Related posts

Breaking News

முதல் மரியாதைதமிழில் ஆகச்சிறந்த நல்ல திரைப்படங்கள் வந்த காலக்கட்டமாக நான் கருதுவது 80’களைதான். நான் 90’களின் இறுதிப் பகுதியில் பிறந்து நகர் புற சூழலில் வளர்ந்திருந்தாலும், அந்த காலக் கட்ட படங்கள் குறிப்பாக அன்றைய கால மனிதர்களின் கடும் சிக்கலற்ற இலகுவான வாழ்க்கை முறை, வெளிப்படையான தன்மை, கிராமங்களில் வீசும் மண்வாசம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் திரைப்படங்கள் எனது மனதை கவர தவறுவதில்லை. இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் அன்றைய கமர்ஷியல் படங்கள், இலகுவான கதை, தெளிவான தொய்வற்ற திரைக்கதை, கதாபாத்திரங்களுக்கு இடையேயான உறவு முறைகள் எழுத்தப்பட்ட விதம், உருப்படியான வில்லன்கள் என்ற அம்சங்களோடு அருமையாக கையாளப்பட்டிருக்கும். சத்தியமாக சொல்லுங்கள், 80’களில் கமர்ஷியலில் கமலும் ரஜினியும் தொடாததையா இன்றைய தலைமுறை நடிகர்கள் தொட்டுள்ளனர் அல்லது பாரதிராஜவும் பாலச்சந்தரும் எடுத்த உலக சினிமாக்களை இன்றைய தமிழ் படைப்புக்கள் ஏதேனும்தான் மிஞ்சிச் செல்கிறதா.

தமிழ் சினிமாக்களின் பொற்காலத்தில் வந்த பொன்னான படங்களுள் ஒன்றுதான் இந்த முதல் மரியாதை. பாரதிராஜாவின் உன்னதமான படைப்பு, அதனை உண்மையாக உன்னதம் என நிரூபித்த இளையராஜா அவர்களின் இசை, மிகையற்ற சிவாஜி கணேசனின் நடிப்பு என்பன படத்தின் தூண்கள். பல நாட்களுக்கு பின் சிவாஜி கணேசன் அவர்களுக்கு ஒரு மாபெரும் வெற்றிப்படம். ஆரம்பத்தில் இந்த படத்தை வாங்க எவருமே முன்வராத நிலையில் இளையராஜா அவர்களின் இசை படத்தின் வெளியாவதற்கு பிரதான பங்கு வகித்தது.

படத்தின் கதை என்னவென்றால்,  ‘உள்ளே அழுது வெளியே சிரிக்கும்’ வாழ்க்கையை வாழும் ஊர் பெரியவரான மலைச்சாமி(சிவாஜி), அண்டை ஊரில் இருந்து வந்த குயில்(ராதா) உடன் கொண்டிருக்கும் காதல் என்று மட்டும் வரையறுத்து சொல்ல முடியாத அன்பினாலானதோர் அழகிய, அப்பழுக்கற்ற உறவை சொல்லும் கதைதான் இந்த திரைப்படம். மலைச்சாமி அவரது மனைவியிடம் காணத அன்பை குயிலிடம் கண்டடைகிறார். அவரது தேடலெல்லாம் அன்பான, அரவணைப்பான வார்த்தைகளே. கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து மண வாழ்க்கையில் நிம்மதி இல்லாத மலைச்சாமி குயில் மீது வைக்கும் அன்பை ஊரார் வேறு விதமாக ஏளனமாக பேச “ஆமாம், அப்படித்தான்” என அவர்  பஞ்சாயத்தை முடிக்கிறார். 

