Related posts

Breaking News

King Kong(ஞாபகங்கள்)


இன்று,Kong-Skull Island திரைப்படம் வெளிவந்து வெற்றிநடைபோட்டுக் கொண்டிருக்கிறது.விமர்சகர்களும் கூட ஆதரவான கருத்துக்களையே தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர்.2005/06ம் ஆண்டுவாக்கில் கிங் காங் திரைப்படம் வெளிவந்த போது எனது அம்மா,அப்பாவோடு சென்று அந்த படத்தை பார்வையிட்டது எனக்கு இப்போதும் நன்றாக ஞாபகத்தில் உள்ளது.அந்த ஞாபக அலைகளின் தொகுப்பைபையே கீழே எழுதியுள்ளேன்.என் வாழ்நாளில் இது ஒரு மறக்கமுடியாத நாளும் கூட.காரணத்தை இறுதியில் சொல்கிறேன்.

வழக்கமான ஞாயிற்றுக்கிழமையாய்தான் அன்றைய நாளும் அமைந்திருக்க வேண்டும்.ஆனால் பத்திரிகையில் வந்த விளம்பரம் ஒன்று அந்த நாளை மறக்கமுடியாததாக மாற்றும் என்று நான் அப்போது அறிந்திருக்கவில்லை.அப்பா வாங்கி வந்திருந்த வீரகேசரி பத்திரிகையை புரட்டிக்கொண்டிருந்தேன்.அதில் ஏதோ ஒரு பக்கத்தில் ஓரமாக ஒரு விளம்பரம்.King Kong என்ற தலைப்பில் பிரமாண்டமான ஒரு குரங்கின் படம் போடப்பட்டு அருகில் "இன்று மட்டுமே காட்சி காண்பிக்கப்படும்" என்று ஒரு சிறிய இடத்தில் முடிந்தளவு பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருந்தது.எனக்கு அந்த விளம்பரத்தில் இருந்த Peter Jackson என்ற பெயரும் பெரிய சைஸ் மனித குரங்கும் அப்போது பரிச்சயமில்லை.இருந்தாலும் இந்த ஏழு வயது சிறுவனை அந்த விளம்பரம் ஈரக்க தவறவில்லை...வழக்கமாக நான் "படம் பார்க்க திரையரங்கிற்கு செல்வோமா?" என்ற கோரிக்கையை பொதுவில்(அப்பா,அம்மா) முன்வைப்பதில்லை.பலத்த எதிர் விளைவுகள் கிடைக்க பெறலாம் என்பதே இதற்கு காரணம்.என்றாலும் என் மனது அன்றைய காலைப்பொழுது முழுவதும் அந்த விளம்பரத்தையே அசைப்போட்டுக் கொண்டிருந்தது.வேறு வழியில்லை கேட்டு விடுவோம் என தீர்மானித்தேன்.துணைக்கு பத்திரிகை விளம்பரத்தை கையில் எடுத்துக் கொண்டவாரே இருவரிடம் தயங்கி தயங்கி சென்று கேட்கலானேன்."ம்மா,ப்பா பேப்பர்ல ஒரு படத்தோட அட்வெர்டீஸ்மண்ட பாத்தேன்,அந்த படத்துக்கு போவமா?"என்றேன் சற்றே கெஞ்சலான முகத்துடன்.எனக்கு நேரிடையாக விஷயங்களை கேட்டுதான் பழக்கம்.அது அவர்களுக்கும் தெரியும்.

கையில் இருந்த பத்திரிகை விளம்பரத்தை காட்டினேன்."இன்னைக்குதான் கடைசியாம்,நாமதான் தியேட்டருக்கு போறதே இல்லையே,இன்னைக்கு ஒருக்கா போவமா?" என்றேன்.முகத்தில் கெஞ்சல் இருமடங்காக அதிகரித்திருந்தது.

வழக்கமாக நாங்கள் படம் பார்ப்பதற்கு திரையரங்கிற்கு செல்வதில்லை.அதிலும் ஆங்கில படத்திற்கு என்றுமே சென்றதில்லை.

நான் கையில் வைத்திருந்த பத்திரிகை விளம்பரத்தை மேலிடத்தில் கேட்கும்போது கோரிக்கை நிராகரிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதையே உணர்ந்தேன்.

விநாடிகள் வேகமாக கடந்துகொண்டிருந்தன.அப்பாவுக்கு  இதிலெல்லாம் பெரிதாக ஆர்வமிருப்பதில்லை.அதுமட்டுமல்லாமல் அம்மா,அப்பா இருவருமே ஏனைய தினங்களில் வேலைக்கு சென்றுவிடுவதால் அன்று மட்டுமே அவர்களுக்கு ஓய்வுநாள்.கோரிக்கை மறுக்கப்படுவதற்கான சாத்தியங்களே அதிகமிருந்தது.

