Related posts

Breaking News

2.0




திறங்க ளாகியெங் கும்செய்களூடுழல் புள்ளினங்காள்,
சிறந்த செல்வம் மல்கு திருவண்வண் டூருறையும்,
கறங்கு சக்கரக் கைக்கனி வாய்ப்பெரு மானைக்கண்டு,
இறங்கி நீர்தொழுது பணியீரடியே னிடரே.


நாலாயிர திவ்ய பிரபந்தந்தில் வரும் இந்த பாடலின் பொருளின் சாராம்சம் யாதெனில்  விளைச்சல் நிலங்களை முற்றிலும் நிரப்பும் வண்ணமாக கூட்டங்கூட்டமாக திரியும் பறவைகளே பெருமாளிடம் அடியேன் படும் துன்பத்தை எடுத்துரையுங்கள் என்பதாகும்.

சங்கரின் இயக்கத்தில் வந்த ஜென்டில்மேன்,இந்தியன்,அந்நியன் போன்ற படங்களில், நல்லவனாக இருந்து சமூக சீர்கேடுகளாலும் சட்ட ஒழுங்கீனங்களாலும் மனம் குலைந்து வெறுப்பின் மிகுதியில் சமூகத்தை சீர்த்திருத்த வேறுவழியின்றி வன்முறை கையில் எடுத்த Anti-Heroகளை நாம் பார்த்து இருப்போம்.இவர்கள் அனைவரும் அஹிம்சா வழியில் மக்களை திருத்த பாடுபடுவர்கள் இருந்தும் விளைவு பூச்சியம் என்பதால் 'முள்ளை முள்ளால் எடுக்கும்' பாணியை கையாள்வார்கள்.

இங்கே பக்ஷிராஜனும் அப்படித்தான். பறவைகளின் நலனுக்காக மக்களிடம் உபதேசிக்கிறான், இறங்குகிறான், மன்றாடுகிறான். ஒரு கட்டத்தில் ஒடிந்து போகிறான், ஆனால் இவனால் 'இந்தியன் தாத்தா' போல் நேரடியாக சண்டை செய்ய முடிவதில்லை. இறுதியில் அத்தனை மனிதர்கள் மீதுமான கொலை வெறியுடன் இறந்தும் போகிறான். அவன் கேட்டதெல்லாம், நமக்கு மூதாதையரான பறவைகளுக்கும் நிம்மதியாக வாழ இடமளியுங்கள் என்பதுதான். அதைகூட அவர்களால் (நம்மால்) செய்ய முடிவதில்லை.

பின்னர் அவனது ஆத்மா-நமக்கு ஆவியும் வேண்டாம் ஆராவும் வேண்டாம்- ஏனைய இறந்து போன பறவைகளின் ஆத்மாவுடன் கலக்கிறது, எதிர்மறையான சக்தியாக உருவெடுக்கிறது. இப்பொழுது அவனது அகராதியில், தான் இரங்கி மன்றாடியும் தன் பேச்சை கேளாது சொந்த இலாபத்திற்காக சக உயிர்களை கொல்லும் நாம் அனைவருமே தண்டிக்கப்பட வேண்டியவர்களாகிறோம்.

கண்டிப்பாக இங்கே சங்கரின் யோசனை நன்றாகவே உள்ளது. இந்தியன் மற்றும் அந்நியனில் இலஞ்சம் வாங்குபவர்களை கொன்ற குவித்த போது அமைதிப்பட்ட மனம் இங்கே நம்மையும் குற்றஞ்சாட்டும் போது ஏற்க மறுக்கிறது, ஆனாலும் உண்மை உண்மைதான்.பிரச்சினை என்னவெனில் அதை இன்னும் அழுந்தந்திருத்தமாக கண்முன்னே கொண்டு வரும் படியான காட்சிகளை அமைக்காததுதான்.

எந்திரன் என்ற திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளுக்கு சுஜாதாவினுடைய எழுத்து ஆற்றிய பங்கு இன்றியமையாதது. அவர் மறைந்த பின்னர் உள்ள வெற்றிடம் எழுத்துலகிலும் சங்கரின் திரையுலகிலும் அப்பட்டமாக தெரிகிறது'-என் இனிய இயந்திரா' என்ற சுஜாதாவின் நாவலில் வரும் கதாநாயகியின் பெயரை இங்கே எமிக்கு சூட்டி மரியாதை செலுத்தியுள்ளார்கள் என நம்புகிறேன்.

'எந்திரன்' என்னை பொறுத்த வரையில் ஒரு வலுவற்ற ரஜினி படம். ரஜினி ரோபாவாக நடித்திருக்க வேண்டிய இடத்தில் ரோபோ ரஜினியானால் எப்படியிருக்கும் என்ற கூத்தை திரையிட்டு காட்டிய படம். இந்த அவலம் இத்திரைப்படத்திலும் தொடர்கிறது.

