Related posts

Breaking News

ரஜினிகாந்த் vs தந்தை பெரியார், பிரச்சினைதான் என்ன?



கடந்த சில நாட்களுக்கு முன்னர், நடிகர் ரஜினிகாந்திற்கு எதிராக, பெரியாரின் தொண்டர்கள் பலர் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தினர். திராவிட கட்சிகளும் இப்போராட்டத்தில் துணை நின்றன. ரஜினிகாந்த், பெரியாருக்கு எதிராக கூறிய கருத்துதான், இதற்கு காரணம் என போராட்டக்காரர்கள் தரப்பில் கூறப்பட்டது. உண்மையில் என்னதான் நடந்தது, விரிவாகப் பார்க்கலாம்.

ரஜினிகாந்த் அவர்கள், ஜெயலலிதா அம்மையாரின் மறைவுக்கு பின்னர், வெளிப்படையாகவே தான் அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்திருந்தார். ரஜினி போன்ற பெரிய ஆளுமைகள் மட்டுமல்லாது, வீதியில் வெறுமெனே திரியும் குஞ்சுக்குளுவான்கள் கூட, தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருப்பதாகவும், அதனை தாங்கள் நிரப்பப் போவதாகவும் கூறிக் கொண்டு திரிந்தனர். ஜெ அவர்களின் காலத்தில் பெட்டிப் பாம்பாட்டம் அடங்கியிருந்தவர்கள் எல்லோருமே இப்போது வெளியே தைரியமாக வாய் சவடால் விட்டுக் கொண்டு திரிகின்றனர் என்பது தனிக்கதை.

இப்படியாக சில வருடங்கள் கடந்து விட்ட நிலையில், கடந்த வாரம், துக்ளக் பத்திரிகையானது தனது 50ம் ஆண்டு நிறைவையொட்டி நடைபெறும் விழாவிற்கு ரஜினிகாந்த் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். அதில் ரஜினி அருமையானதொரு உரையை நிகழ்த்தியிருந்தார். அவ்வளவு தெளிவாக, கையில் துண்டு சீட்டை வைத்துக் கொண்டு அசடு வழியாமல், வாய் குழறாமல், கடந்த கால சம்பவங்களை கோர்த்து நன்றாகவே உரையாற்றியிருந்தார். உரை நிகழ்த்திய அன்றே, நான் அதை பார்த்து விட்டு பிரமித்துப் போனேன். ஏனெனில், 70 வயதில் என்னால் இப்படி ஒரு உரை நிகழ்த்த முடியுமா என்பது சந்தேகமே!


இந்த உரையில் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், இரண்டு விஷயங்கள் மிகமுக்கியமாக ஹைலைட் செய்யப்பட்டன. ஒன்று; ரஜினி, முரசொலி வாசிப்பவர்கள் தி.மு.க காரர்கள் என்றும் துக்ளக் வாசிப்பவர்கள் அறிவாளிகள் என்றும் கூறியிருந்தார். “ஓ, இவர் சாடைமாடையாக எங்களைதான் முட்டாள் என்கிறார்” என நினைத்துக் கொண்ட தி.மு.க காரர்கள் அந்த இடத்திலேயே காட்டமடைந்து விட்டனர். இரண்டு; இதுதான் முக்கியமான சர்ச்சையை உண்டு பண்ணியது. துக்ளக் பத்திரிகையானது, தன் எதிர்ப்பாளர்களின் மூலமாகவே எப்படி வளர்ச்சியடைந்தது என கூறும் பொழுது, 1971ல் சேலத்தில், சீதை மற்றும் இராமரின் உருவ பொம்மைகளை, நிர்வாணமான முறையில் செருப்பு மாலை அணிவித்து, பெரியார் ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டார் என்றும், அதனை ஏனைய பத்திரிகைகள் எழுதாத வேளையில், துக்ளக் மாத்திரமே அந்த விஷயத்தை வன்மையாக கண்டித்து, அட்டைப் படத்திலேயே அதனை தெரிவித்து இருந்தனர் என்று கூறியிருந்தார். பின்னர், தி.மு.க அரசு அப்பத்திரிகை வெகுஜன மக்கள் கையில் கிடைக்கக் கூடாதென அதனை சீஸ் செய்திருந்தாகவும் கூறினார். 


பிரச்சினையே இங்கேதான் ஆரம்பித்தது. 1971ல், ரஜினி கூறியது போன்றதொரு சம்பவம் நடக்கவேயில்லை, தவறான தகவலைக் கொண்டு பெரியாரை அவமதித்து பேசியதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என, பெரியாரிஸ்டுகளும் தி.மு.க ஆதரவாளர்களும் கண்டன போராட்டம் ஒன்றை மேற் கொண்டிருந்தனர். பின்னர், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ரஜினி, தான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என அழுத்தந்திருத்தமாக கூறியிருந்தார். மேலும் அவர், தன்னிடம் ஆதரம் இருப்பதாகக் கூறி, சில பத்திரங்களையும் பத்திரிகையாளர்களிடம் காட்டினார். இதில் ரஜினி செய்தது சரி என ஒரு குழுவும், “இல்லை, இல்லை” அவர் செய்தது பிழையென ஒரு குழுவும் தங்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். சரி, இந்த சம்பவம் மூலம் யார் யாருக்கெல்லாம் ஆதாயம் என அலசலாம். 