அப்பா புன்சிரிப்புடன் என்னை பார்த்தார்."சரி போவம் ரெடியாகு என்றார்".அம்மாவும் அதைதான் சொன்னார்கள்.நான் லேசாக கிள்ளிப்பார்த்து நேரத்தை கடத்திக்கொணடிருக்கவில்லை.
வேகவேகமாக நான் தயாரானேன் அவர்களும் கூட...மூவரும் ஒன்றாக புறப்படலானோம்.

அப்போது எங்களிடம் கார் இல்லை.பேருந்தா,முச்சர வண்டியா அல்லது அந்த பஜாஜ் பாக்ஸரா,எதில் பயணித்தோம் என்று ஞாபகமில்லை.ஆனால் வழக்கத்தை விட வேகமாக நாம் சாலையில் பயணித்துக்கொண்டிருந்தோம்.அன்றைய தினம் ஞாயிறுக்கிழமை என்பது கூட இதற்கு காரணமாக இருக்கலாம்...

01.30மணிக்கு காட்சி போலும்...நாம் சற்று முன்னரேயே வந்து விட்டோம்.ஆங்கில படம்தான் என்றாலும் மக்கள் கூட்டத்திற்கு குறைவிருக்கவில்லை.குடும்பம் சகிதாமாகவே நிறைய பேர் வந்திருந்தனர்.கூட்டமாக இருந்தாலும் டிக்கட் இலகுவாக கிடைத்துவிட்டது.உள்ளே சென்றோம்.மதிய உணவு வேறு இன்னும் சாப்பிடவில்லை என்பதால் இருவரையும் அழைத்துச் சென்று கேண்டீனில் நல்ல வேட்டு வேத்தேன்.அப்படியே கையில் கொஞ்சம் திண்பண்டங்களையும் அள்ளிக்கொண்டு உள்ளே சென்றேன்.படம் தொடங்குகிறது.முற்றாக ஆங்கிலத்தில்தான் படம் செல்கிறது.அப்போது எனக்கு 7 வயது மட்டுமே.தமிழும் ஆங்கிலமும் அரைக்குறையாக சேர்ந்துதான் எனக்கு கதைத்து, கேட்டு பழக்கம்(இப்போது வரை அப்படிதான்).ஆயினும் படம் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை எனக்கு நன்றாக புரிந்தது.அதற்கு முக்கிய காரணம் அதன் அருமையான திரைக்கதைதான் என்பதை பின்னர்தான் நான் அறிந்து கொண்டேன்.

ஒரு குழு திரைப்படம் எடுப்பது சமபந்தமாக ஒரு தீவிற்கு பயணப்படுகிறது.அங்கே புது வகையான கொடிய மிருகங்களிடம் அக்குழு சிக்கி விடுகிறது.தப்பி ஓடும் கதாநாயகியை,ஒரு பழங்குடி இனம் தமது கடவுளுக்கு பலியிடுவதற்காக கடத்திவிடுகிறது.அங்கே வரும் நமது நாயகன் கிங்காங்(பழங்குடியினரின் கடவுள்) கதாநாயகியை தூக்கி கொண்டுசென்றுவிடுகிறது.
குழுவில்,தாக்குதலில் இருந்து தப்பிப்பிழைத்த ஏனையோர் கதாநாயகியை தேடிப் புறப்படுகின்றனர்.அவர்கள் தேடி அலைந்து கொண்டிருக்கும் காலப்பகுதியில் கிங் காங்கிற்கும் கதாநாயகிக்கும் இடையில் ஒரு மெல்லிய அன்பு வளர்ந்து விருட்சமாகிக் கொண்டிருக்கிறது.இப்படியாக இடைவேளை வரை எந்த குழப்பமும் இல்லாமல் தெளிவாக சென்றது படம்(அந்த டைனோசரஸ் vs கிங் காங் சண்டையை மறக்க முடியுமா)

இடைவேளைவிடும் முன்பே அத்தனை திண்பண்டங்களையும் உண்டு முடித்து விட்டேன்.அதனால் இடைவேளையில் ஐஸ்கீரிம் வாங்கிதரப்பட்டது.அதை கையில் எடுத்தாவாறே அங்குமிங்கும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்த போது எனது பாடசாலை தோழன் ஒருவனை கண்டேன். அவனுக்கு கை காட்டிக்கொண்டிருந்த அதே நேரம் தியட்டரில் மணியடித்தது,படம் பார்க்கும் ஆர்வத்தினால் அருகில் சென்று கதைக்கவில்லை.

