Related posts

Breaking News

Bigil - Copycat Moviesவணக்கம் நண்பர்களே, இன்று நாம் copycat moviesல் பார்க்கப்போவது, நமது, என்றும் தன் பாணி மாறா அண்ணன் அட்லி அவர்களின் பிகில் திரைப்படத்தை பற்றிதான். Copycat Moviesன் முன்னைய எபிசோடுகளை கீழுள்ள லிங்குகளை க்ளிக் செய்து வாசித்துக் கொள்ளலாம். அட்லி ஆரம்பத்தில் ஏதாவது ஒரு படத்தைதான் காப்பியடித்துக் கொண்டிருந்தார். பின்னர் “copy...copy...” என எல்லாரும் கத்தவும், அதைப் பார்த்துவிட்டு சொந்தமாக யோசித்து படம் எடுப்பார் என்று பார்த்தால், அண்ணன் மூளையே மூளைதான். ஒரு தமிழ்படத்தில் இருந்து கதையை எடுத்துக் கொண்டிருந்தவர், இப்போது 10,15 படங்களை ஒன்றாக கோர்த்து ஒரு படமாக கொடுக்கத் துவங்கி விட்டார். அதில், மெர்சல் திரைப்படத்தின் copycat காட்சிகளை அக்கு வேறு ஆணி வேறாக கிழித்திருந்ததை, மேலே நான் கொடுத்துள்ள லிங்குகளை க்ளிக் செய்து படித்துக் கொள்ளலாம். 

சரி, இப்போது பிகிலேஏஏஏஏஏஏஏவுக்கு வருவோம். படத்தின் கதை, இது ஸ்போர்ட்ஸ் பட சீசன் அல்லவா, கனா, நட்பே துணை என அடுத்தடுத்து ஹிட்டுகள் வேறு. தமிழில் பொதுவாக ஸ்போர்ட்ஸ் படங்களுகெல்லாம் ஒரே கதைதான், ஒரு கோச் எப்படி தனது அணியை நம்பிக்கையுடன் பயிற்று வித்து வெற்றிபெற வைத்தார் என்பதுதான். இதில் ஹீரோ ஒன்று கோச்சாக இருப்பார் (இறுதிச்சுற்று போல) அல்லது அந்த அணியில் ஒரு பிளேயராக இருப்பார் (கனா திரைப்படம் போல- இதில் ஐஸ்வர்யா ராஜேஷ்தான் கதைக்கு நாயகி, சிவகார்த்திகேயன் ஒரு சிறிய கதாபாத்திரம் மட்டுமே). ஆனால், இது விஜய் படமாயிற்றே, சிவகார்த்திகேயன் போல underplay செய்யும் கதாபாத்திரமாக அவரை காட்ட முடியாது. ஒரு ஓப்பனிங் சாங், ரொமான்ஸ், மாஸ் மொமண்டுகள் எல்லாம் வேண்டுமே. விஜயிடம் ரசிகர்கள் இதை எதிர்பார்த்துதானே வருவார்கள். 

ஆக, ஒன்று விஜயை பிளேயராக மட்டுமே காட்ட வேண்டும். அல்லது அவரை மாஸான கோச்சாக காட்ட வேண்டும். ஆக இதில் விஜயை மாஸ் கோச்சாக காட்டி, அவர் எப்படியான பிளேயர் என ஒரு flashback வைத்திருப்பார்கள். மேலும், அட்லி படமாயிற்றே, “ராஜா ராணி” நஸ்ரியா போல, தெறி “சமந்தா போல”, மெர்சல் “வெற்றிமாறான்” போல, flashbackல் உடைப்பதற்கென்ற ஒரு furniture வேண்டும் அல்லவா, இதில் ஹீரோயின் நயன்தாரா முக்கிய கதாபாத்திரம் இல்லை என்பதால், அப்பா விஜய் என ஒரு furnitureஐ உருவாக்கி, அதை flashbackல் உடைப்பார். ஆக இதிலேயே, “சக்தே இந்தியா” திரைப்படம் முதல் “தேவர்மகன்”, “சரத்குமாரின் “அரசு” வரை அப்படி அப்படியே மிக்ஸிங் அடித்திருப்பார். ஒருவர் கதை எழுதும் போது, அதை போன்ற படங்கள் ஏற்கனவே நிறைய வந்துள்ளது என தெரிந்தால், உடனேயே புதிதாக யோசிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு, இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் “அலைபாயுதே” படத்தில், கதாநாயகனும் கதாநாயகியும் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்வார்கள், பின்னர் அவர்களின் வாழக்கை என்னாகிறது என்பதே படத்தின் கதை. இதே கதையைதான் சில வருடங்களுக்கு முன்னர் “பாம்பே” என்ற திரைப்படமாக எடுத்திருப்பார் மணிரத்தினம். ஆனால் இரு திரைப்படங்களுமே முற்றிலும் வேறாக, அதன் கதாபாத்திரங்கள் தனித்துவமாக, பார்ப்பவர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். ஒரு கிரியேட்டர் இப்படிதான் இருக்க வேண்டும். இப்படித்தான் யோசிக்க வேண்டும்.

