Related posts

Breaking News

Petta: Super Star- One Last Time



"சூப்பர் ஸ்டார்" படமொன்றை கடைசியாக சிவாஜியில் பார்த்தது. அதன்பிறகு ரோபோ, கோச்சடையான்,லிங்கா,கபாலி,காலா மற்றும் 2.0 என ரஜினிகாந்த் அவர்களை வைத்து படங்கள் ரீலிஸானாலும், 'சூப்பர் ஸ்டார்' என்ற அந்த ஜாக்பொட் வாய்ப்பை மேலே குறிப்பிட்ட திரைப்படங்கள் சரியாக பயன்படுத்தவில்லை- எந்திரன் முதலாம் பாகம் ஓரளவு முட்டுக் கொடுத்தாலும் திரைக்கதையில் வெறும் பஞ்சுதான் இருந்தது.

ஆக கார்த்திக் சுப்புராஜ் என்ற பெயரை நம்பி சென்றேன்.காரணம், இது முழுக்க முழுக்க ஒரு ரஜினி படம் என அவர் விளம்பரப்படுத்தியது. அவரது கூற்று வெறும் விளம்பரமல்ல 100% உண்மையும் கூட.

ஆரம்பத்தில் டைட்டில் விழும்போது ஆர்ப்பரிக்க தொடங்கிய ஓசை இறுதிக்காட்சி வரை அடங்கவேயில்லை. கதை,திரைக்கதை,நடிப்பு,வசனங்கள்,நகைச்சுவை காட்சிகள் மிக முக்கியமாக இசை என என்னை திருப்தி செய்த படங்கள் சமீபத்தில் வரவேயில்லை.பெரும்பாலான தமிழ் படங்களில் மேற்கூறிய அனைத்தும் இருக்கும் ஆனால் இந்த படத்தில் அவை எல்லாம் நன்றாக இருக்கின்றன.

இசை, அனிருத்தை தாண்டி இளையராஜா, அமரர்.விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி என பலரின் இசைக் கோப்புக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இசை என்பது எந்த ஒரு காட்சிக்கும் பலம் சேர்க்கும் ஒரு கருவி என்பதால் சாதரணமாகவே பார்ப்பதற்கு நன்றாக உள்ள காட்சிகள், இவ்விசை கோர்ப்புக்கள் சேர்ந்தவுடன், திரையில் ஒரு மாயாஜாலத்தையே புரிகின்றன.பாட்ஷா பட கதை, ஆங்காங்கே 80',90'களின் ரஜினியின் மேனரிசங்கள் மற்றும் தளபதி பட கிளைமேக்ஸ் காட்சியை ஒத்த இறுதிகாட்சி என படம் சென்றாலும், கடைசியில் ஒரு காட்சியில் மேலே கூறிய அத்தனை படங்களுக்கும் நிகராக 'பேட்ட' இருக்குமளவுக்கு ஒரு எண்டிங் அமைத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

முதாலாவது பாதியில் வழக்கமான கமர்சியல் எலிமண்ஸ்ஸுடன் படம் பயணித்தாலும் இரண்டாம் பாதியில் ஃப்ளேஷ் பேக் முடிந்தவுடன் அப்படியே கார்த்திக்கின் படமாக இது மாறிவிடுகிறது. 

ரஜினிகாந்த் அவர்கள் வழக்கமாக 50,60 பேரைக்கூட அசால்டாக அடித்து துரத்துவார். அவர் பால்காரனாக இருந்தாலும் சரி ஆட்டோகாரனாக இருந்தாலும் சரி எத்தனை பேர் வந்தாலும் அடிப்பார், எப்படி என கேட்டால்? காரணமே கிடையாது அடிப்பார் அவ்வளவுதான், ஆனால் இதில் ரஜினிகாந்த் அவர்கள் எப்படி இந்தளவுக்கு சண்டை போடுகிறார் என்பதற்கு காரணம் உள்ளது.ஆரம்ப காட்சிகளில் ஆகட்டும் அல்லது பாடல்களில் ஆகட்டும் ரஜினி அவர்கள் சற்றே தள்ளாடுவது போல் தெரிய "சண்டை காட்சியெல்லாம் எப்படிதான் செய்ய போறாரோ" என நினைத்தேன், 

ஆனால் இதில் முறையாக கராத்தே பயின்றவராக இவரது கதாபாத்திரம் உள்ளதோடு, நுன்சாக் (ச்+ஆ வை அழுத்தி உச்சரிக்க வேண்டும்) எனப்படும் ஆயுதத்தை வைத்து முறையாக ஒரு ப(ர்)வோமன்ஸும் செய்துள்ளார். வயது 68 என்கிறார்கள், சத்தியமாக இவ்வளவு குறுகிய காலத்தில் அந்த ஸ்டண்டை பழகி சரியாக கன்வே செய்வது மிக மிகக் கடினம்.



சிம்ரன்,த்ரிஷா மற்றும் சசிகுமார் ஆகியோருக்கு ஊறுகாய் கதாபாத்திரங்கள் என்றாலும் இதைதாண்டி இவர்களிடம் எதையும் எதிர்பாரக்க வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. எனினும் இளம் நடிகரான சனத்திற்கு ஒரு நல்ல முழுமையான கதாபாத்திரம் என்பதோடு அருமையான வாய்ப்பும் கூட. ஆம், பாபி சிம்ஹாவும் படத்தில் உள்ளார்.

