Related posts

Breaking News

தோர்கல்- சிகரங்களின் சாம்ராட்

Photo Courtesy: lion-muthucomics.blogspot.com
தமிழில் நல்ல fantasy புத்தகங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அதிலும், முக்கால்வாசி புத்தகங்கள் சாமியார், பூசாரி என பழைய இந்திரா சௌந்தர்ராஜன் ஸ்டைலில் இருக்கும் அல்லது வெளிநாட்டு புத்தகங்களின் மொழிபெயர்ப்பாக இருக்கும். தமிழ் காமிக்ஸை பொறுத்தவரையிலும், நல்ல fantasy கதைகள் பெரிதாக அமைந்ததில்லை. ஆனால், அத்தி பூத்தாற் போல தோர்கல் என்னும் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட காமிக்ஸ் தொடர்கள், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு முத்து காமிக்ஸின் பேனரின் கீழ் இப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதில் சிகரங்களின் சாம்ராட் என்னும் கதை, வாசிக்காமல் கிடப்பிலேயே இருந்து வந்தது. அதனை வாசிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. அதனைப் பற்றி இப்போது பார்ப்போம். 

சிகரங்களின் சாம்ராட், என்ற தலைப்பிலான இந்த புத்தகத்தில் தோர்கலின் மூன்று கதைகள் இடம் பெற்றுள்ளன; ஒரு தேவதையின் கதை, சிகரங்களின் சாம்ராட் மற்றும் ஓநாய் குட்டி. இந்த மூன்றுமே வித்தியாசமான கதைகளாகும். ஒரு தேவதையின் கதையில், தோர்கலின் சிறு பிராயம் பற்றி கூறப்பட்டுள்ளது. இங்கு முக்கியமான கதாபாத்திரம் ஆரிசியா என்ற சிறுமி. ஆரம்பத்தில், தோர்கல் ஆரிசியாவை காப்பாற்றுவதாக தொடங்கும் கதை, பின்னர் ஆரிசியா எப்படியெல்லாம் மதி நுட்பமாக தோர்கலையும் அவளை சுற்றியுள்ள நபர்களையும் காப்பாற்றுகிறாள் என செல்கிறது. 



Photo Courtesy: lion-muthucomics.blogspot.com
நோர்ஸ் கடவுள்கள் பற்றிய பல குறிப்புக்கள் இதனில் உண்டு. விக்ரிட் என்ற கடவுளும் இதில் ஒரு கதாபாத்திரமாக வந்து போகிறார். மேலும் குறிப்பாக, தோர் பற்றியும் இக்கதையில் கூறப்பட்டுள்ளது. இதில் அடுத்த கதைதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுதான், புத்தகத்தின் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ள சிகரங்களின் சாம்ராட். இது ஒரு டைம் டிராவல் ரக கதையாகும். குறிப்பாக டைம் டிராவல் கதைகளில், ஒரே விஷயம் மீண்டும் மீண்டும் நடப்பதாக இருக்கும். உதாரணத்திற்கு Edge of Tomorrow. இதுவும் அதைப் போன்ற கதைதான், ஆனால்  இதில் ஒரு சிறு வித்தியாசம் உள்ளது. ஒவ்வொரு முறை காலப் பிரயாணம் செய்யும் போதும் வெவ்வேறு விதமான விளைவுகள் வந்து கொண்டிருக்கும். கொஞ்சம் பிசகினாலும் மொத்தமாக பிழைத்து விடக் கூடிய கதையை, பெரிய முரண்கள் இல்லாமல் சொல்லியுள்ளார் எழுத்தாளர் வான் ஹாம்மே. 

காலப் பிரயாணம் என்ற தொனிப் பொருளே முரண்பாடுகள் நிறைந்ததுதான். ஆக பெரிதாக யோசித்து மண்டையை போட்டு குழப்பிக் கொள்ளாமல் இருந்தால், கண்டிப்பாக இது படிப்பவருக்கு நல்ல அனுபவத்தைத் தரும். மேலும், ஒநாய் குட்டி, கொஞ்சம் ஆக்‌ஷன் தெறிக்கும் கதை. இந்த மூன்று கதைகளுமே, பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறிப்பிட வேண்டிய அம்சமாகும். அதிலும் குறிப்பாக சிறுமி ஆரிசியாவின் கதாபாத்திரம் எழுதப்பட்ட விதம் நன்றாக இருந்தது. 



Photo Courtesy: lion-muthucomics.blogspot.com
நல்ல பொழுது போக்கான கதை, அருமையான ஓவியங்கள் என கிட்டதட்ட ஆங்கில டீ.வி சீரிஸ் பார்த்தது போல இருந்தது. வான் ஹாம்மேவின் இந்த கதை, முத்து காமிக்ஸின் 47வது ஆண்டு மலராக வெளியிடப்பட்டது (கிட்டதட்ட என் வயதின் இரு மடங்கு). இந்த 2020தோடு 48 வயதாகிறது முத்து காமிக்ஸிற்கு. தமிழ் காமிக்ஸ் என்னும் மிக மிகச் சிறிய சந்தைப் பரப்பில், வெளிநாட்டு காமிக்ஸ்களுக்கு ராயல்டி பணம் செலுத்தி அதை வாங்கி, தமிழில் மொழி பெயர்த்து, அதை தரமான புத்தக வடிவில் வெளியிட்டு, மூல புத்தகங்களின் விலையை விட கம்மியான விலையில் விற்று, இத்தனை ஆண்டுகாலம் தாக்கு பிடிப்பது என்பது சாதரணமான விஷயமல்ல. அதிலும் இப்படியான நல்ல கதைகளை தேடியெடுத்து வெளியிடும் இவர்களை கண்டிப்பாக பாராட்டலாம். வாங்க விருப்புவர்கள் கீழே உள்ள லிங்கில் சென்று பார்க்கலாம்.
lioncomics.in/thorgal/567-sigarangalin-samrat.html

No comments

//]]>