Related posts

Breaking News

காலம் என் காதலியோ

Image credits:magicsart.deviantart.com

நான் ஒரு பிடிவாதக்காரன்,ஆர்வக்கோளாறு,அதிகப்பிரசங்கி அத்தோடு ஒரு விஞ்ஞானியும் கூட.அதனால் தானோ என்னவோ 5ம் வகுப்பு கணக்கு பரீட்சையில் கேள்விகளுக்கு விடை எழுதியபின் எக்ஸ்ட்ரா ஷீட் கேட்டு இராசயனவியல் சூத்திரங்களையும்,இயற்பியல் விதிகளையும் எழுதிவிட்டு வந்தேன்.உண்மையிலேயே அது ரொம்ப போரிங்கான எக்ஸாம்.பதிமூன்றாம் வாய்ப்பாடெல்லாம் கேட்கப்பட்டு சிறுபிள்ளைதனமாக இருந்தது.வகுப்புகளிலும் நான் கொஞ்சம் ஓவர் டோஸாக கதைப்பதாலும் எல்லா எக்ஸாமிலும் சென்டம்தாண்டுவதாலும் கல்விமுறையிலுள்ள டபுள்,த்ரிபிள் ப்ரோமோஷன் எல்லாம் கொடுத்து என்னைவிட மூன்று வயது மூத்த என் அண்ணனின் வகுப்பில் சேர்த்துவிட்டார்கள்,அண்ணனை விட அதிக மார்க்ஸ் எடுப்பது அவனுக்கு கௌரவ குரைச்சலாகி போகவே வேறு பாடசாலைக்கு மாற்றிவிட்டார்கள்.அப்படியே ஓடி ஓடி ஒரு வழியாக காலேஜுக்கும் வந்துவிட்டேன்,அவனும் என்னுடனேயே வந்துவிட்டான்.இப்போது நாமிருவருமே பைனல் இயரில் இருக்கிறோம். நான்
கொஞ்சம் அதிக பிரசங்கி என்பதால் யாருக்குமே என்னை அவ்வளவாக பிடிப்பதில்லை.அதுவே எனக்கும் பிடித்திருந்தது.புத்தகம்,ஆய்வு,பிதற்றல் என திரியும் என்னை மனோஜ்தான் ஒரு நாள் சினிமா பார்க்க அழைத்து சென்றான்.மனோஜ் யாரென கேட்காதீர்கள்.அவன் எல்லாதெருவிலும் உள்ள ஒரு பக்கத்து வீட்டு பையன், அவ்வளவே!

சினிமா,எனக்கு சினிமா என்றால் அவ்வளவாக பிடிப்பதில்லை.அவை சோகத்தை சுகமாக்கும் சுகத்தை சோகமாக்கும்.ஒரு நாள் நல்ல மூடில் வீட்டில் இருந்த போது புன்னகை மன்னன் என்னும் படத்தை போட்டார்கள்.சந்தோஷமாக இருந்த நான் இறுதியில் கண்ணீர் வடிக்கும் படியாயிற்று.ஏன் என்று தெரியவில்லை அன்றிலிருந்து நான் சினிமா பார்ப்பதில்லை.உலகமெனும் நாடக மேடைக்குள் இன்னொரு மேடை அதிலொரு நாடகம் என்பதுபோல்தான் எனக்கு சினிமா.

சரி நான் விட்ட இடத்திற்கு வருகிறேன். அந்த படத்தின் பெயர்,7ஜி ரெயின்போ காலனி.இந்த படத்தை பார்த்துவிட்டு ஊரெல்லாம் நான் அனிதாவை தேடிக்கொண்டிருந்தேன்.எனக்கு தெரிந்த எல்லா அனிதாக்களுக்கும் கல்யாணம் முடித்திருந்தார்கள் அல்லது கமிட்டாகி இருந்தார்கள்,இதில் விதிவிலக்காக சிலர் வயதில் மூத்தவர்களாக இருந்தனர்.ஒரு நாள் டியுஷனில் அனிதா என்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்து என் அண்ணன் ஐந்து விரல்கள் பதிய அறை வாங்கியிருந்தான்.அனிதா என்ற கதாபாத்திரம் கொஞ்ச காலமாகவே என்னை கிறுக்கனாக்கி விட்டிருந்தது.சில நாட்களின் பின்னர் போதை தெளிந்து மீண்டும் காலத்தைப்பற்றிய ஆராய்ச்சிக்குள் மூழ்கியிருந்தேன்.காலப்பிரயாணம்தான் என் முதல்காதலி.அவளை அடைந்த பின்புதான் அனிதா.

