பெஷலாக எதையாவது செய்ய வேண்டும். அப்படியெனில், அடுத்தாக வில்லன். வில்லன் ஹீரோவை விட சக்தி மிக்கவராக இருக்க வேண்டும். அருணாச்சலம் படத்தில் ரகுவரன் வில்லன் அல்ல, அங்கு ரஜினியின் சூழ்நிலைதான் கதைக்கு வில்லன். அருணாச்சலம், லாரி திறைய ஆட்கள் வந்தாலும் அடிப்பார். ஆனால், முப்பது நாட்களில் முப்பது கோடியை செலவு செய்ய வேண்டும் என்ற சவாலை எப்படி செய்யப் போகிறார். இதை ஹீரோ எப்படியெல்லாம் செய்யப்போகிறார், என எண்ணும் போதே ஒரு ஆவல் ஏற்படுகிறது அல்லவா? அதுதான், அருணாச்சலத்தின் வெற்றி.

தர்பாரில் வில்லன் கதாபாத்திரம் படு சொத்தை. அதுவும் வில்லனை, ஹீரோ பார்க்கும் முதல் காட்சியிலேயே, வில்லனை போட்டுத் தள்ளி விடுகிறார், ரஜினி. இது பார்ப்பவர்க்களுக்கு எத்தனை சலிப்பானது. ஒரு மாஸ்டர் மைண்ட் வில்லன், இப்படியா வெற்றுக் கையோடு வந்து வீணாக செத்துப் போவான். இங்கேயே ஒரு நகை முரண் தெரிகிறது பாருங்கள். நீங்கள் என்றேனும் பேனா பிடித்தால், இது போன்ற ஒன்றுக்கும் உதவாத கதாபாத்திரங்களை எழுதி விடாதீர்கள்.

அடுத்து மகள் கதாபாத்திரம், அவள் இறந்தால் பரிதாபம் வர வேண்டும் என்பதற்காக எத்தனை சீன்கள், சப்பப்பா..... முக்காவாசி படமே தேவைப்படுகிறது. அந்நியன் படத்தில், flashbackல், அம்பியின் தங்கை இறக்கும் போது, audienceக்கு பரிதாபம் வந்தது. அந்த கதாபாத்திரம் வெறும் ஐந்து நிமிடம்தான் படத்தில் வரும். இந்த மாதிரியான கதாபாத்திரங்களை இயக்குனர் சங்கர் நன்றாக எழுதுவார். 2.0 படத்திலும், பட்சி ராஜன் இறப்பதைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். அதனால், நம்மால் அவனை வில்லனாக ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது, படமும் மொக்கையானது. வில்லன் பக்கம் நியாயம் இருந்தால், வில்லன்தான் ஹீரோ ஆகி விடுவானே.



இன்னொரு உதாரணம் Avengers Infinity Warல் வரும் தானோஸ். தானோஸ் உலக நலனுக்காகதான் பாதி பேரை அழிப்பான், சுய இலாபத்திற்காக அல்ல. ஆக இந்த படத்தில் தானோஸ் கிட்டதட்ட ஹீரோ. அதனால் அவன் சொடக்கு போட்டதை மக்கள் ரசித்தனர். ஆனால் Avenger Endgameல், தானோஸ் ஒட்டு மொத்த உலகையும் அழித்து, தானே ஒரு உலகை உருவாக்க நினைப்பான். ஏன், தான்தான் பெரியவன் என காட்டிக்கொள்ள, ஆக இங்கே தானோஸ் தோற்றதை மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஆக எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் character justification முக்கியம். அதை ஐந்து நிமிடத்தை விட குறைவான நேரத்தில் கூட காட்டலாம். அப்படிதானே Infinity Warல், தானோஸை,  Doctor Strange உடனான உரையாடலின் பின் ஏற்றுக்கொண்டோம்.


சரி, அப்படியெனில் படத்தை எப்படிதான் சுவாரஸ்யமாக கொண்டு போயிருப்பது, “நீயே ஒரு வழி சொல் பார்ப்போம்” என நீங்கள் கேட்கலாம். சொல்கிறேன். அதே கதை, அதே காட்சி ஆனால் கொஞ்சம் ஓர்டரை மாற்றி கத்தரி போட்டுப் பார்க்கலாம். தர்பார் பட ஆரம்ப காட்சிகளை இப்படி வைத்துக் கொள்வோம். ரஜினி 1st half தொடக்கத்தில்  அப்பா-மகள் மொமண்டுகளை காட்டிவிடலாம். இன்டர்வல் வரும் போது  தன் மகளை அழைத்துக் கொண்டு ரஜினி காரில் வருகிறார், அப்போது ரஜினியின் மகளுக்கு accidentடாகி விடுகிறது. உடனேயே I.C.Uக்கு கொண்டு போகிறார்கள். மகள், தந்தையை விட்டு பிரிய மனமில்லாமல் தந்தை முன்னாலேயே இறந்து விடுகிறாள். இங்கு மகள் திடீரென இறப்பது பார்ப்பவருக்கு அதிர்ச்சியை தரும். ரஜினிக்கு தன் மகளை கொன்றது யாரென தெரியாது, பார்ப்பவருக்கும் தெரியாது. ஆக இப்போது வில்லனை முதற்தடவையாக audienceக்கு காட்டி இன்டர்வல் விடலாம்.

இப்போது, ரசிகர்கள் யார் இந்த வில்லன், ஒரே அடியில் ரஜினியின் மகளை கொன்று விட்டானே, எதற்காக கொன்றான் , இவனை எப்படி ரஜினி கண்டுபிடிக்க போகிறார் என, இடைவேளையில் ரசிகன் ஆர்வத்துடன் எழுந்து செல்வான். எழுத்தாளன், எந்நேரமும், ரசிகர் பக்கம் நின்றும் யோசிக்க வேண்டும். அதேநேரம் தயாரிப்பாளர் பக்கமும்தான். காலா படத்தில் போல ரஜினியை ரொம்ப underplay செய்ய வைத்தாலும், ரசிகனுக்கு போரடிக்க தொடங்கிவிடும். படத்தின் கதை எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் திரைக்கதை எழுதும் போது கச்சிதமாக எழுத வேண்டும், அது சுலபமானதும் அல்ல, இரு பக்கம் கூர் கொண்ட கத்தி அது. கவனமாக கையாள வேண்டும்.



No comments

//]]>