Related posts

Breaking News

தானோஸை வீழ்த்துவது எப்படி-Road to Infinity War


இன்ஃவினிடி வோர் என்னும் மிகப்பெரிய கதையை திரைப்படமாக கொடுக்க வேண்டும்,அதே நேரம் மார்வல் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் முழுமையான புரிதலுடன் அதைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் மார்வல் அயன்மேன்(2008) தொடங்கி நேற்று வந்த ப்ளாக் பேந்தர்வரை அழகாக ஒரு பாதையை அமைத்துக்கொடுத்தனர்.ஆக இன்ஃவினிடி வோர் படம் எப்படி இருக்கும்,என்னென்ன புதுமைகள் அதில் காட்டப்படலாம்,மார்வல்  இதுவரை இன்ஃவினிடி வோர் படம் பற்றி சிலேடையாக புரிய வைத்த விடயங்கள் என்ன என்பதை பற்றியெல்லாம் ஆராய்வதுதான் இக்கட்டுரையின் பிரதான நோக்கம்.அத்தோடு தலைப்பில் உள்ளதற்கேற்ப தானோஸை எவ்வாறு இலகுவாக தோற்கடிக்கலாம் என்பதை இக்கட்டுரையின் இறுதியில் பார்ப்போம்.

முதலில் ஆறு முடிவிலி கற்களின் அறிமுகத்தோடு தொடங்குவோம்.முதலில் லோகி கொண்டுவரும் ஸ்பேஸ் ஸ்டோன்.இதன் சக்தி அண்ட வெளியில் உள்ள அத்தனை இடங்களுக்கும் செல்வதற்கான பாதையை ஏற்படுத்திக்கொடுப்பது,ஸ்பேஸ் ஸ்டோன் இப்போது லோகியின் வசமே இருப்பதாக ரக்னரோக் படம் மூலமும் கடைசியாக வந்த இ.வோர் முன்னோட்ட காட்சிகளின் மூலமும் அறியக்கூடியதாக உள்ளது.


இரண்டாவதாக பவர் ஸ்டோன்.பெயருக்கேற்றாற் போல அளவுகடந்த சக்தியை வெளிப்படுத்துவதுதான் இதன் வேலை.அத்தோடு ஏனைய ஐந்து கற்களின் சக்தியையும் இது அதிகப்படுத்தும்.பவர் ஸ்டோன் கடைசியாக நோவா கோர்ப்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

மூன்றாவதாக ஈதரில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ரியாலிட்டி ஸ்டோன்.இதன் சக்தி உண்மை தோற்றங்களை மறைத்து போலி பிம்பத்தை உருவாக்குவது.சிம்பிளாக சொன்னால் ரியாலிட்டியை கட்டுப்படுத்துவது.இது கலக்டரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நான்காவதாக மைண்ட் ஸ்டோன்.இது மனிதர்களின் மூளையை கட்டுப்படுத்துவதுடன் ஓரளவான சக்தியையும் வெளிபடுத்தக்கூடியது.இது விஷனின் நெற்றியில் பொறிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாவதாக டைம் ஸ்டோன்.நேரத்தை கட்டுப்படுத்தும் இது முடிவிலி கற்களுக்கெல்லாம் ஒரு முடிவிலியை கொடுக்க கூடியது.ஏனைய கற்கள் அழிந்தாலும் இதனை கொண்டு காலத்தை பின்னிழுத்து அனைத்து கற்களையும் மீட்டு விடலாம்.இது ஐ ஒஃப் அகமோட்டாவில் வைக்கப்பட்டுள்ளது.இதனை பாதுகாப்பவர் டொக்டர்.ஸ்ட்ரேன்ஜ்.

இறுதியாக சோல் ஸ்டோன்.இது எங்கிருக்கிறது என காட்டப்படவில்லை. எனினும் சோல் ஸ்டோன் வாகாண்டாவில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.அத்தோடு வாகண்டா நாட்டினர் இறந்த மனிதர்களின் சோல்(உயிர்/ஆத்மா) உடன் தொடர்புகொள்வ முடிவதும் இக்கல்லின் சக்தியினால்தான் எனப்படுகிறது.