அப்போதுதான் ஒரு நாள் "அனிதா" என்ற பெயர் கொண்ட தேவதை ஜுனியராக எங்கள் கல்லூரியில் வந்துசேர்ந்தாள்.இறுதியாக என் அனிதாவை இப்படித்தான் நான் கண்டுபிடித்தேன்.நம் பிரபஞ்சத்திலேயே மிக வேகமானது மனதுதான்.சூரிய ஒளி பூமிக்கு வர 8 செக்கன்கள் ஆகும்.ஆனால் மனது மைக்ரோ செக்கன்களில் சூரியனின் பிம்பத்தை நமது மனதுக்குள் கொண்டுவந்துவிடும்.என் இரண்டாவது காதலை அன்று சந்தித்தேன்,வெள்ளைச் சுடிதார் அணிந்த அந்த தேவதையிடம் என் மனது மைக்ரோ செக்கன்களில் தொலைந்து போனது.

யுனிவர்சிடியில் சையன்ஸ் லேப் மட்டும்தான் எனக்கு பரிச்சயம்.அனிதாவால் 1st இயர் வகுப்பு பக்கமும் செல்ல வேண்டியதாயிற்று.இப்போது எனக்கு தலையாய வேலைகள் இரண்டே இரண்டுதான்.காலம் பற்றிய உண்மைகளை கண்டறிவது.அனிதாவுக்கு என்மேல் காதல் வரவைப்பது.முதலில் பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொண்டு பார்த்தேன்.இரண்டிலுமே தோல்விதான்.காலப்பிரயாணம்,என் முதல் காதலி.பல வருடங்களாக அவளுக்கு பின்னால் பைத்தியம் போல் திரிகிறேன்.உள்ளுக்குள் இருப்பதை அவள் வெளிப்படையாக என்றுமே சொன்னதில்லை.அவளிடம் உள்ள இரகசியங்களை அறியதான் இந்த பரிசோதனை எல்லாமே.அவள் என்னைக் கண்டுகொள்வதாயில்லை.என் இரண்டாம் காதலி அதற்குமேல்.

"ஏன்? இப்படியெல்லாம்" என்று நேரடியாகவே கேட்டுவிட்டேன் ஒருநாள்.அனிதாவிடம் அல்ல மனோஜிடம்.நான் காட்டான் போல இருப்பதாகவும் அது  பெண்களுக்கு பிடிப்பதில்லையென்றும் மனோஜ் கூறினான்.பின்னர் ஒரு நல்ல நாளில் தண்ணீர் தெளித்து சிகையலங்காரம் எல்லாம் செய்து டிரெண்டி டிரஸ்,கூலர்ஸ் சகிதம் கொஞ்ச நாள் அவள் முன் புன்னகை மன்னனாக உலாவந்தேன்.லேசாக அவள் பார்வை என்மேல்பட்டது.ஒரு நாள் கேண்டீனில் காபி சாப்பிட்டுகொண்டிருந்தேன்.என்னைப் பார்த்து சிரித்தாள்.பதிலுக்கு நானும் புன்னகைத்தேன்.புன்னகை மன்னன் ஆகி விட்டால் இதையெல்லாம் செய்துதானே ஆக வேண்டும்.

பிரிதொரு மழை நாளில் நான் கையில் குடையுமில்லாமல் இலக்குமில்லாமல் போய் கொண்டிருந்தேன்.அனிதா என்னை பார்த்தாள்."குடைக்குள்ளே வா" என்றாள் சைகையில்.குடைக்குள்ளே இணைந்தோம்.

"ஹாய் அனிதா.என் பேரு..."

"தெரியும்,தெரியும் பேரு,ஊரு,ரெக்கார்ட்ஸு எல்லாம் தெரியும்"

"எப்படி"

"என் பேர் உங்களுக்கு எப்படி தெரியுமோ அதே மாதிரிதான் எனக்கும்"

"ஆமா,இப்பெல்லாம் அடிக்கடி கண்ணுல படுறீங்க"

"யா...சீ நீ என்ன சுத்தி சுத்தி வாரனு நல்லாவே தெரியுது.இப்பவே சொல்லிடுறேன் எனக்கு இந்த காலேஜ்குள்ள வந்த கொஞ்ச நாள்ளயே கமிட் ஆகிருச்சு.அந்த பையன் வேற யாருமில்ல,'சிவா',உங்கண்ணாதான்.
அவருக்கு உன்ன அடிக்க மனசில்லனு பக்குவமா எடுத்து சொல்ல சொன்னாரு.சொல்லிட்டேன் இனிமே உன் பாடு"

அவ்வளவுதான்.அவ்வளவேதான் அவள் சொன்னாள்.அவளுக்கும் எனக்குமான முதல் சம்பாஷனை இப்படியாகத்தான் இருந்தது.
என் காதல் ப்ரோபஸ் பண்ணாமலேய ஃபெய்லியராகி போனது.அவள் குடையோடு முன்னேறி சென்றுவிட்டாள்.

