Related posts

Breaking News

கேப்டன் அமெரிக்கா:உள்நாட்டுப் போர்-விமர்சனம்(Captain America:Civil war-Review)


முன்னோட்டத்தைப் படிக்க Captain America:Civil war(Sneekpeak)

சமீபத்தில் வெளியாகி வசூலில் தனக்கென தனியொரு இடத்தை தக்கவைத்துள்ள மார்வெல் நிறுவனத்தின் இன்னுமொரு படைப்புதான் கேப்டன் அமெரிக்கா:பாகம் 3.
இத்திரைப்படத்தின் சிறப்பம்சம் யாதெனில் இக் கதையில் உள்ள பெரும்பான்மையான மோதல்களுக்கும் உட்பூசல்களுக்கும் காரணகர்த்தா எந்த விதமான விஷேட சக்திகளுமற்ற,அவெஞ்சர்ஸ் குழுவிலுள்ள ஒருவரைக் கூட தனித்து நின்று வெற்றி கொள்ள முடியாத ஒரு சாதரண மனிதன்தான்.அவனது பெயர் ஸீமோ.

கதை
முன்னோட்டத்தில் கூறிய அதே கதைத்தான்.திரைப்படத்தில் கொஞ்சம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.க்ராஸ் போன்ஸ்(கேப்டன் அமெரிக்காவின் எதிரிகளுள் மிக முக்கியமானவன்) என்பவன் மிகவும் ஆபத்தானதொரு உயிரியல் ஆயுதத்தை அபகரித்து தப்பியோடும் வேளையில்,நமது அவெஞ்சர்ஸ் குழுவிலுள்ள கேப்டன் அமெரிக்கா,நடாஷா ரமனாஃவ்,சேம் வில்சன் மற்றும் வாண்டா மேக்ஸிமோவ் ஆகியோர் அவனைத் தடுத்து நிறுத்துகின்றனர்.இதன் போது க்ராஸ் போன்ஸ் தான் சரணடையாமல் இருப்பதற்காக தன்னை தானே வெடிக்க வைத்துகொள்கிறான்.இதனை தடுப்பதற்காக வாண்டா முயற்சி செய்யும் போது தவறுதலாக அருகில் உள்ள கட்டிடமொன்றில் வெடிவிபத்து ஏற்பட்டுவிடுகிறது.அக்கட்டிடத்தில் இருந்தவர்கள் வாகாண்டா நாட்டினை சேர்ந்த பிரஜைகள்.இச்சம்பவமானது நாட்டிற்குள் பெரும் அச்சத்தை விளைவித்து விடுகின்றது.அவெஞ்சர்கள் மீது மக்களிடம் உள்ள நன்மதிப்பை குறைத்து பயத்தையும் வெறுப்பையும் மேலோங்கச் செய்கின்றது.ஏற்கனவே அவெஞ்சர்களினால் நாட்டிற்கும் மக்களுக்கும் பாரிய அளவிலான நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடக்காது இருக்க வேண்டுமெனில் அவெஞ்சர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் அவர்களது ஆணைக்கிணங்க செயலாற்ற வேண்டுமெனவும்,விசேட திறன் கொண்டவர்கள் மற்றும் ஏனைய அவெஞ்சர்கள் இதற்கு உடன்பட வேண்டுமெனவும் அவ்வாறு உடன்பட மறுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு அறிவித்து விடுகின்றது.