இன்னொரு புறம், படத்தின் மிக முக்கியமான அம்சமான அதன் துணைக்கதையை எடுத்துக் கொண்டால், மலைச்சாமியின் உறவுக்கார பையனும், தாழ்ந்த சாதி என கூறப்படுகின்ற ஒரு சாதி பெண்ணும் கொண்ட காதலை சொல்கிறது இக்கதை. இவற்றோடு திடீர் திருப்பங்கள், ஏமாற்றங்கள், வலிகள் என்பனவும் இப்படத்தில் உண்டு. அதற்காக இது புரட்சி காவியமோ, அழுவாச்சி காவியமோ அல்ல. மலைச்சாமி செய்யும் சேட்டைகள், கதாபாத்திரங்களுக்கு இடையிலான துடுக்கான வசனங்கள் என செழிப்பாக படத்தை கையாண்டிருப்பார் பாரதிராஜா.

படத்தை கையாண்ட விதத்தில் சில பிரச்சினைகளும் உண்டு, துணைக்கதையில் வரும் நடிகர்களுக்கு அவ்வளவாக நடிப்பு வரவில்லை, அத்தோடு அந்த பெண் வெட்கப்படும் காட்சிகள் மற்றும் ராதாவும் சிவாஜியும் வானுக்கும் பூமிக்குமாக வாய் விட்டு சிரிக்கும் காட்சிகளும் படத்தில் இருக்கின்றன. ஆனால், இன்னொரு பக்கம் யோசித்தால் இவைதான் இப்படத்தை பாரதிராஜாவின் படமாக தனித்து காட்டுகிறது. நடிக்க தெரியாததல்தான் அந்த கதாபாத்திரங்களின் வெள்ளந்தி குணம் நமக்கு கடத்தப்படுகிறது.

இந்த படத்தின் இசையைப் பற்றி ஒரு தனிப் புத்தகமே எழுதலாம். இங்கே சுவாரஸ்யம் என்னவெனில், இளையராஜா அவர்கள் பாலசுப்புரமணியத்திற்கு பதிலாக மலேசியா வாசுதேவனை பாட வைத்திருப்பார், அது பாடலுக்கும் சிவாஜியின் தோற்றத்திற்கும் அத்தனை கச்சிதமாக இருக்கும். இலகுவாகச் சொன்னால் இலத்திரனியல் ஓசைகள் குறிப்பாக நவீன காலத்தின் Digital Pluginsகளின் இம்சை இல்லாத அற்புதமான இசை. சத்தியமாக இந்த இயற்கையான ரம்மியமான இசையை எதிர்காலத்தில் எவரும் படைக்கப்போவதில்லை. நேரமிருந்தால் Youtubeல் இப்பட பாடல்களை கேட்டு மெய் மறந்து போங்கள்.

இன்று வெளிவரும் ஒரு சில தரமான படைப்புக்களும், உதாரணத்திற்கு விக்ரம் வேதா,வட சென்னை, அசுரன் மற்றும் கைதி போன்ற படங்களும் கூட வன்மம், பழிவாங்குதல், குரோதம் போன்றவற்றைதான் படம் பிடிக்கிறது. உண்மையான, எந்த எதிர்பார்ப்பும் அற்ற காதலை, அன்பை கடைசியாக எந்த சம கால திரைப்படதில் பார்த்தேன் என்பதே மறந்து விட்டது (தயவு செய்து ஓ.கே கண்மனி, பியார் பிரேமா காதல் போன்றவற்றை இதற்குள் சேர்க்காதீர்கள்). 80’களில் முதல் மரியாதையின் கதை என்பது கண்டிப்பாக ரிஸ்க்தான். ஆனால் அந்த கால மக்கள் அதனை ஏற்றுக்கொண்டனர், இது அவர்களது முதிர்சியைக் காட்டும் அதே வேளை ஓ.கே கண்மனி, பியார் பிரேமா காதல் போன்ற படங்கள் தற்கால சமூகத்தின் அவசர கதியிலான அன்பு, காதலற்ற ஆனால் காதல் என்னும் போர்வை போர்த்திய போலி உறவு முறைகள் இந்த கால மக்களின் முதிர்ச்சியற்ற தன்மையையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அன்போ, காதலோ முதலில் அதற்கு சிறிதளவேனும் மதிப்பும் மரியாதையும் கொடுங்கள். 
No comments

//]]>