மேலும்,சிட்டி என்ற கதாபாத்திரம் அடிப்படையில் நல்ல குணங்களைக் கொண்டது. அதேபோல், பக்ஷிராஜனின் கருத்தும் ஏற்கக்கூடியது. ஆகவே சிட்டி பக்ஷிராஜனை வீழ்த்துவது முறையாகாது என்பதால், ரெட் 'சிப்' மாட்டிய சிட்டி 2.0வை அவனை தோற்கடிக்க பயன்படுத்தியுள்ளார்கள் என்ற கொன்சப்ட் நன்றாக உள்ளது. ஆனால் அங்கேயிருக்கும் பிரச்சினை "டிரான்ஸ்ஃவோர்மர்ஸ்" படம் போல நீளும் இறுதிக்காட்சிதான் மற்றும் பக்ஷியின் ஆத்மாவை அடைத்து வைத்து, அதை சைடு வில்லன் வந்து வெளியே திறந்துவிட்டு கிளைமாக்ஸ் காட்சிக்கு வழி நடத்தியதென்பது பேய் படங்களில் பூசாரி குடுவைக்குள் ஆத்மாவை அடைத்து வைத்து இறுதிகாட்சிக்கு முன்னர் அதை யாராவது திறந்து விட பேய் மேலும் அதிக பலத்தோடு மீண்டும் வருவதை ஞாபகமூட்டியது.

நனறாக யோசித்து பாருங்கள், காஞ்சானா படத்தில் இதே உத்தியை நாம் வேறுவடிவில் குறைந்த பட்ஜட்டில் பார்த்தோம் அல்லவா-"குட்டி சிட்டி கெட்ட சிட்டிடா" போன்ற வசனங்களும் மிஸ்ஸிங்.மேலும் சில நேரங்களில், இந்த ரோபோ சூட்கள் பள்ளிக்குழந்தைகளின் Fancy Dress Competition நாட்களை நினைவூட்டியது

இசை ஏ.ஆர்.ரஹ்மானா என்ற சந்தேகத்தை எழுப்ப தவறவில்லை.வழக்காமாக கோலி போல் விளாசும் ரஹ்மான் இந்த போட்டியில் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த நல்ல பேட்ஸ்மனை உருவகித்து நிற்கிறார்.

திரைக்கதையில் ஆங்காங்கே கையாளப்பட்ட இருண்ட தொனி பொருட்களான இயலாமை, இரக்கம் இல்லாமை, அநீதி, சுயலாபம், கண்டுகொள்ளாமை போன்ற விடயங்கள் மனதை தாக்கினாலும் அது மற்றைய சங்கரின் திரைப்படங்கள் போல் அவ்வளவு உருக்கமானதாக இல்லை.

கிராபிக்ஸில் குறையிருக்கிறது என்றாலும் முப்பரிமாண தொழிற்நுட்பம் அதை லாவகமாக மறைத்துவிடுகிறது. ஆங்கில படங்களை விட அதிக அடர்தியான முப்பரிமாண காட்சிகள் கண்ணையும் மனதையும் கொள்ளையடிக்கின்றன. மற்றபடி லிப் சிங் ஒட்டவில்லை என  குறை சொல்ல வேண்டுமென குறைகூறுபவர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கள்.

கெட்ட சிட்டி மற்றும் குட்டி சிட்டி ஆகியோரின் ஐயரவான நடிப்பு ஒரு மாதிரியாக உள்ளது. ஒருவேளை தீவிர ரஜினி ரசிகர்களுக்கு இது பிடிக்கலாம்.மேலும் அக்ஷய் குமாரை பாடாய்படுத்தியுள்ளார்கள் என்பது மேக்கிங் வீடியோவிலும் திரைப்படத்திலும் திரையை தாண்டி தெரிகிறது.



ஒரு சிலர் (அல்லது பலர்) இன்னும் நீரூபணமாகாத ஆரா,அலைக்கற்றையினால் ஏற்படும் பாதிப்புக்கள் ஆகிய விடயங்களைக் கொண்டு எப்படி Sci-fi திரைப்படம் எடுக்க முடியும், இவை நம்பும் படியாக இல்லையே என வாதிடுகிறார்கள். ஏலியன்கள் இருப்பது கூடதான் நிரூபிக்கப்படவில்லை, ஆனால் Sci-Fi மூவிக்கள் எடுக்கப்படவில்லையா அல்லது மக்கள் பார்த்து ரசிக்கவில்லையா...

சினிமாவிற்கு என்றுமே எல்லையில்லை, வரையறைகள் இல்லை.எடுத்துக்கொண்ட தொனிப்பொருளை அவர்களது கற்பனைகளை திறம்பட நிறுவினாலே போதுமானது.This is Beyond Science-வசீகரன்

சங்கரின் எண்ணம் சரியானதுதான், ஆனால் கேவலம் மூன்றாம் வகுப்பு ரயில் இருக்கைகாகவே அடித்து கொண்டு பக்கத்தில் உள்ளவர்களை தள்ளிவிடும் குணம் படைத்த எங்களிடம் பறவைகளின் வாழ்வை பற்றி கருத்திற் கொள்ள சொல்லியிருக்கிறார். கேட்போமா நாங்கள்? ஒரு போதும் இல்லை. ஒருவேளை இந்த உலகின் கடைசி மனிதன் இறக்கும் போது சிந்தித்து பார்ப்பானாயிருக்கும்.




4 comments:

//]]>