Related posts

Breaking News

வல்லவனும் வில்லனும்


வணக்கம் நண்பர்களே..!
"வல்லவர்கள் வீழ்வதில்லை" என்ற காமிக்கதையையும் தாண்டி டெக்ஸை பற்றியும் அலசும் ஒரு பதிவாக இது இருக்கும்.என் ஏனைய பதிவுகளை போல் இதிலும் No Spilers.

வறுத்த பீன்ஸ் கறி சாப்பிட்டு நெடிய நாட்களை கடந்து இருந்த நிலையில் வந்த கதைதான் வல்லவர்கள் வீழ்வதில்லை.
                 
         

டெக்ஸ் கதைகளில் அவருக்கு நிகரான கதாபாத்திரங்கள் அமைவது குறைவு.வில்லன்கள் கூட பல நேரங்களில் 'மக்கு மண்டோதரிகள்' ஆகவே இருப்பார்கள்.ஆனால் இக்கதையில் டெக்ஸை மிஞ்சிய ஒரு பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க ஓர் விடயம்..!

ஒரு காலத்தில் பிரித்து ஆளுபவர்கள் ஆதிக்கத்தின் கீழ் (நம்மை போலவே) அயர்லாந்து இருந்து வந்தது.அவர்களினால் சிறை பிடிக்கப்பட்டு சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்படும் தன் ஐரிஷ் நண்பனை காக்க வருகிறது ஒரு புரட்சி குழு.பல தாக்குதல்களுக்கு பின் அவர்கள் தம் நண்பனை சிறை மீட்டு அழைத்து செல்கின்றனர்.ஆனால் அவர்களின் போதாத காலம்..காவலர்கள் இடையிலேயே வந்து அவர்களை சுற்றி வளைக்கிறார்கள்.அதில் இணைப்பிரியா இரு நண்பர்கள் தனி வழியில் தப்பி ஓடுகின்றனர்.தாம் செல்லும் திசையில் மிக அருகாமையில் ஒரு சரக்கு ஏற்றி செல்லும் ரயில் வருவதைக் கண்டு அதில் ஏறி தப்பி விடலாம் என நினைக்கின்றனர் அவ்விருவரும்.நினைப்பதெல்லாம் நடந்து விடுமா என்ன?குறி தவறாத ஒரு குண்டுக்கு இழக்காகி வீழ்ந்து விடுகிறான் அதில் ஒருவனான 'டான்னீ'.
தம் நண்பனை காப்பாற்ற அருகதை அற்றவனாக குற்ற உணர்வுடனும் கோப உணர்வுடனும் தப்பி செல்கிறான் ஷான் என்னும் மற்றையவன்.

பத்து வருடங்கள் கழிகின்றன.இப்போது செனோர் குடியரஸ் என்பவனுடன் சேர்ந்து ஆயுத வியாபாரம் செய்யும் ஒருவனாக மாறி விட்டான் ஷான்.ஆனாலும் விதி அவனை விடுவதாக இல்லை.சூழ்ச்சி கடலில் மூழ்கி சிறையில் தள்ளப்பட்டு அங்கு பல சித்திரவதைகளுக்கு உள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பி வெளியே வருகிறான்.அடுத்த அவனது நோக்கம் தான் என்ன?அவன் வைத்திருக்கும் திட்டங்கள் என்ன? என்பதையும் மூன்று சத பக்கங்களிற்கு நீட்டி முழக்குவது தான் மீதி கதை.
கதையில் டெக்ஸின் பங்கு பற்றி நான் கூறவில்லை.கூற தேவையில்லை.டெக்ஸ் மற்றும் அவரது சகாக்கள் தோன்றும் காட்சிகள் அலட்டலாகவும் வலிந்து தினிக்கப்பட்டவையாகவும் தோன்றுகின்றன.டெக்ஸை நீக்கி விட்டு கதையில் சிற்சில மாற்றங்களை செய்து இதனை ஒரு கிராபிக் நாவலாக கூட படைத்திருக்கலாம்.டெக்ஸ் ரசிகனான நான் இப்படி கூறுவதற்கு காரணம் இருக்கிறது.

யதார்த்தங்களை விரும்பும் இப்பருவத்தில் டெக்ஸ் கொஞ்சம் ஓவராக போகிறாரோ எனத் தோன்றுகிறது.அவரது தகைமைகளைக் கொஞ்சம் ஆராய்வோம்.
அவர் அறிவாளியாக காட்டப்படுவதாக நீங்கள் நினைக்கலாம்.ஆனால் பெரும்பான்மையான கதைகளில் அவர் மதியூகியாக காட்டப்படவில்லை மாறாக அவரை சுற்றியிருப்பவர்களே மூடர்களாக காட்டப்படுகிறார்கள்.
குறிப்பாக ஓரு ஸ்பைடர் மேனையோ,பேட் மேனையோ...ஏன் டைகரையோ கூட எடுத்துக் கொள்ளுங்கள்.இவர்களின் எதிரிகள் இவர்களை விட பன்மடங்கு திறமையானவர்களாக இருப்பார்கள்.மிகவும் கடினப்பட்டு ஒவ்வொரு படியாக முன்னேறி வந்து தமது வில்லன்களின் கேலி,கிண்டல்கள்களுக்கு உள்ளாகி இறுதி கட்டத்தில் அதாவது தக்க தருணத்தில் தான் வில்லன்களை வீழ்த்துவார்கள்.இதனால் நமக்கு ஹீரோவின் மேல் ஒரு நல்ல அபிப்பிராயமும் வில்லனின் மேல் கோபமும் ஏற்படும்.