தன் தவறுகளை உணர்ந்த நிலையில் இருக்கும் டோனி ஸ்டார்க் இதற்கு உடன்படுகிறார்.அவருடைய கருத்திற்கு ஒரு குழுவினர் ஆதரவளிக்கின்றனர்.ஆனால் கே.அ மற்றும் இன்னும் சிலர் தங்களது தனித்தன்மையையும் அடையாளத்தையும் இழந்து தன்னை பற்றிய ரகசியங்களும் வெளிவருவதை விரும்பவில்லை.ஆகையால் இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திட மறுக்கின்றனர்.இவ் ஒப்பந்தத்தைப் பற்றிய மாநாடு வியன்னாவில் நடைபெறுகிறது.மாநாடு நடைபெறும் வேளையில் அவ்விடத்தில் பாரிய வெடி விபத்து ஏற்பட்டுவிடுகிறது.இவ்விபத்தில் வாகாண்டா நாட்டின் மகாராஜா டி'சாக்கா இறந்துவிடுகிறார்.பழி விண்டர் சோல்ஜரான பக்கி பான்ஸ் மீது திணிக்கப்படுகிறது.பக்கியை சிறைப்பிடிக்க அமெரிக்க அரசு தீர்மானிக்கிறது.அவனை பிடிப்பதற்காக ஒரு குழு அனுப்பப்படுகிறது.ஆனால் பக்கி நிரபராதி என நம்பும் கே.அ பக்கி தப்பிப்பதற்கு உதவி செய்கிறார்.இதனால் அரசாங்கம் கே.அ மற்றும் அவருக்கு உதவி செய்யும் ஏனையவர்களையும் குற்றவாளியாக அறிவிக்கிறது.இவர்களை கைது செய்வதற்காக டொனி ஸ்டார்க் தலைமையிலான குழு செல்கிறது.இவர்களிடம் இருந்து கே.அ தப்பித்தாரா,பக்கியை நிரபராதி என நிருபித்தாரா என்பதே மீதிக்கதை.இந்த கதைக்கும் ஸீமோவுக்கும் உள்ள தொடர்பு என்ன என நீங்கள் கேட்கலாம்.இருக்கிறது,அவெஞ்சர்ஸ் இரண்டாம் பாகத்தில் சோக்கோவிய நாட்டில் நடந்த தாக்குதலால் தனது குடும்பத்தை இழந்தவன்தான் ஸீமோ.அவனால் அவெஞ்சர்களுடன் தனித்து நின்று போட்டியிட முடியாது.அதனால்தான் அக்குழுவை இரண்டாக உடைத்து அவர்களுக்குள்ளேயே மோதல்களை ஏற்படுத்துகிறான்.இதற்காக பக்கியை பகடைக்காயாக பயன்படுத்துகிறான்.எவ்வாறு என்பதை திரையில் காண்க.

ரூஸோ சகோதரர்கள் மிக இலகுவாக ஜாலியாக திரைக்கதையை எழுதியுள்ளனர்.இதுதான் பலரது கருத்தும் கூட.ஆனால் இதனை எழுதுவதற்காக அவர்கள் பட்ட சிரமங்களை அறிந்தவர்கள் அவ்விருவர் மட்டுமே.திரைப்படமும் நன்றாகவே வந்துள்ளது.ஒவ்வொரு சூப்பர் ஹீரோக்களும் யாருடைய குழுவில் இணைக்கிறார்கள் என்பதற்கான காரணம் கதையில் சொல்லப்பட்டுள்ளது.அதில் ப்ளெக் பென்தர்,டோனி ஸ்டார்கோடு இணைவதற்கான காரணம் மிகவும் ஆணித்தரமானது.ஆனால் ஸ்பைடர் மேன் டோனியோடு இணைவதற்கான காரணம் மிகவும் சில்லியானது.ஸ்பைடர் மேனைதான் குறைந்தளவில் பயன்படுத்தியுள்ளார்கள்.அதுவும் ஸ்பைடர் மேனை அதிகம் நகைப்பூட்டும் ஒரு பாத்திரமாக காட்டியுள்ளனர்.ஒரு சிலருக்கு இது பிடித்திருந்தாலும் எனக்கு ஏமாற்றமாகவே இருந்தது.காரணம் சிறு வயதிலிருந்து நான் பார்த்து ரசித்து கதாபாத்திரங்களுள் முதன்மையானது ஸ்பைடர் மேன்தான்.நிறைய ஆக்ஷன் கொஞ்சம் நகைச்சுவை இதுதான் அவரது ஃபார்முயூலா.இத்திரைப்படத்தில் ஸ்பைடர் ஆக்ஷனை விட அதிகமாக காமெடிதான் பண்ணுகிறார்.மற்றபடி அனைத்தும் பிரமாதமாக உள்ளது.


அடுத்த மார்வெல் திரைப்படமான தோர்:பாகம் 3க்கான ஹிண்ட் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.மற்றும் போஸ்ட் க்ரடிட் சீனில் ப்ளாக் பேந்தர் திரைப்படத்திற்கான கதைக்களம் கூறப்பட்டுள்ளது.இன்னுமொரு க்ரெடிட் சீனில் Spiderman:Home Coming திரைப்படத்திற்கானதொரு காட்சி காட்டப்பட்டுள்ளது.இதன்மூலம் அத்திரைப்படத்தில் ஸ்பைடர் மேனுடன் அயன்மேனும் இணைவார் என எதிர்பார்க்கலாம்.

படம் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் அதேவைளை ஒரு சில இடங்களில் துப்பறியும் கதை போலவும்(கேப்டன் அமெரிக்கா:விண்டர் சோல்ஜரில் கையாண்ட உத்தி) எவ்வித குழப்பமுமின்றி பயணிக்கிறது.மார்வல் ரசிகர்கள் மட்டுமன்றி அனைவரும்(ஸாக் ஸ்னைடர் கூட) பார்த்து ரசிக்கலாம்..!
No comments

//]]>