Superman Review Tamil - The Best Superman Movie
என் கருத்துபடி, சமீபத்தில் நான் பார்த்த படங்களிலேயே, நல்ல படங்களில் ஒன்றாகவும், இதுவரை வந்த சூப்பர்மேன் படங்களிலேயே சிறந்த படமாகவுள்ளதை இந்த James Gunnன் சூப்பர்மேன்.
படம் தொடங்கியது முதல் எந்த இடத்திலும் தொய்வில்லாமல் செல்கிறது, குறிப்பாக வில்லனாக லெக்ஸ் லூதரை மட்டுமல்லாது, LexCorpயும் அதன் கீழ் இயக்கப்படுபவர்களையும் வில்லனாக காட்டியிருக்கும் விதம் அபாரம். நடைமுறையில் உள்ள அரசியல் நடப்புகளை திரையில் அழகாக கொண்டுவந்திருக்கிறார், சமூக வலைத்தளங்களை கையில் வைத்துக் கொண்டு மக்களை சூட்சுமமாக கட்டுப்படுத்தி காரியம் சாதிக்கும் செல்வந்தர்கள், அரசியல்வாதி என்ற பெயரில் உள்ள பப்பட்கள், மக்கள் மீது துளி கூட அக்கறை இல்லாமல் அவர்களை துன்பப்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் இவர்களது செயல்கள் என்பவற்றை பட்டவர்த்தனமாக காட்டியுள்ளார்.
சாடைமாடையாக அல்லாமல் இவ்வளவு வெளிப்படையாகவே பேசியுள்ள James Gunn பத்திரமாக உள்ளார் என நம்புகிறேன். குறிப்பாக குரங்குகளை வைத்து #hashtag கிரியேட் செய்யும் சீன்கள் எல்லாம் நன்றாக இருந்த அதே நேரம், ஒரு சில மனிதர்களை இதுபோல சொன்னதை கேட்கும் குரங்குளாய் வைத்து ஆட்டிப்படைக்கிறார்கள் என்பதை நினைக்க ஒரு பக்கம் அச்சமாகவும் இருந்தது.
காதல், காமடி, தலைமை (என்னை பொறுத்தவரை தலைமையும் ஒரு உணர்ச்சிதான்), வேதனை, எழுச்சி என எல்லா உணர்ச்சிகளையும் கணக்காக கையாண்டுள்ள அதேவேளை, ரேஷன் கடை க்யூ போல அவ்வளவு கதாபாத்திரங்கள், அத்தோடு ரோபோட்டுகள், நாய், எதில் அடக்குவதே என தெரியாத ‘சிலவன’, என அத்தனைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுத்தில் மாயஜாலம் காட்டியுள்ளார்.
திரைக்கதையில் பெரிதாக குறையென ஒன்றுமில்லை, சொல்ல வேண்டுமேன்றால் ஒன்றே ஒன்று சொல்லலாம், சூப்பர் மேனை படு வீக்காக காட்டியது. வீக்காக மட்டுமல்லாது, முடிவெடுக்க முடியாதவராகவும், மதிநுட்பம் குறைந்தவராகவும் காட்டியது. திரைக்கதையின் படி அவை சரி எனினும், சூப்பர்மேனுக்கு இது கொஞ்சம் அநியாயமே. அதன்பிறகு, லூயிஸ் லேன் அவ்வளவு கச்சிதமாக விமானம் ஓட்டுவது எல்லாம் சுத்த போங்கு.
கடைசியாக கொஞ்சம் சுயபுராணங்கள், IMAXல் நான் பார்த்த முதல் திரைப்படம் இதுதான், என்னதான் ஆரம்பத்தில் பெரிய திரை என்ற பிரமாண்டம் இருந்தாலும், போகப்போக அது மறந்து போகிறது. சலூனில் முடிதிருத்தும்போது ஓடும் சின்ன டீவியானாலும் சரி, IMAXல் பனைமர உயர திரை ஆனாலும் சரி, கண்டன்ட்தான் முக்கியம். இந்த படம் போரடிக்காமல் சென்றாதாலும் கருத்துக்களை கச்சிதமாக கையாண்டதாலும் கொடுத்த காசுக்கு மனதிற்கு திருப்தி. என்றாலும் 50% தள்ளுபடி என்பதால்தான் IMAXல் டிக்கட் வாங்கினேன், நானும் கொம்பனாக்கும்.
ஆக DCUக்கு நல்ல தொடக்கம், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
பின்குறிப்பு 1; ஒரு விடயம் ஞாபகத்துக்கு வந்தது, Action Comicsல் சூப்பர்மேன் வெளியான போது, அது அப்போது மன அழுத்தத்தில் இருந்த மக்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது, பல காலம் கழித்து மக்கள் முன் எப்போதையும் விட மன அழுத்தத்தில் அதிகமாக சிக்கிதவிக்கும் இந்த காலத்தில், இந்த சூப்பர்மேன் தன்னம்பிக்கை கொடுப்பாராக.
பின்குறிப்பு 2; இவ்வளவு அரசியல் தேவையா என்பவர்கள், உங்களை வைத்துதான் இதையெல்லாம் பண்ணுகிறார்கள் என்பதை கொஞ்சம் யோசித்து பாருங்கள். மேலும் அரசியல் சரியான விகிதத்தில் overdose செய்யாமல் கலக்கப்பட்டுள்ளது் என்பதாலும், அதுவே ஒரு entertaining satire போல உள்ளாதாலும் no issues at all.
பின்குறிப்பு 3; சிறுவர்களை கூட்டிச்சென்றால், இரண்டு காட்சிகளில் அவர்களின் கண்களை மூட வேண்டியிருக்கலாம், அல்லது ஒரு காட்சியில் கண்ணை மூடிவிட்டு, இன்னொரு காட்சியில் “ஃபோன் கீழ விழுந்துவிட்டது, குனிஞ்சு கொஞ்சம் தேடித்தா” என சொல்லலாம். Option is yours.
பின்குறிப்பு 4: என்னதான் இருந்தாலும் இதே தியட்டரில் பக்கத்து screenல் புஷ்பா 2 பார்த்த துயரத்தை நான் இன்னும் மறக்கவில்லை, அந்த ரணம் எப்போதும் ஆறாது.
சந்திப்போம், நன்றி.
No comments