கபாலி மற்றும் காலாவில் பா.ரஞ்சித் கஷ்டப்பட்டு சொல்ல முடியாமல் போன விஷயங்களை இதில் இலகுவாக கார்த்திக் அள்ளி விடுகிறார்.
சாதாரண கதையை எடுத்து நல்ல ட்ரீண்மண்டை கொடுத்து உள்ளார்கள். அதேநேரம் சிவாஜி, ரோபோ போல காற்றடைத்த பையாகவும் இல்லாமல் கதாபாத்திர பிண்ணனிக்காக நன்றாகவே வேலை செய்துள்ளார்கள். 'பேட்டை' என்ற பெயர் வருவதற்கான காரணத்தையும் போகிற போக்கில் சொல்லியுள்ளார்கள்.

படத்தின் இறுதி இருபது நிமிடங்கள் விஜய் சேதுபதியின் கை ஓங்கியிருக்கிறது என்பதோடு விஜய் சேதுபதி படம் பார்ப்பது போலும் இருந்தது என்றாலும் கடைசியில் படம் முடியும் போது " இங்க நான் மட்டும்தான் ஹீரோ" என சூப்பர் ஸ்டார் மற்றவர்களை பொட்டில் அடித்து துரத்துகிறார்.

ஆங்காங்கே கதையில் இருந்து தனித்து நிற்காமல் அரசியல் வசனங்கள் வருகின்றன. நவாசுதீன் சித்திக்கிற்கு ஃப்ளேஷ் பேக்கில் அருமையான ஒரு காட்சியுள்ளது. மேலும், இரண்டாம் பகுதியில் வரும் நடைமுறை காலப்பகுதிகளுக்கான காட்சியமைப்புகள் அப்படியே ஒரு கேங்ஸ்டர் படம் பார்க்கும் உணர்வை தந்தன. ஏனைய படங்கள் போல் அல்லாமல் துணைக்கு ஆட்களையும் வைத்து கொண்டு ரஜினி அவர்கள் சண்டை செய்கிறார் என்பது ஆறுதல்.

குறிப்பாக ஒரு காட்சியில் ஹீரோ எதிராளியை வீழ்த்துவார். அப்போது பிண்ணனியில் ஒரு சிம்போனி ஒலிக்கும். எதிராளி வீழ்வதை பேட்ட  வேலன் பார்த்து ரசிப்பார். வன்முறையை ரசிக்கும்படியாக எடுத்தல் என்னும் நகைமுரணான உத்தியை இதில் கையாண்டுள்ளார்கள்,தரம்.

சூப்பர் ஸ்டாரின் குரல் கொஞ்சம் மழுங்கியுள்ளதுதான், உடலசைவுகளும் முன்போல் இல்லைதான், ஆனாலும் தான் ஏன் சூப்பர் ஸ்டார் என்பதை மீண்டும் ஒரு முறை இந்த படத்தில் நிரூபித்து உள்ளார். 

மேலும் காட்சியமைப்புக்கள்  அத்தனை அழகு. கடைசி சண்டை காட்சியில் துப்பாக்கிச் சூடு நடப்பதை பார்க்கும் போது கிராபிக் நாவல்களில் ஃப்ரேம்கள் அமைந்துள்ள விதமே ஞாபகம் வருகிறது.

படம் பார்க்கும் போதே " ஒரு நல்ல படத்த பார்க்குறோம்" என்ற உணர்வை ஏற்படுத்துகிறது பேட்ட.படத்தின் பலம்,பலவீனம் இரண்டுமே ஒன்றுதான்;  பழைய ரஜினி படங்களில் உள்ள காட்சிகளை ரீ-க்ரியேட் செய்துள்ளார்கள். புதிதாக எடுக்கப்பட்ட மாஸ் மொமண்டுகள் குறைவே. இருப்பினும் சலிப்பு தட்டவில்லை.

கார்த்திக் சுப்புராஜின் கேங்ஸ்டர் டீரிட்மண்ட் தொடங்கியதும் படம் சற்றே ஸ்லோ ஆவது போல் தோன்றினாலும் அது இறுதிக்காட்சிக்கான தயார்படுத்தல் என்பதாகையால் அவ்வளவு பெரிய குறையாய் தெரியவில்லை.மேலும் கதாபாத்திரங்களுக்கான இண்ட்ரோ, சின்னஞ்சிறு பிரச்சினைகள், கதையை வலுவாக நிறுவுதல் பின்னர் கதையின்  முக்கியமான பிரச்சினையை விவரித்தல், அதற்குண்டான ஃப்ளேஷ் பேக் என அழகாக படம் பயணிக்கிறது. ப்ரீ கிளைமேக்ஸ் வரை சரியாக பயணித்தாலும் இடையில் கொஞ்சம் ஓய்வெடுத்த பின்னர்தான் கிளைமேக்ஸிற்கு வருகிறது. இப்பத்தியின் ஆரம்பத்தில் சொன்னது போல அது இறுதிகாட்சிக்கான தயார்ப்படுத்தல் என்பதால் பெரிய சிக்கலில்லை.

ஆக இதைதாண்டி ரஜினியிசத்தை வெளிக்காட்டும் ஒரு படத்தை எடுப்பது கடினம் என்பதோடு, அபூர்வ ராகங்கள் தொடங்கி பேட்ட வரை என்று சொல்லும் அளவுக்கு சூப்பர் ஸ்டாரின் கேரியருக்கு முழுமை சேர்ப்பதாக இந்த படம் உள்ளது. ஆக என்னை பொறுத்தவரை இது Super Star-One Last Time.




6 comments:

  1. அருமையான விமர்சனம் கவிந்த்

    ReplyDelete
  2. Good review bro...
    //கடைசி சண்டை காட்சியில் துப்பாக்கிச் சூடு நடப்பதை பார்க்கும் போது கிராபிக் நாவல்களில் ஃப்ரேம்கள் அமைந்துள்ள விதமே ஞாபகம் வருகிறது.//

    Exactly!!
    & That hostel fight seq,candle lights too... :)

    ReplyDelete

//]]>