நான் தண்ணீருக்குள் போடப்பட்ட சோடியம் போல மழையில் நனைந்தும் வெடித்துக்கொண்டிருந்தேன்.என் காதல் கதை இங்கேயே முடிவடைந்திருக்க வேண்டும்.ஆனால் வேறு டைம்லைனுக்கு அன்றிரவே மாற்றப்பட்டுவிட்டது.இனிதான் கதையே தொடங்கபோகிறது.கொஞ்சம் பொறுமையாக கேளுங்கள்.
முதலிலேயே சொல்லிவிட்டேன்.நான் ஒரு பிடிவாதக்காரன்,ஆர்வக்கோளாறு இதற்கும் மேலாக நானொரு விஞ்ஞானி.நீ என்ன என்னெல்லாம் கண்டுபிடித்தாய் என்று நீங்கள் கேட்கலாம்.வீட்டில் அப்பா,அம்மா,அண்ணாவின் துணிகளையெல்லாம் மடித்து வைப்பதற்கென்று ஆளுக்கொரு மிஷின் செய்து கொடுத்திருப்பதையெல்லாம் என் கண்டுபிடிப்பு வரிசையில் சேர்த்துவிடாதீர்கள்.இன்று மாலைதான் அந்த மாயஜாலம் அல்லது விஞ்ஞானஜாலம் அல்லது என் கண்டுபிடிப்பு நடக்கப்போகிறது என எனக்கு அப்போது தெரியவில்லை.

மிகுந்த வெறுப்போடு நான் மீண்டும் லேப் பக்கம் சென்று உட்கார்ந்திருந்தேன்.கோபம் தலைக்கேற என் காலத்தை பற்றிய ஆராய்சிகளையும் காலப்பிரயாணம் சாத்தியமா என்பதை கண்டறிய நான் செய்து வைத்திருந்த மெஷினையும் கீழேபோட்டு உடைத்தேன்.அந்த இயந்திரம் 'தடார்' என்ற சத்தத்தோடு கீழே விழுந்த ஒரு ஒளி வெள்ளத்தை பாய்ச்சியது.லேபில் இருந்த ஏனைய மாணவர்கள் கத்தும் ஓசைக்கேட்டது.

மிகுந்த வெறுப்போடு நான் லேப்பக்கம் சென்று உட்கார்ந்திருந்தேன்.கோபம் தலைக்கேறியிருந்தது.

ஒரு கணம் இருங்கள்.

உடைந்த போன என் உடமைகள் எல்லாம் அதே இடத்தில் இருக்கின்றன.லேபில் ஏனையவர்கள் தம்தம் ஆராய்ச்சிகளை எவ்வித இடையூறுமின்றி செய்துக்கொண்டிருந்தார்கள்.பொறி தட்டுப்பட்டது.கால இயந்திரத்தை எடுத்துக்கொண்டு நைசாக அவ்விடத்தை விட்டு நழுவினேன்.என் கால இயந்திரம் ஒரு மோதிரம் போல இருக்கும்.என் முதல் காதலிக்கு நான் செய்த மோதிரமது.ஆக கால மோதிரத்தை  இயக்க தேவையானதெல்லாம் ஒரு குயிக் ஸ்டார்ட்,அழுத்தமான விசைதான்.வீட்டில் லேபில் வைத்து அதை திருகிய புண்ணியத்தில் குயிக் ஸ்டார்ட் செய்யும் ஒரு விசையூக்கியையும் இணைத்தேன்.அதில் ஒவ்வொரு திருகலுக்கும் ஏற்ப ஒவ்வொரு நாள் பின்னோக்கி செல்லும்படியாக பொறிமுறை ஒன்றை அமைத்தேன்.இதுதான் என் கான்செப்ட்.திருகாணியை அரைப்பங்கு திருகினேன்.

காலேஜ்.அடைமழை.தூரத்தில் அனிதா வந்து கொண்டிருந்தாள்.நான் அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.