இந்த ஆறு கற்களும்/சக்திகளும் பிரபஞ்சத்தின் தோற்றத்தோடு உருவாகியவை.இவை முடிவற்ற சக்தியை கொண்டிருப்பதால்தான் இன்ஃவினிடி ஸ்டோன்ஸ் எனப்படுகின்றன.இவற்றை சாதாரணமானவர்கள் கையாள்வது கடினம்.உதாரணமாக பவர் ஸ்டோனின் சக்தியை சாதாரண மனிதர் ஒருவரால் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது.அது அவரையே அழித்துவிடும்.ஆனால் பல மனிதர்கள் ஒன்றாக சேர்ந்து பவர் ஸ்டோனை கையாளலாம்.


தானோஸ் என்பவன் இந்த ஆறு கற்களையும் ஒன்றிணைத்து,பிரபஞ்சத்திலேயே தான்தான் அளவற்ற சக்தியை உடையவன் என்பதை நிரூபிக்க நினைக்கிறான்.மார்வலின் ஆரம்பகால கட்ட கதைகளின் படி டெத்(மரணம்) என்பவளை கவருவதற்காகதான் இதனை அவன் செய்வதாக காட்டப்பட்டிருக்கும்.

தானோஸ் எப்படி கற்களை கைப்பற்றபோகிறான் என பார்ப்போம்.அவென்ஜர்ஸ் ஏஜ் ஒஃவ் அல்ட்ரான் படத்தின் இறுதியில் "I'll do it myself" என தானோஸ் கூறுவதுபோல் காட்டப்பட்டிருக்கும்.அதாவது அப்படத்தின் தொடக்கத்தில் அவென்ஜர்கள் அனைவரும் இறந்து கிடப்பதை டோனி ஸ்டார்க் தன் கனவில் பார்ப்பான்(அதில் கேசம் வெட்டப்பட்ட தோரும் இறந்து கிடப்பார்,இதே போன்ற ஒரு காட்சியை நாம் இன்ஃவினிடி வோர் படத்தில் பார்ப்தற்கான வாய்ப்புகள் அதிகம்).இதனால் மீண்டும் வானத்தில் இருந்து ஏலியன்கள்/வேற்றுலகினர் படையெடுக்கலாம் என கணிக்கும் ஸ்டார்க், அல்ட்ரான் எனும் புரோக்கிராமை உருவாக்குகிறான்.ஆனால் அந்த புரோக்கிராம் முழுதாக உருவாக்கப்படுவதற்கு முன்னரே செயற்பட தொடங்கிவிடும்.ஒருவேளை இது தானோஸின் வேளையாகக்கூட இருக்கலாம்.அவன் அல்ட்ரானின் மூலம் கற்களை ஒருங்கிணைக்க நினைத்து அந்த திட்டம் செயற்படாத காரணத்தினால் "I'll do it myself" எனக் கூறியிருக்கலாம்.


தானே முன்வந்து கற்களை ஒருங்கிணைக்க நினைக்கும் தானோஸ் முதலில் ஸ்பேஸ் ஸ்டோனை லோகியிடம் இருந்து பெற்று கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.பவர் ஸ்டோன் நோவா கோர்ப்ஸிடம் இருந்து பறித்து கொள்கிறான்.இந்த தகவல் தெரிய பெற்றதும் கார்டியன்ஸ் ஒஃவ் த கலக்ஸி குழுவினர் தானோஸை தேடி புறப்படுவார்கள்.ரியாலிட்டி ஸ்டோன் கலக்டரிடம் இருந்து அபரிக்கப்படலாம்.மைண்ட ஸ்டோனை விஷனை கொல்வதன் மூலம் கையகப்படுத்திக்கொள்வான்.சோல் ஸ்டோனை தன் வசப்படுத்த ஒவுட் ரைடர்ஸ் எனப்படும் தனது ஏலியன் படையை வாகாண்டா நாட்டின் மீது ஏவிவிடுவான்.ஆனால் டைம் ஸ்டோன் கிடைப்பது எப்படி என்பதை கணிக்க முடியவில்லை.டாக்டர்.ஸ்டேரன்ஜ் டோர்மாம்மு எனப்படும் தானோஸை விட மிகப்பெரிய வில்லனையே டைம் ஸ்டோன் மூலம் எளிதாக தோற்கடித்தவர்.