இன்னொரு உதாரணம், அட்லியின் copycat பற்றி பலர் எழுதியுள்ளனர், பல வீடியோக்கள் YouTubeலும் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் படித்து, பார்த்து விட்டு என்னுடைய கட்டுரையை வாசித்தாலும், என்னுடைய கட்டுரை வித்தியாசமாக இருக்கும், தனித்துவமாக இருக்கும், புதிதாக இருக்கும், புதிய விஷயங்களைக் கொண்டிருக்கும். உண்மையை சொன்னால் அப்படிதான் இருக்க வேண்டும். ஏனெனில் எனக்கென்று ஒரு தனி எழுத்துத் திறன் உண்டு. அதற்கு தானேயப்பா, எல்லாருக்கும் தனித்தனியாக மூளையொன்று உள்ளது. காப்பிதான் அடிப்பேன் என்றால், சொந்த மூளையை கழட்டி வைத்துவிடலாமே. இது என்ன அலுவலகத்தில் உள்ள Shared Computerஆ, எல்லாரும் ஒன்றையே பயன்படுத்த? எடுத்துக் கொண்ட கரு ஒன்று என்றாலும் அதை புதிதாக நம் பாணியில் கொடுக்க வேண்டும். 

இனி காப்பியடிக்கப்பட்ட சீன்களை பார்ப்போம். டிரெய்லரில் வந்த “சத்தமா...கேக்கல” என்ற சீன் சக்தே இந்தியா படத்தில் வரும் சீன். விளையாட்டு வீராங்கனைகள் கோச்சை எதிர்ப்பது எல்லாம், அதே சக்தே இந்தியா முதல் கனா வரை வந்த சீன்கள்தான். 


  
விஜயை எல்லோரும் கோச்சாக ஏற்றுக்கொள்ள மறுப்பர். அப்போது, “முடிந்தால் தன் காலில் உள்ள பந்தை எடுத்துக் காட்டுங்கள், நான் விலகிவிடுகிறேன்” என சபதம் செய்வார் அல்லவா, இது உண்மையிலேயே ஒரு football பிளேயர் செய்து காட்டிய வீடியோவில் இருந்து எடுத்ததை. அதே சுழற்றல்கள், அதைப் போலவே கண்களை மூடிக் கொண்டு இருப்பது, அதைப் போலவே, சட்டைக்குள் பந்தை வைத்துக் கொள்வது என ஓர்டர் மாறாமல் காப்பியடித்திருப்பார்கள். அதே போல, பின்னர் அணியின்  வீராங்கனைகளுக்கு ஒற்றுமையின் அவசியத்தை காட்ட, விஜய் கோல் போஸ்ட் விளிம்பில் பந்து போகும் வண்ணம், கோல் அடிக்க சொல்வார் அல்லவா. மிஸ் செய்தால் அணியில் உள்ள அத்தனை பேரையும் ஒரு ரவுண்டு ஒட சொல்வார், இது The Miracle Seasonல் வரும் சீன். 