ஆக என் அண்ணன்தான் இந்த முறையும் எனக்கெதிரி.உண்மையிலேயே என் அண்ணன் நல்லவன் கிடையாது.டியூசன் க்ளாஸ்களில் பல பெண்களிடம் திட்டு,அறை எல்லாம் வாங்கியிருக்கிறான்.பெண்களை கேவலமாக விமர்சிப்பவன்.இந்த அயோக்கியனுக்கு என் அனிதா கேட்கிறதா.இல்லை இதை தடுத்தாக வேண்டும்.

காலங்களை மாற்றினேன்.அனிதா இப்போது காலேஜ்ஜுக்கு முதன்முதலாக வருகிறாள்.அதே வெள்ளை சுடிதார்.மாறாக, என் ஆடைகளும் தோற்றமும் மாறவில்லை அப்படியேதான் இருந்தது.அவளைப் பார்த்தேன்.அடிக்கடி மனோஜின் தோளின்மேல் கைபோட்டுக்கொண்டு அவளை சைட்டித்தேன்.

ஒரு நாள் அவள் வகுப்பு முடிந்து வெளியே வந்தாள்.

"ஹாய் அனிதா.நான்..."

"தெரியும்,தெரியும் உங்க பேரு,ஊரு,ரெக்கார்ட்ஸு எல்லாம்"

"எப்படி"

"என் பேர் உங்களுக்கு எப்படி தெரியுமோ அதே மாதிரிதான் எனக்கும்"
எனக்கு பகீர் என்றது.அதற்குள்ளாகவா என் அண்ணன் கரெக்ட் செய்துவிட்டான்.

"நீங்க கமிடட்டா?" உடனடியாக கேட்டுவிட்டேன்

"ச்சீசீ,இன்னும் யார்கிட்டயும் சிக்கல.சிவா,அதான் உங்க அண்ணா அடிக்கடி என்னப் பார்த்து நெளியுறான்.உங்கள மாதிரியே அவரும் நல்லதான் இருக்காரு.பார்ப்போம் என்றாள்".

அடேய்,படுபாவி அவள் காலேஜுக்கு வந்தே 10 நாட்கள் தானேடா ஆகிறது.அதற்குள் அவள் மனதில் எப்படி ஒரு இடம் பிடித்தாய்.உனக்கு அனிருத்தின் புல்டோசர் இசையை 2000 ஹேர்ட்ஸுக்கு கூட்டி வைத்து காதுக்குள்  திணிக்க வேணுமடா.சண்டாளா

"அனிதா,சொல்றேனு தப்பா எடுத்துக்காதீங்க.எங்க அண்ணன்தான்,ஆனா அவ்வளவுக்கு ஒண்ணும் நல்லமில்ல.நான் பொய்க்கு சொல்லல சீனியர் கேர்ள்ஸ் கிட்ட கேட்டு பாருங்க என்றேன்".

அவள் "அப்படியா தப்பா ஒண்ணும் நினைக்க மாட்டேன்,நீங்களே சொல்லுங்க" என்றாள்.

என் அண்ணனை முடிந்தமட்டும் கழுவியூற்றினேன்.நீண்ட நாட்களின் பின் திருப்தியாக இருந்தது.

அவள் என்னை நேராகப் பார்த்தாள்.ஏதோ முடிவெடுத்தவளாக "சொந்த அண்ணண பத்தியே இப்படி தப்பா சொல்றீங்களே,அது உண்மையோ பொய்யோ அத சொல்ல கெம்பஸ்குள்ள ஆயிரம் பேர் இருக்காங்க.நான் நினைக்கிறேன் உங்களுக்கு என்மேல ஒரு எவக்ஷன்.நானும் பார்த்தேன் உங்க இளிப்பையெல்லாம்....."

இதற்கு மேல் வேண்டாம் மக்கழே.....பாத்திரம் கைமாறியது அவள் என்னை கழுவினாள்.முட்டாள் பெண்ணே....என் மரியாதைக்குரிய முட்டாள் பெண்ணே அவன் உண்மையிலேயே ஒரு அயோக்கியனடி.அவனை நம்பி நீ வாழ்க்கையை தொலைக்க கூடாது என்றுதான் நான் உனக்கு இதையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறேனடி.

அவ்வளவுதான்.அவ்வளவேதான் அவள் சொன்னாள்.அவளுக்கும் எனக்குமான முதல் சம்பாஷனை இப்படியாகத்தான் இருந்தது.
என் காதல் ப்ரோபஸ் பண்ணாமலேய ஃபெய்லியராகி போனது.சொல்லிவிட்டு அவள்  முன்னேறி சென்றுவிட்டாள்.