அத்தோடு இன்ஃவினிடி வோரின் முதல் பாகத்திலேயே தானோஸ் டைம் ஸ்டோனை கைப்பற்றிவிட்டால் இரண்டாம் பாகத்தில்,முதற்பாகத்தில் இறந்த கதாபாத்திரங்களை மீட்டு கொண்டுவருவது என்பது இயலாத காரியமாகிவிடும்.ஆக டைம் ஸ்டோனை அவன் கைப்பற்றுவது இரண்டாம் பாகத்திலாகவும் இருக்கலாம்.

சரி,தானோஸை அவென்ஜர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார்கள்.முதலில் அயர்ன் மேன்.இவர் முதற் பாக முடிவில்/இரண்டாம் பாக முடிவில் இறந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.தானோஸிடம் இவரது பாச்சா பலிக்காது.தோர்,கண்டிப்பாக தோர் தனது புதிய ஆயுதமான மேஜிக் பெல்டின்(ஸ்பைடர் மேன்:ஹோம் கமிங்கில் இதைப்பற்றிய குறிப்புக்கள் உண்டு) துணை கொண்டு ஏதாவது செய்வார்.அத்தோடு அஸ்கார்டியன்களுக்கு வயதாக வயதாகதான் சக்திகள் கூடும்.ஆக டைம் ஸ்டோனை கொண்டும் தோரை அடக்க முடியாது.கேப்டன் அமெரிக்காவும் இறந்து போகலாம்.ஹல்க் தனது சக்திகளை இழந்து வெரோனிகா ப்ரோக்ராமின்(ஹல்க் பஸ்டர்) துணையுடன் போராடலாம் அல்லது அயன்மேனே தானோஸுக்கு எதிராக ஹல்க் பஸ்டரை பயன்படுத்தலாம்.
விஷனும் அழிக்கப்படுவது போல்தான் டிரய்லரில் காட்டியுள்ளார்கள்.

ஏன் அத்தனை கதாபாத்திரங்களுமே கூட இறந்து போகலாம்.ஆனால் டொக்டர்.ஸ்ட்ரேன்ஜின் உதவியுடன் இவர்கள் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தானோஸை வீழ்த்துவது எப்படி?
அவென்ஜர்களால் தானோஸை எளிதாக வீழ்த்தி விட முடியும்.தானோஸ் பூமியில் கால்பதிக்கும் போதே டைம் ஸ்டோனின் மூலம் அவனை சுற்றியுள்ள நேரத்தை உறையவத்தார்களெனின் (Time Freeze) அதன் மூலமாக தானோஸையும் உறைய வைத்து விடலாம்.பின்னர் ஒவ்வொரு அவென்ஜராக வரச்சொல்லி தானோஸின் தலையை வேறாக காலை வேறாக பிரித்துமேய்ந்தால்,2 நிமிடங்களுக்குள்ளேயே படம் முடிந்துவிடும் அல்லது "Thanos,I've come to Bargain" என்றாலே போதும்.
ஆனால் அப்படியிருந்தால் கதையில் சுவாரஸ்யமேது.அதனால் கண்டிப்பாக மிகச்சிக்கலானதொரு திரைக்கதையைதான் ரூசோ சகோதரர்கள் பிண்ணியிருப்பார்கள் மேலும் தானோஸின் கதாபாத்திரம் அதிக பலம் வாயந்ததாக படைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.பத்து வருட உழைப்பில் கிட்டதட்ட 60 மேற்பட்ட ஐகோனிக் கதாபாத்திரங்களையும் 30க்கு மேலான சூப்பர் ஹீரோக்களையும் ஒரே திரையில் கொண்டுவரப்போகிறார்கள் எனும் போது,கண்டிப்பாக இந்த படம் வெளிவருவதற்கு முன்பே ஒரு மைல்கல்தான்.


2 comments

Parani from Bangalore said...

குட் ஒன்!

Prasanth Karthick said...

ஏற்கனவே படித்திருக்கிறேன் என்றாலும்.. சூப்பர்.. அதற்கென்றார் போல போட்டோக்கள் போட்டு நல்லா பண்ணி இருக்கீங்க

//]]>