Related posts

Breaking News

வேகமாக பரவிவரும் கொரானா வைரஸ், எச்சரிக்கையாக இருங்கள்


ஏழாம் அறிவு திரைப்படத்தின் ஆரம்ப காட்சிகளில், சீனாவில் ஒரு வகையான வைரஸ் தொற்று பரவி மக்கள் இறப்பது போல காட்டியிருப்பார்கள். பின்னர் பல வருடங்களுக்கு பின்னர், சீனாவை சேர்ந்தவர்கள், ஒரு நாயின் மூலமாக அந்த வைரஸை இந்தியாவிற்கு பரப்புவதாகவும் காட்டியிருப்பார்கள். அந்த ஆரம்பக் காட்சிகளில் வைரஸ் தாக்கும் போது, மக்கள் செய்வதறியாது அல்லோலகல்லோல படுவர். மேலும், அந்த நோய் தொற்றுக்கு சீனர்களிடம் மருந்துகளும் இருக்காது, பின்னர் அது இந்தியாவிற்கு பரவுவது போல் காட்டும் போது, அந்த நோய் தொற்றுக்கான மருந்து இல்லாமல் இந்திய மக்கள் கஷ்டப்படுவதாகக் காட்டியிருப்பார்கள் அல்லவா? இதே போன்றதொரு நோய் தொற்று இப்போது சீனாவில் உண்மையாகவே பரவி வருகிறது, இதனால் மக்கள் கொத்து கொத்தாக மடிந்துக் கொண்டிருக்கின்றனர். வைத்திய வல்லுனர்களோ இதற்கான நிவாரணிகளை கண்டறிய முடியாமல் திணறி வருகின்றனர். இந்த  நோய் தொற்று அண்டை நாடுகளுக்கும் பரவிவரும் நிலையில், இதனைப் பற்றி தாம் அறிந்திருக்க வேண்டியது கட்டாயமானதாகின்றது. ஆகவே இந்த கட்டுரையில் அந்த நோய் தொற்று பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். 

எங்கிருந்து பரவுகிறது


இங்கு நாம் கோழி இறைச்சி, மீன், முட்டை என்பனவற்றை உண்பது போல சீனாவில், பாம்பு வகைகளை உணவாக உட்கொள்வது அம்மக்களின் வாடிக்கையாகும். இப்படியிருக்கையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், தாய்வானில் உள்ள பாம்புகளுக்கிடையே ஒரு விதமான வைரஸ் தொற்று பரவியதாகவும், அந்த பாம்புகளை நன்றாக நெருப்பில் வாட்டாமல், அரைக்குறையாக வேகவைத்து அங்குள்ள சிலர் உண்டதால், அவர்களிடம் இருந்து தோய் தொற்று பரவியதாக ஒரு சாரர் கூறுகின்றனர். சீனாவின் அதிகார மட்டத்திலிருந்து வந்த தகவலின் படி  Wuhan (வுஹான்) என்ற பிரதேசத்தில் உள்ள கடலுணவுகளை விற்கும் சந்தையிலிருந்தே இந்த நோய் தொற்று பரவியதாக, சில ஆங்கில செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன. இந்த நோய் தொற்றானது இன்னமும், சரியாக என்ன வைரஸ் என அறியப்படவில்லை. இப்போதைக்கு இது Corona (கொரானா) என்ற வைரஸ் குடும்பத்தை ஒத்ததாக இருக்கலாம் என இதன் மூலங்களைக் கொண்டு வைத்திய வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். இது இலகுவாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு தொற்றும் தன்மையை கொண்டிருப்பதால், இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

தாக்கம்


ஆரம்பத்தில் இந்த நோய் தொற்றின் தாக்கம் பெரியளவில் இல்லாமல் இருந்திருந்தாலும், தற்சமயம் இதன் தாக்கம் வேகமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், அண்டை நாடுகளான ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா முதல் அவுஸ்திரேலியாவில் உள்ளவர்களும் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சீன மக்களோ, நோய் பரவமால் இருக்க முகமூடிகளை வாங்க வரிசை வரிசையாக திரண்டுள்ளனராம். ஆனால், மாஸ்குகள் எந்தளவிற்கு நோய் தொற்றைக் கட்டுப்படுத்தும் என கேட்டால்? பதில் சந்தேகமே. இப்போதைக்கு, 25 பேரை காவு வாங்கியுள்ள இந்த வைரஸினால் 800 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனராம். மேலும், சீனாவில் முக்கியமான பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சீன மருத்துவர்கள் இதைப்பற்றிக் கூறும் போது, மக்கள் அனைவருமே வைத்தியசாலையில் மணிக்கணக்கில் காத்திருப்பதாகவும், பயத்தில் உறைந்து போயுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்கள். 