இடைவேளைக்கு பின்னர்

கிங்காங்கை கைது செய்து தங்களுடைய நகரத்திற்கு அழைத்து வருவார்கள்.அது அங்கிருந்து தப்பியோடி நகரில் நாசம் விளைவுக்கும்.இதனால் அதனை கொல்வதற்கு பாரிய அளவிலான படையினருக்கு உத்தரவிடப்படும்.கிளைமாக்ஸில் கிங்காங் ஒரு உயரமான கட்டிடத்தின் மீது ஏறி தன்னை காப்பாற்றிக்கொள்ள தன்னை தாக்குபவர்கள் மீது எதிர் தாக்குதல் நடாத்தும்.கதாநாயகியும் அந்த களேபரத்தில் கட்டிடத்தின் உச்சிக்கு ஏறிவிடுவார்.மேல இருந்து 'சுட வேண்டாம்" என நாயகி கூச்சலிட்டுக் கொண்டிருப்பார்.இறுதியாக ஒரு பெரிய அடி கிங்காங் மீது விழும்.அது கட்டிடத்தில் இருந்து அப்படியே ஸ்லோ மோஷனில் கீழே விழுந்து இறந்துவிடும்.நான் கவலையுடன் பார்த்த ஒரு காட்சி அது(பின்னாட்களில்தான் தெரியும் Titanic படத்தின் இறுதி காட்சிக்கும் இதற்கும் ஒரு தொடர்பு இருக்கிறதென்று).


படம்முடிந்து வெளியே வந்தோம்.சினிமாவுக்கு மொழியில்லை என்பதை நான் அன்றுதான் நேரடியாக உணர்ந்தேன்.இனி எப்போதும் அனுபவித்திட முடியாத சினிமா அனுபவம் அது.இன்றுவரை என் வாழ்நாளில் ஒரு மறக்க முடியாத நாளாக இது உள்ளது.அதற்கு காரணம் கிங்காங் திரைப்படம் மட்டுமல்ல.நான் அப்பா,அம்மாவுடன் ஒன்றாக இருந்து திரையரங்கில் கடைசியாக பார்த்த படம் King Kong என்பதும்தான்...!

4 comments

jscjohny said...

பலரது எண்ணங்களில் பதிந்து நின்றவன் காங். எனக்கு 1933 முதல் வந்த அனைத்து கிங்காங் படங்களையும் பற்றி தமிழில் வாசிக்க ஆசை. முயற்சி செய் கவிந்த். கடைசியாகத் தெரிவித்த தகவல் கொஞ்ச நேரம் கலங்கடித்து விட்டது. என் தந்தையாருடன் ஸ்பைடர் மேன் டோபி மாகுயிர் நடித்த படம்தான் இறுதியானது. முன்னர் நிறைய சேர்ந்து கண்டு மகிழ்ந்தோம். ம்ஹ்ம்.. அது ஒரு கனாக் காலம்.

jscjohny said...

காங் திரைப்படத்தை நேற்று மகனுடன் பார்த்துக் கொண்டிருந்தபோது நாம ரெண்டுபேரும் தனியாக வந்து பார்த்த முதல் படம் இதுதான்ப்பா என்றான் என் மைந்தன். வரலாறு திரும்பவும் எழுதப்படுகிறது இல்லை?

Kavind Jeeva said...

1)ஆம் நண்பரே,"இந்த தருணம் நம் வாழ்வில் இனிமேல் வராது" என்பதை அனுபவித்துக்கொண்டிருக்கும் போது நாம் உணருவதில்லை.பிற்காலத்தில் யோசித்துப் பார்க்கும் போதுதான் தெரியவருகிறது.கவிஞர் நா.முத்துகுமார் அவர்கள் பாடல் வரி ஒன்றில் இவ்வாறு எழுதியிருப்பார்.
"இந்த நிமிடம்தான் இன்னும் தொடருமா...கேட்கிறேன்" என...
2)கிங்காங் பற்றி மட்டுமல்ல பல விடயங்களைப் பற்றி எழுத வேண்டும்...நேரமும் மனதும் ஒரே இடத்தில் குவியும் போதுதான் அது நடக்கும்..!

jscjohny said...

பலரது எண்ணங்களில் பதிந்து நின்றவன் காங். எனக்கு 1933 முதல் வந்த அனைத்து கிங்காங் படங்களையும் பற்றி தமிழில் வாசிக்க ஆசை. முயற்சி செய் கவிந்த். கடைசியாகத் தெரிவித்த தகவல் கொஞ்ச நேரம் கலங்கடித்து விட்டது. என் தந்தையாருடன் ஸ்பைடர் மேன் டோபி மாகுயிர் நடித்த படம்தான் இறுதியானது. முன்னர் நிறைய சேர்ந்து கண்டு மகிழ்ந்தோம். ம்ஹ்ம்.. அது ஒரு கனாக் காலம்.

//]]>