ச்சே இப்படியாகிவிட்டதே.மீண்டும் மோதிரத்தின் திருகை கிளிக்கினேன்.பத்து நாட்களுக்கு முன்னர் வந்தடைந்தேன்.இந்த முறை ஐடியாவை மாற்றினேன்.அண்ணன் குடிக்கும் காபியில் லேசாக பென்டர்மைனை கலந்து விட்டேன்.பத்து நாட்களுக்கு சாப்பிட்டதெதுவும் செமிக்காமல் ஓட்டை சட்டியாக வீட்டிலேயே கிடக்கட்டும்.

சந்தோஷமாக காலேஜீக்கு சென்றேன்.அனிதா அதே வெள்ளை ஆடை.


பார்த்தேன்.தொடர்ந்தேன்.மனோஜின் தோள்களை குத்துகைக்கு எடுத்துக்கொண்டேன்.

"என்னடா திடீர்னு ஆளே மாறிட்ட" என்றான்.
நான் புன்னகையை பதிலாக அளித்தேன்.அன்றும் அனிதா வகுப்பு முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தாள்.

"ஹாய் அனிதா.நான்..."

"தெரியும்,பேரு,ஊரு,ரெக்கார்ட்ஸு எல்லாம்"

"எப்படி"

"என் பேர் உங்களுக்கு எப்படி தெரியுமோ அதே மாதிரிதான் எனக்கும்"

"ஆமா,இப்பெல்லாம் அடிக்கடி கண்ணுல படூறீங்க"

"யா...சீ உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்,நான் மற்ற கேர்ள்ஸ் மாதிரி இல்ல.மைண்ட்ல தோணுணத நேராவே சொல்லிடுறேன்.ஐ லவ்யூ" எனச் சொல்லிவிட்டு அவள் பாட்டுக்கும் முன்னோக்கி சென்றுவிட்டாள்

அவ்வுளவுதான்,அவ்வளவேதான் அவள் சொன்னாள்.அனிதாவுடனான என் முதல் சம்பாஷனை இப்படியாகத்தானிருந்தது.லவ்வை ப்ரபோஸ் பண்ணாமலேயே சக்சஸ் செய்துவிட்டேன்.என்னடா இது காலம் மாறுனா வாழ்க்கை இவ்வளவு சிம்பிளா மாறுமா என நினைத்தேன்.

குதூகலமாக இருந்தது.அப்படியே "வான் மேகம் பூப்பூவாய் தூவும்" எனப் பாடிக்கொண்டே வீட்டிற்கு வந்தேன்.அண்ணன் டாய்லெட்டுக்கு அருகிலேயே பாய்போட்டு படுத்திருந்தான்.நன்றாக இளைத்துவிட்டான்.நான் பத்துநாட்களுக்குதான் டோஸ் கலந்தேன்.சில மில்லிகிராம்கள் அதிகரித்ததனாலோ என்னவோ 40 நாட்களாக தொடர்ந்து வயிற்றுவலி அவனை படாய்படுத்தியிருக்கிறது.

டாக்டர் ஏதோ "ஃவுட் பாய்சன் ஆகிருச்சு" என்றதாக அம்மா சொன்னார்.கூடவே ஒரு செய்தியையும் சொன்னார்.
"உங்க அண்ணாக்கு வரவர பழக்கமே சரியில்லடா.கண்டதையும் குடிச்சிட்டு இப்பபாரு வயிறு செமிக்கலனு படுத்து கிடக்குறான்.அதான் அவனுக்கு ஒரு கால்கட்ட போட்டுறலாம்னு இருக்கோம்.பொண்ணு தூரத்து சொந்தம்தான்,பேரு அனிதா.உன் காலேஜ்லதான் படிக்குறாடா.அதோ ஹால்ல இருக்குற ஷெல்வுக்குள்ள இருக்குற கவர்குள்ள அவ படம் இருக்கு,உங்கண்ணி எப்படியிருக்கானு பார்த்து சொல்லுடா" என்றாள்.

எனக்கு வெறுப்பாக வந்தது.மறுபடியும் மோதிரத்தை திருக வேண்டுமா என்ற வெறுப்புடன் அந்த கவரை தேடி எடுத்தேன்.அதை திறந்து பார்த்தேன்.சில வருடங்களுக்கு முன் என் அண்ணன் சில்மிஷம் பண்ணியதற்காக அவனை அறைந்த அனிதா மேரி அதில் சிரித்து கொண்டிருந்தாள்.எங்கள் பெட்ச்மேட்தான் அவளும்.நான் அந்த புகைப்படத்தைப் பார்த்ததும் என் முதலாம் காதலிக்கு நன்றி கூறும் விதமாக மோதிரத்தை முத்தமிட்டேன்.

No comments

//]]>