Related posts

Breaking News

சிவகார்த்திகேயனை நெகிழ வைத்த பாடகர் திருமூர்த்தி



திறமைக்கு வரும் தடைகள் பல. அதில் மிகுந்த கடினமான தடை அதை காட்டுவதற்கு தகுந்த மேடை பலருக்கும் கிடைக்காமல் போவதுதான். உரிய மேடைகளில் காட்டப்படாத திறைமைகள் பாராட்டு பெறாமலே ஒதுக்கிவைக்கப்படும் தருணங்கள் பலவற்றை நாம் கண்டிருக்கிறோம். 

அப்படிதான் இந்த திருமூர்த்தியும், தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நொச்சிப்பட்டி என்னும் சிறிய கிராமத்தில் வாழும் இவர் பிறவியிலேயே கண்பார்வையை இழந்தவர்.  பிறந்த சில நாட்களில் அவரது அன்னையும் அவரை விட்டு சென்று விட, ஆதரிப்பார் யாரும் இன்றி வளரும் இவர், முயன்று முட்டி மோதி கொஞ்சம் கொஞ்சமாக இசைக் கற்றுக்கொள்கிறார். 

மேலும் தான் கேட்ட குரல்களையெல்லாம் மனதில் நிறுத்தி மிமிக்கிரி செய்வதிலும் தேர்ந்தவராக தன்னை வளர்த்துள்ளார். விஜயகாந்த் முதல் ஜெயலலிதா வரை அச்சு அசலாக மிமிக்ரி செய்து அசத்துகிறார் இந்த திருமூர்த்தி.

எத்தனை திறமைகள் இருந்தாலுமே அதை உலகிற்கு காட்ட உகந்த மேடை ஒன்று கிடைக்க வேண்டுமல்லவா? பாடுவதில் மிகுந்த மோகம் கொண்ட இவர் டி.இமானின் இசையில் அமைந்த "கண்ணான கண்ணே" என்னும் பாடலைப் பாட, அதை ஒரு  காணொளியாக பதிவு செய்த நெட்டிசன் ஒருவர், டிவிட்டரில் அதை ஷேர் செய்கிறார்.

பலரும் அதைக்கண்டு அதிசயிக்க, டிவிட்டரில் திருமூர்த்தி பாடிய பாடலின் காணொளி இமானுக்கும் சென்று சேர்கிறது. அவரை தேடிக்கண்டுபிடித்த இமான் அவருக்கு தனது படத்தில் பாட வாய்ப்பளித்துள்ளார்.

மேலும் சன்டிவியில் வெளியான நம்ம வீட்டுப்பிள்ளை சிறப்பு நிகழ்ச்சியில்  மேடையேறி இசையமைப்பாளர் டி.இமான், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி முன்னிலையில் "கண்ணான கண்ணே" பாடலையும் பாடி அசத்தியுள்ளார்.

இவரது பாடலைக் கேட்ட சிவகார்த்திகேயன் இவரை கட்டியணைத்து முத்தமிட்டு தனது அன்பை பரிமாறினார். வருங்காலங்களில் இவரது குரல் தனது திரைப்பட பாடல்கள் வாயிலாக மக்களை சென்று சேரும் என இசையமைப்பாளர் டி.இமான் அறிவித்தார்.

கண் தெரியாமல், உறவுகள் இன்றி கஷ்டப்பட்ட இவர் தானாகவே இசையைக் கற்றுக்கொண்டு தனது இலட்சியத்தை விடாமல் பிடித்து தன்னை தானே செதுக்கி முன்னேறி வந்துள்ளார் என்னும் போது, நாம் நமது பாதைகளில் பயணிக்க இன்னும் முயற்சி மேற்கொள்ளாமல் இருக்க வழிமறிக்கும் தடையும் ஒரு தடையோ?

No comments

//]]>