Related posts

Breaking News

Terminator:Dark Fate (2019)- Review


Terminator பட வரிசையில் அடுத்த படம்தான் இந்த Terminator:Dark Fate திரைப்படம். அதிரடி காட்சிகளுக்கு பெயர்போன டெட்பூல் படத்தை இயக்கிய டிம் மில்லர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் திரைக்கதை இலாகாவில் (Screenplay team என்பதை குறிக்கும் பழைய தமிழ் சொல்தான் ‘திரைக்கதை/கதை இலகா’) டேவிட் கோயரும் உள்ளார். டேவிட் கோயர், நோலனின் டார்க் நைட் சீரிஸுக்கு திரைக்கதை எழுதியவர்களில் ஒருவர்.  எனக்கு இறுதியாக வந்த Terminator Genisys திரைப்படம் ஓரளவு பிடித்திருந்தது, இருந்தாலும் அந்த படத்தின் கதை முத்து காமிக்ஸின் ரிப்போர்ட்டர் ஜானியின் கதைகளை விட பத்து மடங்கு இடியாப்ப சிக்கலாக இருக்கும். இதனால்தானோ என்னவோ, படக்குழுவினரே Genisys கதையை தொடராமல், இந்த Dark Fate படத்தை டெர்மினேட்டரின் இரண்டாம் பாகமான The Judgement Day படத்தின் தொடர்சியாக கதையமையும்படி வடிவமைத்துள்ளனர். 

இந்த படத்தின் கதை என்னவெனில், ஆஹ், டெர்மினேட்டரின் எல்லா பாகமும் ஒரே கதைதான். வருங்காலத்தில் டெர்மினேட்டர்கள் என்ற இயந்திரங்கள் மனிதரைகளையெல்லாம் அழித்து நாசம் செய்து கொண்டிருக்கும். சில மனிதர்கள் குழுவாக சேர்ந்து டேர்மினேன்டர்களுக்கு எதிராக போரிடுவார்கள். அவர்களில் முக்கியமானவர்களை அழிப்பதற்காக, டெர்மினேட்டர்கள் கடந்த காலத்திற்கு செல்லும். டெர்மினேட்டர்கள் கடந்த காலத்திற்கு போவது போல், மனிதர்களும் தங்கள் சார்பாக ஒரு இயந்திரத்தை கடந்த காலத்திற்கு அனுப்புவாரகள். இந்த படத்திலும் இதான் கதை+ டெர்மினேட்டர் ஜட்ஜ்மண்ட் டே படத்தின் கதையையும் உருவியுள்ளார்கள்.

கதைப்படி, ஜட்ஜ்மண்ட் டே நிகழ்விற்கு பின், சாரா கோனர் மற்றும் ஜான் ஒரு கடற்கரையில் இருப்பார்கள். அங்கே திடீரென் வரும் அர்னால்ட், அதாவது அர்னால்ட் சாயல் கொண்ட T-800 ரக டெர்மினேட்டர், ஜானை சுட்டுக் கொன்றுவிடும். நிகழ்காலத்தில் டேனி என்னும் பெண் தனது சகோதரனுடன் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, அங்கே வரும் Rev-9 ரக டெர்மினேட்டர் அவளை போட்டுத்தள்ள பார்க்கும். அப்போது, எங்கிருந்தோ திடீரென வரும் கிரேஸ் என்னும் ஒரு பெண் டெர்மினேட்டர்களுடன் சண்டையிட்டு டேனியை காப்பாற்றி கொண்டு தப்பித்துவிடுவாள். எனினும், ஒரு கட்டத்தில் கிரேஸ் மற்றும் டேனி டெர்மினேட்டரிடம் வசமாக சிக்கிவிட, சாரா கோனர் எங்கிருந்தோ குதித்து வந்து அந்த டெர்மினேட்டர்களை தற்காலிகமாக மர்கயா சாலா செய்து விடுவாள்.

பின்னர் என்ன மூவரும் ஓட, டெர்மினேட்டர்கள் அவர்களை துரத்த, கிரேஸ் டெர்மினேட்டர்களை குத்த, இந்த படத்திற்கு வந்து மாட்டிக் கொண்டோமே என நாம் கத்த, ஒரே ஜாலிதான் போங்கள்.

இந்த படத்தில் பெண் கதாபாத்திரங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். டேனி, சாரா கார்னர், கிரேஸ் இவர்களை சுற்றியே கதை நகருகிறது. இதனாலோ என்னவோ, வில்லன் கதாபாத்திரத்தையும் ஒழுங்காக கட்டமைக்க தவறிவிட்டார்கள் போல, டெர்மினேட்டர் 2ம் மற்றும் மூன்றாம் பாகத்தில் வருவது போன்ற வில்லனே இதிலும் வருகிறான். மேலும், டெர்மினேட்டர் படங்களில் எல்லாம் ஒரு கார்டியன் வருவார், அதாவது டெர்மினேட்டர் 2வில் அர்னால்ட் போல. இதில் கிரேஸ் என்ற பெண்தான் அந்த கார்டியன், Poliyo Micro Reacter கொண்டு சாதரண பெண்ணான இவளை ஒரு சூப்பர் சோல்ஜராக மாற்றியதாக அவள் சொல்வாள். அதாவது, ஒரு பெண் கேப்டன் அமெரிக்கா. இந்த கதாபாத்திரத்தை வைத்து நிறைய நல்ல காட்சிகளை எழுதியிருக்கலாம். ஆனால், உண்மையில் கார்டியனான இவளையும் சேர்த்து காப்பாற்றிக் கொண்டு ஓடுவது சாரா கோனர்தான்.

மேலும், அட்லீ போல 20 வருடங்களுக்கு முன் வந்த (Terminator 2) படத்தை பட்டி டிங்கரிங் பார்த்து கொடுத்துள்ளனர். ஆனால், அந்த படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. டெர்மினேட்டர் 2 வில் அர்னால்ட் என்ற இயந்திரத்திற்கும் ஜான் கோனர் என்ற சிறுவனுக்கும் இடையில் ஒரு  அழகான உறவு இருந்தது. படத்தின் முக்கிய அம்சமே அதுதான். ஆனால், இங்கே எந்த கதாபாத்திரங்களுக்கு இடையிலும் ஆழமான உறவு இல்லை.

நன்றாக யோசித்துப் பாருங்கள், டெர்மினேட்டர் 2க்கு பின் ஜேம்ஸ் கேமரூன் டெர்மினேட்டர் படங்களை இயக்க முன்வரவில்லை. காரணம், முன்னைய இரு பாகங்களையும் ஜஸ்டிவை செய்யும் அழுத்தமான கதை அவரிடம் இல்லை. துணை தயாரிப்பாளராகோ அல்லது துணை எழுத்தாளராகவோ அவர் ஒதுங்கியிருப்பது இதனால்தான்.

மனிதர்களாகிய நமக்கும் வீண் ஜம்பம் செய்யும் நபர்களை விட தனித்துவமான குணங்களை கொண்ட நபர்கள் மேல்தானே ஆர்வம் வரும். அதேபோல்தான், என்ன பிரமாண்டமான காட்சிகள் இருந்தாலும் திரைக்கதை அதை நியாயம் செய்ய வேண்டும். இல்லாவிடில், படம் எடுத்ததே அநியாயம் என்றாகிவிடும்.

No comments

//]]>