ரஜினி காந்த் சென்றதோ துக்ளக் பத்திரிகையின் 50ம் ஆண்டு விழாவிற்கு, தான் அங்கு கதைப்பதையெல்லாம் மக்கள் கவனித்துக் கொண்டிருப்பர் என அவர் அறிவார். அப்படியிருக்கையில், துக்ளக் பத்திரிகையை புகழ வேண்டும் என்பதற்காக, ஆரம்பம் முதலே தி.மு.கவிற்கு எதிரான கருத்துக்களை சொல்லிக் கொண்டுதான் இருந்தார். தமிழ்நாடு திராவிட கட்சிகளால் மாறிமாறி ஆளப்பட்டாலும், இங்கிருப்பவர்கள் பலரும் ஆன்மீகவாதிகள், கடவுளின் மீது நாட்டம் கொண்டவர்கள் என்பதை ரஜினி நன்கறிவார். இதனால் கண்டிப்பாக, ஒரு பெரிய வாக்கு வங்கியையே இப்போது தன் பக்கம் சாய்த்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இது தெரிந்து நடந்ததா, தற்செயலாக நடந்ததா என்பது அவருக்கே வெளிச்சம். யோசித்து பாருங்கள், தமிழ்நாட்டில் இப்போது இருக்கும் அரசியல் கட்சிகளில் பெரும்பாலனவை திராவிடம் சார்ந்தவை. வெளிப்படையாக கடவுளை ஏற்க மறுப்பவர்கள். ஆக, இதை எதிர்க்கும் ஒருவர் வந்தால், தமிழ்நாட்டில் சாமி கும்பிடும் அனைவரின் வாக்கையும் கவர் செய்து விடலாம்தானே. இந்த சிம்பிள் ஐடியா இத்தனை காலமாக யாருக்கும் தோன்றவில்லை பாருங்கள்! அடுத்து, ஏன் பெரியாரிடம் உள்ள அத்தனை நல்ல விடயங்களைப் பற்றி கூறாமல், இந்த ஒரு விடயத்தைப் பற்றி ரஜினி உரையாட வேண்டும். பார்ப்போம்.

ஆங்கிலத்தில் Grundnorm/Basic norm என்றொரு வழக்கு உள்ளது. அதாவது, அத்தனை விடயங்களுக்குமே தலைமையான அடிப்படையான ஒரு விடயம் இருக்கும். கற்பனையாக ஒரு உதாரணம், உங்கள் ஏரியாவில் ஒரு தாதா இருக்கிறான் என வைத்துக் கொள்ளுங்கள். அவன் எதேனும் ஒரு அமைச்சரின் ஆதரவின் கீழ் செயற்படுகிறான். அந்த அமைச்சர், கட்சித்தலைவரின் கீழ் செயற்படுவான். அந்த கட்சி தலைவன், நாட்டிலேயே பெரிய அரசியல்வாதியின் ஆணைக்கிணங்க வேளை செய்வான். ஆக அந்த தாதாவை இல்லாமல் ஆக்க வேண்டுமெனில், அவனுடன் நேராக சண்டையிடுவதை விட, அந்த நாட்டிலேயே பெரும் அரசியல் புள்ளியை இல்லாமல் ஆக்கி விட்டால், அதன் கீழ் இருக்கும் அத்தனை பேரையும் இல்லாமல் ஆக்கி விடலாம் அல்லவா? இதைப் போலவேதான், திராவிட கட்சிகளின் யாரோ ஒரு சிலரை எதிர்பதை விட, நேரடியாக, திராவிட கட்சிகளின் அடிப்டையான பெரியாரை விமர்சித்து அவரின் மவுசை குறைத்து விட்டால், நேரடியாக திராவிட கட்சிகளின் கீழ் இருக்கும் அத்தனை பேரின் மவுசயையும் குறைத்து விடலாம். இது தெளிவான அரசியல் நகர்வாகவே உள்ளது. இது தற்செயலாக நடந்தது என்றால், விட்டு விடலாம். ஒரு வேளை, திட்டமிட்டுதான் இந்த உரை நிகழ்த்தப்பட்டிருப்பின், அரசியல் வல்லுனர்களின் உதவியுடன்தான் இது நடந்திருக்க வேண்டும். 

மேலும், இது போன்ற நடிகர்களின் பேச்சுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆர்ப்பாட்டம் போராட்டம் என்று சென்றால், கடைசியில் நடிகர்களுக்குதான் மார்க்கட் ஏறும். அதிலும், குறிப்பாக இதில் ஒரு சங்கதி இருக்கிறது. துக்ளக் பத்திரிகையானது, அதனது எதிர்பாளர்களின் எதிர்ப்புகளால்தான் பிரபல்யம் அடைந்து வளர்ச்சி பெற்றதாக ரஜினி கூறியிருந்தார். அந்த உரையாடலின் பின் பலரும் ரஜினியை எதிர்க்கின்றனர். சொல்லி வைத்தாற் போல, அரசியல் தளத்தில், பெரிய மவுசு இல்லாமல் இருந்த ரஜினி காந்த் இப்போது, தனது எதிர்பாளர்களைக் கொண்டே, அரசியல் ரீதியாகவும் பிரபலமாகி விட்டார். பேனா பிடிப்பவர்களையல்லாமல், அரசியல் கற்ற மேதைகளையும் அல்லாமல், நடிக நடிகைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் இந்த நாடும் நாட்டு மக்களும், என்றுதான் கரை சேர போகிறார்களோ? ரஜினியின் பாணியில் சொல்வதானால், ஆண்டவனுக்கே வெளிச்சம்

ரஜினியின் இந்த உரையாடல் குறித்து உங்கள் கருத்து என்ன? கீழே உள்ள கமண்ட் பாக்ஸில் உங்களது கருத்துக்களை பதிவிடுக.


No comments

//]]>