வுட்பால் விளையாடும் போது, freeze ஆனது போல ஸ்லோ மோஷன் காட்சி வரும் அல்லவா, அது Pele: The Birth of a Legend என்ற நல்ல படத்தில் இருந்து சுட்டது. இது வெறும் வுட்பால் காட்சி திருட்டுக்களே. படத்தில் இன்னும் உள்ளது. சரி, “அப்ப படத்தில புதுசா ஒண்ணும் இல்லையா” எனக் கேட்கலாம். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண், துப்பட்டாவால் மறைக்கப்பட்ட தன் முகத்தை , துப்பாட்டாவை உதறி விட்டு, வெளிக்காட்டி  நடந்து வருவார், இதுதான் க்ரியேட்டிவிடி. இதைப் போல சீன்கள் படம் முழுதும் இருந்திருக்க வேண்டும் அட்லீ. “சரி, இவளோ சொல்லறியே, ஏன் நீ புதுசா ஒரு ஸ்போர்ட்ஸ் கத சொல்லேன், பார்ப்போம்” என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. ஓட்டலில் போய் சாப்பிடும் போது, “சாப்பாடு நல்லா இல்லையே” என்றால், “அப்ப நீ சமைச்சுக் காட்டு” என்பவர்கள் அல்லவா நம்ம ஆட்கள். சரி, இருப்பினும் ஒரு முயற்சி செய்வோம். இப்படி வைத்துக் கொள்வோம், விஜய் ஒரு Women’s வுட்பால் டீமின் மேனஜர். அப்படி மேனஜராக இருப்பவர் தன் தொழிலில் என்ன எல்லாம் சிக்கல்களை சந்திக்கிறார். அதை எப்படி சரி செய்கிறார், என காட்டலாம். அவர் அணியில் உள்ள எல்லோரும் நல்லவர்களாக இருக்க தேவையில்லை. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு characterகள், சிலர் நல்லவர்கள், சிலர் சந்தர்பவாதிகள். விஜயின் கதாபாத்திரமும் ஏற்ற இறக்கங்களை கொண்டதாக முழு நல்லவனாக இல்லாமல் இருக்க வேண்டும். யோசித்து பாருங்கள், உங்களுக்கு தெரிந்த 11 நபர்களை randomக நினைத்துப் பாருங்கள். எல்லோருமே நல்லவர்களா, இல்லைதானே. அப்படிதான் கதையிலும் யோசிக்க வேண்டும். அப்போதுதானே கதை சுவாரஸ்யமாக இருக்கும். யார் எப்போது பல்டி அடிப்பார்கள் என உண்மை வாழ்க்கையிலுமே தெரியாதுதானே. இதில் மேனஜர் ஒரு பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படுகிறார். அவரது அணி ஜெயித்தே ஆக வேண்டிய சூழல். நாயகன் இதற்காக என்ன தந்திரங்கள் செய்தார், எப்படி ஜெயிக்கப் போகிறார் என காட்டினால் பார்ப்பவர்களுக்கு புதிதாக ஆர்வமாக இருக்கும். 

இந்த இடத்தில் திரைக்கதை மன்னன். பாக்கியராஜ் அவர்களின் உத்தியை கையாலளாம். பாக்கியராஜ் படங்கள் பொதுவாக எப்படி இருக்கும் என்றால், முதல் பாதியில், அவிழ்க்க முடியாத முடிச்சுக்களை போட்டு விடுவார். கதையின் பிற்பாதியில், ஒவ்வொன்றாக அவற்றை justificationனோடு அவற்றை அவிழ்ப்பார். உதாரணம் சின்ன வீடுஅந்த ஏழு நாட்கள் போன்ற படங்கள். உண்மையை சொன்னால் பழைய தமிழ்படங்களை பார்த்தே நாம் திரைக்கதை உத்திகளை கற்றுக்கொள்ளலாம். அட இவையெல்லாம் தேவையில்லை. அதே பிகில் படத்தில், final போட்டியில் விஜயின் அணி தோற்பது போல காட்டலாம். தோற்றாலும் நம்பிக்கையை தளரவிடாமல் இன்னும் வலிமையுடன் வந்து, அடுத்த வருடம் அவர்கள் கோப்பையை வெல்கிறார்கள் என படத்தின் மிட் க்ரெடிட் சீனில் காட்டியிருக்கலாம். ஒரு புது முயற்சியாக இருந்திருக்கும்.

“டிரெய்லரை பார்த்து விட்டே, அதான் விஜய் கோச் பண்ற டீம் ஜெயிச்சுருமே”...என்று சொல்லும்படியோ அல்லது தியேட்டரில் “சீக்கிரம் கப்ப ஜெயிச்சு, படத்த முடிங்கடா” என ரசிகர்கள் விரக்தியில் கூச்சல் போடும் வண்ணமோ கதை இருக்கக் கூடாது. செய்யும் தொழில் பக்தியாபவும் தயாரிப்பாளரின் பணத்திற்கு பொறுப்பாகவும் ரசிகர்களுக்கு உண்மையாகவும் இருக்க வேண்டும்...

“கதை முக்கியம் பிகிலு”

தொடர்ந்து இதைப் போன்ற கட்டுரைகள் வேண்டுமா? அடுத்து எந்த படத்தைப் பற்றி நீங்கள் பார்க்க விரும்புகீறீர்கள்? நீங்கள் பார்த்த, தமிழ் காப்பி கெட் திரைப்படங்கள் என்னென்ன? கீழே comment செய்யுங்கள்.

No comments

//]]>