மேலும், சீனாவின் வுஹான் பிரதேசத்தை ஒட்டியுள்ள இடங்களில் உள்ளவர்கள், விமான நிலையம் வழியாக வெளியேறாத வண்ணம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வுஹான் பல்கலைகழகத்தில் கல்வி கற்கும், தமிழ்நாட்டின், புதுக்கோட்டையை சேர்ந்த மாணவரான மணிசங்கர் என்பவரும் பாதிக்கப்பட்டுள்ளர். அவர் அங்கிருந்து வெளியேறி தாய்நாடு திரும்ப முற்பட்ட போதும், அங்குள்ள அதிகாரிகள், நோய் தொற்று வேறு நாடுகளுக்கு பரவாமல் தடுக்கும் முகமாக, அவரை வெளியேற அனுமதிக்கவில்லை. இதைப் போலவே பல இந்திய மாணவர்கள் அங்கிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும், சுற்றுலா பயணிகள், சீனாவில் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்பவர்கள் என பலரும் அங்கிருந்து வெளியேற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். போலவே, குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு வெளிநாட்டினர் உள்நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது.

எப்படி தடுக்கலாம்


உத்தியோகப் பூர்வமாக இந்த நோய் தொற்றுக்கு எந்த தடுப்பூசிகளோ மருந்துகளோ, வைத்திய வல்லுனர்களின் தரப்பில் இருந்து அறிவிக்கப்படவில்லை. அவர்கள் கூறுவதை பொருத்த மட்டில், உடலில் இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளவர்களுக்கு, இந்நோயின் தாக்கம் குறைவாக உள்ளதாக குறிப்பிடுகின்றனர். மேலும், இந்த தொற்று, தடுமல், சலி, காய்ச்சல், சுவாச அழற்சி, நியுமோனியா தாக்கம் போன்ற அறிகுறிகளை காட்டுவதனால், வழமையான வருத்தங்களில் இருந்து இதனை தனித்து கண்டறிவது சிரமமாக உள்ளது. இதில் கவலையான விடயம் என்ன வென்றால், கொரானா வைரஸ் குடும்பத்தை சார்ந்த வைரஸாக இது இருந்தாலும், இந்த வைரஸ் உண்மையிலேயே என்ன என்பதையே இன்னும் கண்டுபிடிக்கவில்லையாம். ஆதலால், சத்தான உணவுகளை உட்கொள்ளும் அதே வேளை, இறைச்சி, மீன் போன்ற மாமிச உணவுகளை நன்றாக வேகவைத்த பின்னர் உண்ண வேண்டும் என்கின்றனர். மேலும் குறிப்பாக, சீனாவில் இருந்து வந்த மக்களுடன் பழக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பவர்கள் மிகவும் எச்சரிகையாக இருப்பது நல்லது. அத்தோடு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படாத விலங்குகளோடு பழகுவதை தவிர்க்கச் சொல்லியுள்ளது உலக சுகாதாரா நிறுவகமான WHO. மேலும் ஒரு சாரரோ சீனாவின் எதிரி நாடுகேளில் ஏதேனுமொன்று, சீனாவுக்கு எதிராக உயிரியல் ரீதியான யுத்தமொன்றை நடத்துகிறதோ என சந்தேகம் தெரிவிக்கின்றனர். 

சில நாட்களுக்கு முன்புதான், அவுஸ்திரேலியாவில் காடுகள் எரிந்து பாரிய சேதத்தை விளைவித்தது. அதற்கு முன்னர்தான் அமேசான் காடுகள் எரிந்து உலகையே கவலைக் கொள்ளச்செய்தது. அத்தோடு, இப்பொழுதெல்லாம் மக்களுமே சுயநலக்காரர்களாக மாறிவிட்டனர். தான், தன் குடும்பம் என்ற வட்டத்துக்குள்ளேயே சுருங்கி விட்டனர். இவ்வாறன நிலைமைகளுக்கு மத்தியில் இது போன்ற நோய் தொற்று வேறு உலகை ஆட்டிப்படைக்கிறது. இந்த உலகம் எதை நோக்கிதான் செல்கிறது? அதன் அழிவை நோக்கியோ? பரமனுக்கே வெளிச்சம். 





No comments

//]]>