டெக்ஸூக்கு கூட இது போன்ற உன்னதமான கதைகள் அமைந்திருக்கின்றன.அவற்றை நாம் கொண்டாடியும் இருக்கிறோம்(#1தலைவாங்கி குரங்கு முதல் சமீபத்தில் வந்த நில் கவனி சுடு வரை பல உதாரணங்கள் உள்ளன).நூறு பேர் வந்தாலும் எதிரத்து நிற்பவராகதான் இருந்தார் டெக்ஸ் ஆனால் சமீபத்தில் வெளியிடப்பட்ட கதைகளில் நூறு பேர் கைகுண்டு,துப்பாக்கி சகிதம் வந்தாலும் புல்லட் புரூவ் கூட இன்றி ஒற்றை துப்பாக்கியுடன் எதிர்த்து அவர்களை வெல்வதாகவே காட்டப்படுகிறது(இச்சண்டையில் டெக்ஸின் தொப்பி கூட கீழே விழுந்திருக்காது).
இவ்வாறான செயல்கள் டெக்ஸை நம்மில் இருந்து பல மைல்கள் அந்நியப்படுத்துகின்றன.இன்னும் நான்  பல நாட்கள் காடு,மேடு,சோலை,பாலை என்று பயணம் செய்தாலும் தாடி கூட வளர்ந்திருக்காத லொஜிக் மீறல்களை பறறி குறிப்பிட தொடங்கவில்லை.இது போன்ற சிற்றசில விதி மீறல்களை மனம் ஏற்றுக்கொள்ளும்.ஆனால் "பலூன் பறக்காஸ்" போன்ற மிக கொடிய காட்சிகளை மனம் ஏற்காது அல்லவா???
அதேபோல் தான் இதுவும்.அதுவும் இந்த கதையில் டெக்ஸ் பல இடங்களில் வில்லன் கதாபாத்திரம் போன்று தோன்றியது நான் டெக்ஸ் மீது வைத்திருந்த அந்தஸ்தை அவரே குறைத்து கொண்டதனால் தானோ என்னவோ..!
பேட் மேன்,ஸ்பைடர் மேன் போன்ற சிறுவயது முதல் எனது பிரியத்திற்கு பாத்திரமான எந்தவொரு நாயகர்களும் காமிக்ஸிலும் சரி திரைப்படங்களிலும் சரி இவ்வாறு காட்டப்படவில்லை எனும் போது டெக்ஸை மட்டும் தடம் மாறி போவது மிகவும் வேதனைக்குரியது.
இது கதை மாந்தர்களின் காலவோட்ட சுழற்ச்சியால் ஏற்பட்ட விளைவா? என்பது தெரியவில்லை..!

A.P:- டெக்ஸ் பற்றி குறை கூறியதற்காக "சீ நா பா" மற்றும் பல காமிக்ஸ் உலக நண்பர்களிடம் பெறும் வாக்குவாத்தில் நான் ஈடுபட்டிருக்கிறேன் என்பது குறிப்பிடத்தக்கது..!

2 comments:

 1. உங்கள் பார்வையில் உங்கள் கருத்து
  எப்படி இருப்பினும்
  டெக்ஸைப்பற்றிய கருத்துக்கனை ஏற்றுக்கொண்டாலும்
  கிட்டத்தட்ட 700ஐ நெருங்கி வந்துள்ள கதைகளில்
  இதுவரை தமிழில் வந்துள்ள கதைகள் சொற்பமே
  இதை வைத்து கருத்துகூறுவது தவறு என்பது என் கருத்து

  பேட்மேன் போன்றவர்களுடைய கதைகளில் அதிகம் போனால் 2 அல்லது 4 ற்குள்தான் வில்லன்களே இருப்பார்கள்

  ஆனால் டெக்ஸ் கதைகளில் அப்படி இல்லையே
  கண்ணுக்குத் தெரியாத எதிரிகளே அதிகம்
  உதாரணம்

  கழுகு வேட்டை
  மந்திர மண்டலம்
  தலை வாங்கி குரங்கு

  மற்றும் மமதியூகியாக கலக்கிய
  பழிவாங்கும் பாவை
  பழி வாகும் புயல்
  பழிக்குப பழி
  பவளச்சிலை மர்மம்

  இன்னும் சில உண்டு


  ReplyDelete
  Replies
  1. டெக்ஸ் இந்த இந்த கதைகளில் மதியூகியாகவும் இந்த இந்த கதையில் கண்கனா எதிரிகளையும் எதிர்கிறார் என்று கூறியுள்ளீர்கள்.அதைதான் நானும் கூறுகிறேன் அப்படிபட்ட கதைகளுக்கு சொந்தகாரர் Track மாறி செல்கிறார் என்பதை சுட்டிக்காட்டவே இந்த பதிவு.அடுத்து பேட்மேன் கதைகளில் 2-4 வில்லன்கள் தான் இருப்பார்கள் என்று நீங்கள் கூறுவது வேடிக்கையானது.பேட்மேனின் கேம் ஒன்றை பற்றி நான் எழுதியுள்ள விமர்சனத்தின் இறுதியில் பாருங்கள் பேட்மேனின் பாதி வில்லன்கள் அடங்கிய புகைப்படம் ஒன்று காண கிடைக்கும் அல்லது இங்கே க்ளிக் செய்து பார்க்கவும்..!

   Delete

//]]>